மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மருந்து -  maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)

ஆகித் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தப்புதல் - தவறுதல்; பயன்படாதுபோதல்; பிறழுதல்; விட்டுப்போதல்; அபாயத்திலிருந்துநீங்குதல்; இறத்தல்; பிழைசெய்தல்; அழிதல்; அடித்தல்; சீலைதப்புதல்; விட்டுவிலகுதல்; காணாமற்போதல்; தடவுதல்; அப்பம்முதலியனதட்டுதல்; கையால்தட்டுதல்; தடவிப்பார்த்தல்; அப்புதல்; செய்யத்தவறுதல்; தண்டுதல்.

தப்பா - தவறாது

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

அற்றால் - தன்மை / போன்று 

மரத்தற்றால் - மரத்தின் தன்மை போன்று

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

பெருந்தகையான் - மிக்கபெருமையுடையவர்; காண்க:பெருந்தன்மை; மிக்கஅழகு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

படின் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
சில மரங்கள் மருந்தாக பயன்படும். தன்னுடைய அங்கங்கள் முழுவதையும் மருந்தாக தரும் மரங்கள் சில இருக்கும். எல்லா உறுப்புகளும் மருந்தாக பயன்படும் மரம்போல செல்வம் ஒப்புரவாகிய பெருந்தகைமை கொண்டவனிடம் இருந்தால் அச்செல்வம் எல்லோருக்கும் எல்லா வகையிலும் முழுவதுமாக தவறாமல் பயன்படும். இவர்கள் எளிதாக அணுகக்கூடிய இடத்தில இருப்பார். ஆதலால் அவர்களிடம் இருந்து செல்வம்  தவறாமல் பயன் தரும்.

நீர் அத்தியாவசியம், பழம் ஆடம்பரம் (முந்தைய குறள்களை நினைவில் கொள்க). இவ்வாடம்பரம் அதிகமானால் (எல்லை கடக்கும் பொழுது) அதுவே நோயாக மாறிவிடும். நோய்க்கு நிவாரணம் மருந்து. ஆதலால் அந்நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டியது ஒரு ஒப்புரவாளனின் கடமை.

நாம் முக்கியமாக நோக்க வேண்டியது
1) மரம் மருந்தாக பயன் படும்
2) மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாக பயன் படும்
3) அம்மரம் தவறாமல் பயன் தரும். உலகத்தில் சில மரங்கள் பல மருந்துகளை கொண்டு இருக்கலாம். ஆனால் அவை நமக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது அவை கண்காணாத இடத்தில் அல்லது அடைவதற்கு கடினமான இடத்தில இருக்கலாம். அப்படி இருப்பின் அம்மருந்து அதன் பயன் மக்களை சென்றடையாமல் தப்பிவிடுகிறது.

நமது பாரத நாட்டில் மரங்களை வாழ்வாதாரங்களாகவும், வாழ்க்கைத்தத்துவங்களை உணர்த்துவதாகவும் பல ஆயிரவருடங்களாக கருதும் வழக்கம் இருக்கிறது. ஆலமரம், அரசமரம், வேப்பமரம், தென்னைமரம், வாழைமரம், இன்னும் பலவும், மக்களின் வாழ்வாதாரங்களாக இருந்தும், இறந்தும் தம்மையே கொடுக்கின்றன. குறிப்பாக வாழைமரம் தன்னில் ஒவ்வொரு பகுதியாலும் பிறருக்குப் பயனாவதை எல்லோரும் அறிவோம்.

தன்னில் ஒவ்வொரு பகுதியையுமே பிறருக்குப் பயனாகக் கொடுத்து பிறருக்கு வாழ்வை நல்கும் பெருந்தகைமையான பண்பினை உடைய மரங்களைப் போன்றவர்கள் ஒப்புரவாளர்கள். அவர்களிடத்து உள்ள செல்வம் பிறருக்காகப் பயன்படுவதாம்.

உயிருள்ள போதும் மரத்தின் பாகங்கள் பிறருக்குப் பயனாகின்றன, அவை மடிந்தும், மக்களுக்கே பயனாகின்றன. ஒப்புரவில் ஒழுகும் பெருந்தகையாளர் செல்வமும் அத்தன்மையதே. ஈயார் தேட்டை தீயார் கொள்வார் என்பதுபோல, ஈவார் தேட்டை மேலோர் கொள்வர் என்றும் சொல்லலாம். நம் நாட்டிலேதான் “செத்துங் கொடுத்தான் சீதக்காதி” என்று ஒரு வள்ளலைப் பற்றிச் சொல்லுகிறோம்.

திரிகடுகப்பாடலொன்று (75) இவ்வாறு கூறுகிறது.
“வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியும் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம்”
அதாவது, கொடையாளனிடத்துற்ற செல்வமும், அறிவொடு கற்ற அறநூலும், தன்னை அடுத்தவர்க்குச் செய்யத்தக்கதைத் தெரிந்தவனும் உறுதியான பொருள்கள் என்கிறது இப்பாடல்.

”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்” (நற் 226:1)
“மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி” (புறநா 180:5)
“மரமுதல் சாய மருந்துகொண் டாங்கு” (பெருங் 1.37:188)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின். தப்புதலென்றது ஒளித்தலை.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
This kural is replete with similes. Yet another simile is employed in Kural 217 that elaborates that the wealth with a person who has a big heart of sharing his wealth with others and giving away for right causes or helping the needy is similar to a medicinal tree that sacrifices all its parts to others for curing various diseases.

The wealth of a large-hearted 
Is an unfailing medicine tree.

English Meaning - As I taught a kid - Rajesh
An unfailing medicinal tree sacrifices all its parts for curing various diseases (medicinal tree examples : Neem tree, banana tree etc). Like a medicinal tree, a magnanimous person shares his wealth with others and giving away for right reasons or helping the needy. 

Questions that I ask to the kid
What is a magnanimity? Who is a magnanimous person?

No comments:

Post a Comment