ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

குறள் 1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
ஆ - ā   s. an ox, a cow, பசு; 2. soul, ஆத்மா.;  3. [T.āvu, K. M. ā.] Female of the ox, the sombarand the buffalo; பெற்றம், மரை, எருமை

ஆவிற்கு - பசுவிற்கு 

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

இரப்பினும் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

நாவிற்கு - நா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ); சொல்; நடு; மணிமுதலியவற்றின்நாக்கு; தீயின்சுடர்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு.

இரவின் - இரவு - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

வந்தது - வருதல் 

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
பசுவிற்கு என்று நீரை பிறரிடம் யாசித்தாலும் அது போன்று இகழ்ச்சி நமது நாவிற்கு வேறு இல்லை. ஆதலால் யாசித்தல் என்பது மிகுந்த இகழ்ச்சியான ஒன்று. அதை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 
 
ஏன் பசுவை இங்கே குறிப்பிடுகிறார் என்றால் பசு பால் என்னும் பயனை தரக்கூடியது. அப்பாலை பெற்று விற்று கடனை அடைத்துவிடலாம். ஆதலால் கடனை அடைத்துவிடலாம் என்றால் கூட யாசிக்காதே என்று கூறுகிறார்.  

அடைத்துவிடலாம் என்றால் ஏன் யாசிக்க வேண்டாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்? ஏனெனில் யாசித்து முன்னேறி அடைக்கலாம் என்ற ஒரு குறுக்கு வழி இருந்தால் யாசிக்காமல் அடைக்கும் (சற்று சிரமமான) வழிகளை ஒருவர் தேட மாட்டார். யாசிப்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். சோம்பிவிடுவார்கள். சேமிக்க மாட்டார்கள். தன் நிலை அறியாமல் அகல கால் வைப்பார்கள். ஆதலால் தான் யாசிப்பதை இகழுகிறார் திருவள்ளுவர். 

இது இல்லறத்தை நடத்துபவர்களுக்கு மிக மிக பொருந்தும். ஒருநாட்டின் ஆட்சியில் எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனெனில் முன்னேறும் நாடுகள் உலக வங்கியில் இருந்து கடன் பெற்றே முன்னேறுகின்றன. ஆனால் ஓர் அளவு வளர்ந்துவிட்ட நாடுகள் கடன் வாங்கக்கூடாது. அவர்கள் தன்னுடைய உற்பத்தியை பெருக்க வழி செய்யவேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். செயல்திறனை அதிகரிக்க வேண்டும். போதாமைகளையும் / மெத்தனங்களையும்  Inefficiency'ஐ குறைக்க வேண்டும். 

வணிகத்தில் முழுவதுமாக பொருந்தாது. கடன் வாங்கி வணிகத்தை விஸ்தரிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு (debt to asset ratio) தான் வாங்க வேண்டும். அதற்கு மேல் வாங்கினால் லாபம் அவ்வளவு இல்லை. சில சமயங்களில் நஷ்டத்தை சந்தித்தால் அக்கடன்களை கட்டி முடிக்கவே வாழ்நாள் ஆகிவிடும். 

“இரத்தலின் ஊங்கு இளிவரல் இல்லை” என்று பொத்தம் பொதுவாக முதுமொழிக்காஞ்சி (6:9) கூறுவது, இக்குறளின் கருத்தோடு இயைந்ததாகக் கொள்ளக்கூடாது. “இயல்வது கரவேல்” என்றும், “ஈவது விலக்கேல்” என்று சொன்ன ஔவையேதான், “ஏற்பது இகழ்ச்சி” என்றும் கூறினாள். அதுவும்கூட, சுயநலத்துக்காக இரப்பதைப் பற்றி வரும் ஏற்பதுதான் இகழ்ச்சியாகும். பொது நலத்துக்காகவோ, அன்றி ஒரு உயிர் காப்பதற்கோ செய்யப்படும் இரப்பு அல்ல.

”ஒன்றும் வேண்டல் ராயினும்ம் ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவ ரேலவர் சிறுமையின் தீரார்” (கம்ப.வருணனை வழிவேண்டு.9)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.

மு.வரதராசனார் உரை
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

1 comment: