வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

thirukkural meaning விளக்கம் குறள் 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்
குறள் 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தி - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

மாண்டார் - மாட்சிமையுள்ளவர்; இறந்தவர்.

வினைத்திட்பம் -  தொழில்செய்வதில்மனவலிமை; செய்யும் செயல்களின் மேல் மனதிட்பம் அதாவது மனவுறுதி 

வேந்தன்எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்

கண்விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஊறு  - உறுகை (உறு-. 1. Joining, approaching; ); தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.
ஊறு - ūṟu   III. v. i. spring forth, issue as water out of the ground; 2. be soaked, steeped, pickled; 3. spread (as ink in paper); 4. percolate, ooze through, கசி; 5. form (as milk in the breast); 6. form (as flesh in a sore); 7. increase (as knowledge, or as flesh in the body after sickness); 8 increase, பெருகு.

எய்திஎய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

உள்ளப்படும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

முழுப்பொருள்
செயலின்கண் கொண்ட உறுதியினால் ஒருவர் பெருமையும் வெற்றியும் அடைகிறார். ஆதலால் அவர் மாட்சிமையும் அடைகிறார். அத்தகைய வினைத்திட்பத்தை கொண்டு ஒரு தலைவர் / அரசர் / குடும்பத்தலைவர் / தனி நபர் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனுடைய பலன் பெருகி பின்பு கசிந்து அது பிறருக்கு உதவியாக அமையும். அப்பொழுது அத்தலைவரையும் அவரின் வினைத்திட்பத்தையும் எல்லோரும் நினைத்து பார்ப்பார்கள். போற்றுவார்கள். மதிப்பார்கள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

வினைத்திட்பம் கொண்டோர் மாட்சிமையும் அடைகிறார். எல்லோராலும் நினைக்கவும் படுகிறார். ஆதலால் வினைத்திட்பத்திற்கு அதற்கான பலன் உண்டு என்பதை அறிக. 

மணக்குடவர் உரை
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.

மு.வரதராசனார் உரை
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain