வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி: பா ல சு ந் த ரி)
இனிதே தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தார் காந்தி. அவரை வரவேற்ற அப்துல்லா சேக் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று தங்களது வக்கீலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரையே வெறித்து நோக்கிய “மாஜிஸ்ட்ரேட்” அவரது தலைப்பாகையை எடுத்து விடும்படி கூறினார். அதை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தார் காந்தி. இதுவே அவரது பின்னாளைய சட்டமறுப்பு இயக்கத்திற்குக் கால்கோல் விழாவாக அமைந்தது எனலாம்! அந்த மூஸ்லீம்கள் மட்டுமே தலைப்பாகை அணியலாம். வேறு யாரும் அணியக் கூடாது என்பது எழுதாத சட்டம்!
அங்கு வசித்த இந்தியர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களே. அவர்கள் கூலிகள் என்று அழைக்கப்படலாம். இந்தியார்களின் பெயரில் பெரும்பாலும் சாமி என்று விகுதியிலேயே அமைந்திருந்தது. எனவே சாமி என்று அழைக்கபட்டனர். துணிவுமிக்க சிலர் சாமி என்றால் எங்கள் மொழியில் எஜமான் என்று பொருள் என்று கூற அவர்களுக்கு அடி, உதை, திட்டு என்ற தண்டனைகள் அனுபவித்து வந்தனர். இதில் பாரிஸ்டர்களும் கூலி பாரிஸ்டர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது.
புலம் பெயர்ந்து வந்த போதே அவர்களின் தன்மானமும் இடம்மாறி விட்டது. இதை விதி என்று ஏற்றுக் கொள்ளும் நிலை அவர்களுக்கு! எனவே தலைப்பாகை அணியாமல் தொப்பி அணியலாம் என்ற முடிவுக்கு வந்தார் காந்தி. ஆனால் அதை அப்துல்லா சேத் ஏற்கவில்லை. தலைப்பாகை அணிந்தே தீருவோம் என்ற கொள்கையைப் பலர் கடைப்பிடித்து வருகின்றனர். நீங்கள் தொப்பிக்கு மாறினால் அவர்கள் போராட்டத்திற்கு எதிரானதாகும். அவர்களின் கொள்கை உங்களால் நீர்த்துப் போகும் என்றார். மேலும் தலைப்பாகையே உங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்று கூற அதனை ஏற்றுக் கொண்டார் காந்தி.
அடுத்து, அவர்களின் வழக்கு நடக்கும் பிரிட்டோரியாவிற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்குமாறு அவர்களின் வக்கீல் கூற காந்தி பிரிட்டோரியா புறப்பட்டார். முதல் வகுப்பு டிக்கேட், கூடவே படுக்கை தருவார்கள், வாங்கிக் கொள்ளுங்கள் என்று அப்துல்லா சேத் கூறினார். அதற்கு ஏன் அனாவசிய செலவு என்னிடம் தான் படுக்கை இருக்கிறதே! என்று கூறிவிட்டார் காந்தி.
படுக்கை வசதிக்கு ஐந்து ஷில்லிங்தான் கட்டணம். மேலும் இது இந்தியா அல்ல. எங்களிடம் போதிய அளவு செல்வம் இருக்கிறது. வீண் சிக்கனம் வேண்டாம் என்று சேத் கூறியதை பிடிவாதமாக மறுத்துவிட்டார் காந்தி.
ரயில் இரவு 9 மணிக்கு நோட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச் சேர்ந்தது. அந்த ஸ்தேஷனில்தான் பயணிகளுக்குப் படுக்கை அளிப்பது வழக்கம். காந்தியிடம் படுக்கை தருவதற்கு வந்த சிப்பந்தியிடம் என்னிடம் படுக்கை இருக்கிறது வேண்டாம் என்று மறுக்க சரியான கூலி என்று முனகியபடியே சென்ற சிப்பந்தி; உடன் உயர் அதிகாரியை அழைத்து வந்தார். “கூலி கிராக்கிக்கு முதல் வகுப்பா?” என்று ஆத்திரத்துடன் நீங்கள் சாமான் வண்டிக்குப் போக வேண்டும் என்று கூறினார்.
