யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

குறள் 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

கா - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்.

காவார் - பாதுக்காகாதவர் 

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்

நா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ); சொல்; நடு; மணிமுதலியவற்றின்நாக்கு; தீயின்சுடர்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு.

காக்க காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

காவாக்கால் - காக்கவில்லை என்றால் 

சோகாப்பர் - சோகாப்பு - துன்பம்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இழுக்குப்குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

பட்டு - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள் 
காக்கவேண்டிய மற்ற எதையும் நீ அடக்கவில்லையென்றாலும் நீ உன் வாயினை, உன் நாவினை, உன் வாயில் வரும் வார்த்தைதனை (அதன் பொருளை)  அடக்கவேண்டும். அப்படி நீ அடக்கவில்லையென்றால் அதில் இருந்து இழுக்கான சொற்கள் வந்து விடும். அக்குற்றத்திற்காக துன்பத்தை அனுபவிப்பாய். வார்த்தைகளின் எஜமானாக நீ இருக்க வேண்டும். வார்த்தைகள் உனது எஜமானாக இருந்தால் உனக்கு துன்பம். சொல்லும் அதன் பொருளும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது மேடை பேச்சுக்கு மட்டும் அல்ல. வாழ்க்கைக்கு மிக முக்கியம். 

(சற்று நகைச்சுவையாக கூறினால்)
வீட்டில் பாதுகாக்கபட வேண்டிய பொருள்களை நாம் பொதுவாக மதில் கட்டி, சுவர் கட்டி, இரும்பு கடிவாளங்கள் போட்டு பாதுகாப்போம். ஆனால் உடம்பில் பல உள்ளுறுப்புகளை பல மதில்கள் கட்டிவைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்படவேண்டிய உறுப்புகளில் நா/நாக்கு முக்கியம் என்பதால் தான் 32 மதில் (பற்கள்) கட்டி அது படைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. அப்படி பாதுகாக்கவில்லையென்றால் முதல் மதில் உடைகிறது. 

ஐம்புலன்களின்களிலே “நா” என்பது சுவையறிந்து உண்பதற்கான உறுப்பு மட்டுமில்லை. பேச்சிலும் சுவையைக் கூட்டி பிறருக்கு இன்பத்தை தரக்கூடியது. மற்ற உறுப்புகளுக்கில்லாத சிறப்பு கூடிய உறுப்பு. மற்ற புலன்களால் அறியக்கூடிய இன்பமும் துன்பமும் இத்தகையது என்பதைச் சொல்லக்கூடிய உறுப்பு. நல்லன சொல்லி பிறர்க்கு நலனும், அல்லன சொல்லி அதனால் பிறருக்கும், முடிவிலே தனக்குமே துன்பத்தைத் தரக்கூடிய வல்லமை உடைய உறுப்பு.

சொல்லும் சொல்லறிந்து, பொருளறிந்து, சுவையறிந்து, பயனறிந்து சொல்லாமல் போனால், சொற்களைச் சொல்லும் நாவுக்கு என்ன பயன்? நாவால் நற்றமிழில் நாளும் பாடியவரை திருநாவுக்கரசர் என்று வேறெந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்புப் பெயரால் அழைத்துள்ளோம். வேறெந்த உறுப்புக்கும் இல்லாத சிறப்பு இது, வேறெந்த மொழியும் கொள்ளாத சிந்தனையிது.

நாவுக்கரசர் தன் நா செய்த நல்வினையாலே தனக்கு சிவாயநம என ஓதக்கிடைத்தது என்று பெருமிதமே கொள்கிறார். “நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே  ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற்றேன்எனை ஒப்பவரார்”


சொல்லத்தகாதவற்றையும், பிறருக்கும் அறிந்து அறியாமலும் துன்பத்தை விளைவிக்கும் சொற்களை சொல்கிறவர்கள் அதனால் பின்விளையும் துன்பங்களுக்கு சோகத்தினை அடைவர். அதனால் ஒருவர் தன்நாவை பயனில சொல்லாமல் காப்பாற்ற வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஆக்கப் படுகும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகம் துய்ப்பிக்கும்
காக்கப் படுவன இந்தியம் ஐந்தினும்
நாக்கல்ல தில்லை நனிவெல்லு மாறே” (வளையாபதி)

“காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லும்சொல்” (நாலடி 63)
“காவா நாவிற் கனகனும் விசயனும்” (சிலப் 26:159)
“காவாதவள் கண்ணறச் சொல்லிய வெஞ் சொல்” (சீவக.1069)

பரிமேலழகர் உரை
யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.).

மணக்குடவர் உரை
எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.

மு.வரதராசனார் உரை
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

சாலமன் பாப்பையா உரை
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Thirukkural - Management - Communication 
Even if you do not protect or control many other possessions in your life, you have to control the use of your tongue advises Kural 127.

Guard your tongue if nothing else; for words
Unguarded cause distress.

When you cannot have control over the words you use and you resort to unpleasant, humiliating  or harmful words, you will have to pay the price at a later stage for having resorted to using unpleasant words. The unpleasant words you use will revisit and trouble your conscience for having used them. That trouble will be more troublesome than the trouble you incur to others by using painful and unpleasant words. You are a master before you speak something. Once you speak something, you become a slave of it as you lose power over what you have spoken. Remember, every word you speak, speaks of you.

No comments:

Post a Comment