கெடுவாக வையாது உலகம் நடுவாக

குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
கெடுவாககெடு  - கேடு; வறுமை; தவணை; எல்லை

வைத்தல்இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வையாது - நினைக்காது;  நடத்தாது 

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

நடுவாக நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி; நடுநிலை; செம்மை; நிதானம்.

நன்றிக் - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தங்கி - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

யான் - தன்மை யொருமைப் பெயர்

தாழ்வு - பள்ளம்; குறுமை; அவமானம்; குற்றம்; தொங்கல்; மலையடிவாரம்; தங்குமிடம்; அடக்கம்; வணக்கம்; துன்பம்.

முழுப்பொருள்
ஒருவன் நடுவுநிலைப் போற்றி அறவழியில் வாழ்ந்தும் வறுமையில் இருந்தான் எனில் அவன் அவ்வறுமை நிலையை நினைத்து வருத்தப்பட தேவையில்லை. அறவழில் வாழ்ந்தும் வறுமையில் இருந்தால் அவ்வறுமையை செல்வமாகத்தான் சான்றோர்களும் நல்லவர்களும் கருதுவர். அதனை வறுமையென கருத்தமாட்டார்கள் துன்பம் என்றே கருதுவர்.

இவ்வறுமையை பார்த்து ஒழுக்கமற்றவர்கள் ஏளனம் செய்யக்கூடும். அதனை நினைத்து கவலைப்படாதே. ஏனெனில் யார் நம்மை தராசில் வைத்து பார்க்கிறார்கள் அவர்களின் தகுதி என்ன என்பது முக்கியம். ரௌடிகளும் சோம்பேரிகளும் ஒழுக்கமற்றவர்களும் சொல்வதை நினைத்து கவலைப்படாதே.

உதாரணமாக அப்துல் கலாம், காமராஜர் ஆகியோரின் வங்கியில் அவ்வளவு பணம் இருந்தது என்பதை வைத்து நாம் அவர்களை மதிப்பிடுவதில்லை. அவர்களை இவ்வுலகம் எந்நாளும் மறக்காது. ஆனால் வங்கியில் பல பல லட்ச கோடிகளை சொத்தாக வைத்துக்கொண்ட வணிகர்களை அரசியல்வாதிகளை மிக மிக விரைவிலேயே மறந்துவிடும் இவ்வுலகம். ஏனெனில் களவு செய்து ஈட்டிய செல்வத்தை வறுமையாகவே கருதும் இவ்வுலகம்.

ஔவை மூதுரையில் கூறுவது போல, “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்”

திருமூலரின் திருமந்திரத்தில் கீழ்கண்ட பாடலைக்கண்டேன் இக்குறளுக்கான கருத்தாயில்லாவிட்டாலும், நடுவுநிலைமைபற்றிய நல்லகருத்தாகையால் இன்றே பதிவுசெய்கிறேன். மிகவும் எளிதான பாடல், முதல் தந்திரம், பதிக எண் 26-ல் வரும் நான்கு நடுவுநிலைப்பாடல்களில், முதல் பாடல் இது.

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா உரை
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நீதியில் நிற்பவன் ஏழையானாலும் உயர்ந்தவன்.

No comments:

Post a Comment