என்னிடம் டர்பனில் வாங்கிய முதல் வகுப்பு டிக்கட் இருக்கிறது என்று கூறி இறங்க மறுத்தார் காந்தி. உடன் அவர் போலீசாரை அழைத்து வர அவர்கள் காந்தியையும் அவரது சாமான்களையும் பிளாட்பாரத்தில் தூக்கி வீச ரயில் புறப்பட்டுவிட்டது. அடுத்த வண்டி வரும் வரையில் குளிரில் நடுங்கியபடியே காத்திருந்து பின்னர் அடுத்த ரயிலில் புறப்பட்டார். நடந்த விஷயங்களை ரயில்வே மேனேஜருக்குத் தந்தி மூலம் தெரியப்படுத்த அவரோ அதிகாரிகள் செய்தது சரியே! என்றார்.
அடுத்து அப்துல்லா சேத்துக்கும் அனைத்து விவரங்களையும் தந்தி மூலம் தெரியப்படுத்தினார். அங்கு இருக்கும் இந்திய வர்த்தகர்களுக்கு நடந்த விபரங்களை அபுதுல்லா சேத் தந்தி மூலம் தெரியப்படுத்தி காந்திக்கு ஆறுதல் கூறுமாறு செய்தார். அவர்களும் காந்தியை சந்தித்தனர். இங்கு இது போன்ற விஷயங்கள் சகஜம். இதைவிடக் கொடுமைகளை நாங்கள் அனுபவத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்று ஒட்டுமொத்தக் குரலில் கூற அதிர்ந்தார் காந்தி.
எனவேதான் நாங்கள் முதல் வகுப்பிலோ இரண்டாம் வகுப்பிலோ பயணிப்பதில்லை என்று விளக்கினார். யோசிக்க ஆரம்பித்தார் காந்தி. இந்த முறை படுக்கை வசதியுடன் பயணித்தார். ரயிலில் “சார்லஸ்டவுன்” வந்து அங்கிருந்து “ஜோகன்ன்ஸ்பர்க்” போக வேண்டும். ரயில் வசதி கிடையாது. எனவே கோச் வண்டியிலேயே பயணிக்க வேண்டும். அப்துல்லா சேத் சோச் வண்டி ஏஜெண்டிற்குத் தந்தி கொடுத்து இருந்தார். ஆனால், அந்த ஏஜெண்டிற்குக் காண்டியை அழைத்து செல்ல இஷ்டம் இல்லை. எனவே உமது டிக்கெட் ரத்தாகிவிட்டது என்று கூறி மறுத்தார். அதற்கு காரணம் கூலியை வெள்ளையருடன் உள்ளே அமர வைக்க இஷ்டம் இல்லை.
எனவே, வண்டியை நிர்வகிக்கும் தலைவர் வண்டியோட்டிக்கு அருகே உள்ள தனது இருக்கையை காந்தி வழங்கித் தான் உள்ளே அமர்ந்து கொண்டார். நீண்ட தர்க்கம் வேண்டாம் என்று காந்தியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
சிறிது தூரம் பயணித்ததும் தலைவருக்குப் புகை பிடிக்கு ஆசை. எனவே காந்தியை அப்புறப்படுத்தி வண்டியில் கால் வைத்து ஏறும் படியில் ஒரு கோணியை விரித்து அதில் அமருமாறு பணித்தார். காந்தி மறுத்தார். உள்ளே அமர வைக்காமல் வண்டியோட்டிக்கு அருகே அமர வைத்ததைப் பொறுத்துக் கொண்டேன். ஆனால் இப்போது படியில் அமரச் செய்வதை ஏற்கமாட்டேன். வேண்டுமானால் உள்ளே அமர்ந்து கொள்கிறேன் என்றார் அமைதியாக.
