நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]

பொருள்
நெஞ்சின் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம்

துறவார் - துறவாதவர்கள்

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்

துறந்தார் -  tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர்

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

வஞ்சித்து - வஞ்சம் - கபடம்; பொய்; கொடுமை; வாள்; வஞ்சினம்; பழிக்குப்பழி; மாயம்; சிறுமை; அழிவு; மரபு; பிரபஞ்சம்.

வாழ்வாரின் - வாழ்வார் - வாழ்வோர்

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.

வன்கணார் - கொடுமையானவர்

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
புறத்தே துறவிகள் போன்று வேடமிட்டு அகத்தே துறவுக்கான எதையும் கடைபிடிக்காமல் இருப்போர் துறவார்/துறவாதவர்கள். இவர்கள் இவர்களை நம்பி வந்தவர்களை வஞ்சித்து வாழ்ந்தால் பின்பு இவர்போல் நெஞ்சில் கொடிய, ஈரமில்லாத, இரக்கமில்லாத கொடுமையானவர் இவ்வுலகத்தில் இல்லை என கூறலாம். ஏனெனில் எதிரிக்கு வஞ்சம் செய்வோரை விடவும் நம்பினவரை வஞ்சிப்பவர் கொடுமையானவர்.

எளிதான உதாரணமாக இன்றைய காலகட்டங்களில் உள்ள பல போலி துறவிகளை கூறலாம். பல போலி துறவிகள் மனதில் ஆசை விருப்பம் காமம் கோபம் ஆகிய எதையும் துறந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏடுகளில் பெற்ற சில அறிவும் இவர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விற்பனர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள் இவர்களிடம் சீடர்களாக / மாணவர்களாக / பக்தர்களாக வருவோரை பல வகைகளில் ஏமாற்றுவர். உதாரணமாக (முக்கியமாக பெண்களை மயக்கி) உடல் சார்ந்த வன்கொடுமைகள், செல்வ அபகரிப்புகள் என்று பலவற்றை கூறலாம். இது போல வஞ்சனை ஏதுமில்லை. இவற்றில் இரண்டு குற்றங்கள் உண்டு 1) துறவறம் பூண்டு அதற்கான எதையும் துறக்காது துறவுக்கு எதிரான குற்றங்களை செய்தல் 2) வஞ்சனை செய்தல்.

இத்தகையோரைக் குறித்தே பாடப்பட்ட, நீதிநெறிவிளக்கப்பாடல் ஒன்று:
                                                                                                                            
வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தே மென்று மகிழன்மின் – வஞ்சித்த
எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.  

வஞ்சிப்பவர்கள் எல்லோரையும் வஞ்சித்தோம் என்று மகிழ்ந்திருக்வேண்டாமென்றும், மேலேயிருக்கும் கடவுள் எல்லாவற்றையும் கண்டுகொண்டிருக்கிறான் என்று அங்கம் நடுங்குவதே அறிவுடமையாம்.
மற்றுமொரு பாடலும் அவர்களுக்கு அறிவுறுத்தவே சொல்லப்படுகிறது.

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை                                                  
கஞ்சுக மன்று பிறிதொன்றே – கஞ்சுகம்  
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்  
றிப்புலய் காவா திது.   


மற்ற போர்வைகளாவது, மெய்ப்புலன்களை பனி, வெயில் இவற்றிலிருந்துகாக்கும், தவவேடமாகிய பொய்ப்போர்வை, எவ்வித புலனையும் காக்காது என்பதிதன் பொருள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.

மு.வரதராசனார் உரை
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

No comments:

Post a Comment