அவர் காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து கீழே தள்ள முயல, காந்தியோ வண்டியில் கைப்பிடியைப் பிடித்து தொங்கியபடியே இறங்க மறுத்தார். இதைக் கண்ட பயணிகள் காந்திக்கு ஆதரவாகப் பேச, வேறு வழியின்றி இன்னொரு இருக்கையில் இருந்த பயணியைப் படிக்கட்டுக்கு அனுப்பி அந்த இருக்கையில் தான் அமர்ந்து கொண்டார்.
அடுத்து ஹோட்டல்களிலும் தங்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே அப்துல்லா சேத்தின் நண்பரின் கடைக்குச் சென்று விபரம் கூறினார் காந்தி. அவர் காந்தியை அன்புடன் வரவேற்று உபசரித்தார். நடந்த நிகழ்ச்சிகளை ஆதியோடு அந்தமாக காந்தி விவரிக்க இங்கு எங்களைப் போன்றவர்களே வசிக்க முடியும். பணம் சம்பாதிக்க எல்லா அவமானங்களையும் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.
உங்களுக்கு இது புதிய அனுபவம். எனவே அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி, தாங்கள் அனுபவிக்கும் த்யரங்களை விலாவரியாக எடுத்துக் கூறினார் அவர். நாளை நீங்கள் “பிரிட்டோரியாவுக்கும்” போக மூன்றாம் வகுப்பில் பயணிப்பதே நலம். இந்தியர்களுக்கு முதல், இரண்டாம் வகுப்பு டிக்கட் அவர்கள் தரவே மாட்டார்கள் என்றார்.
நீங்கள் விடாமல் முயற்சி செய்தீர்களா? என்று வினவ, விண்ணப்பங்களை அனுப்பி இருக்கிறோம். நம்மவரே உயர் வகுப்பில் பயணிக்க விரும்புவதில்லை. விண் வம்பு ஏன்? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றனர் என்றார்.
உடனே ரயில்வே விதிகள் அனைத்தையும் தருவித்துப் படிக்கிறார். நாளை முதல் வகுப்பிலேயே பயணிக்கப் போகிறேன். இல்லாவிட்டால் கோச்சில் பயணிக்கிறேன், என்று கூறி முதல் வகுப்பு டிக்கெட்டிற்கு விண்ணப்பித்தார். டிக்கெட் கிடைக்கிறது. ஆனால், வழியில் கார்டு மூன்றாம் வகுப்பில் பயணிக்குமாறு கூறினால், என்னை மாட்டிவிட்டு ரயில்வே மீது வழக்குத் தொடரக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.
வழியில் கார்டு வந்து காந்தியை மூன்றாம் வகுப்புக்குப் போகுமாறு கூறிகிறார். தனது டிக்கெட்டை காண்பித்தும் அதெல்லாம் தெரியாது. நீ மூன்றாம் வகுப்பிலேயே போக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். உடன் பயணித்த ஆங்கிலப் பயணி அவர் என்னுடன் பயணிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறவும் வெறுத்துப் போய்விட்டார் கார்டு. கூலியோடு பயணிக்க விரும்பினால் எனக்கு என்ன வந்தது? என்று முணுமுணுத்துக் கொண்டு வெளியேறினார்.
முன்னர் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கோச் வண்டியில் அவமானப்பட்டு, ஹோட்டலில் இடம் மறுக்கப்பட்டு, பல்வேறு அவமானங்களை வரிசையாக சந்தித்த காந்தி; அத்தனை அவமானங்களையும் வென்று முதல் வகுப்பில் வெற்றிகரமாகப் பயணித்து பிரிடோரியாவை அடைந்தார். இந்த வெள்ளையர்களின் ஆதிக்க வெறி அவர் அடிமனதில் பதிந்துவிட்டது. அதுவே பின்னாளில் “வெள்ளையனே வெளியேறு” என்று பூகம்பமாக வெடித்தது.
தென்னாப்பிரிக்காவில் அவர் அடைந்த முதல் வெற்றி இது. இதைத்தான் வள்ளுவர் கூறிகிறார்..
குறள் 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
Join the conversation