குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

குறள் 793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
குணமும் - குணம் -  பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

குடிமையும் - குடிமை - உயர்குலத்தாரதுஒழுக்கம்; பிறந்தகுடியைஉயரச்செய்தல்; குடிப்பிறப்பு; அரசரதுகுடியாயிருக்குந்தன்மை; குடித்தனப்பாங்கு; அடிமை; குடிகளிடம்பெறும்வரி.

குற்றமும் - குற்றம் -  பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

குன்றா - குறையாத, குறைவில்லாத

இனனும் - இனன்  - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

யாக்க - யாத்தல் - செய்யுளமைத்தல்; கட்டுதல்; பிணித்தல்; நீர்முதலியனஅணைத்தல்; விட்டுநீங்காதிருத்தல்; சொல்லுதல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
யாரை எவ்வாறு கண்டெடுத்து நட்புக்கொள்ள வேண்டும் ?
1. குணம் - ஒருவருடைய குணத்தை ஆராய வேண்டும். அவர் அறவழி சார்ந்தவரா என்று ஆராய வேண்டும். நற்குணங்கள் கொண்டவரா என்று ஆராயவேண்டும். நற்குணங்கள் அல்லாதவரிடம் அறம் அல்லாதவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

2. குடிமை - ஒருவர் எத்தகைய குடியை சேர்ந்தவர் என்றுமட்டும் பாராது அவர் உயர்குடியை சேர்ந்தோர் கொண்டுள்ள ஒழுக்கத்தை கடைபிடிப்பவரா என்று ஆராய வேண்டும். ஒழுக்கம் கடைபிடிக்காதவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

3. குற்றம் - ஒருவர் குற்றங்கள் புரிகிறவரா என்று ஆராய வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிப்பவரா என்று ஆராயவேண்டும். குற்றங்கள் புரிகிறவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

4. குன்றா இனன் - குன்றாத உறவினர்கள் சுற்றத்தார்கள் உள்ளவரா என்று ஆராய வேண்டும். ஏனெனில் பிறரிடம் கண்ணோட்டம் / தாட்சிணியம் இருப்பவரிடம் மக்கள் சூழ்வர். அதற்கு மாறாக ஒருவரை விட்டு பலர் விலகி இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒருவித காரணம் அல்லது ஒவ்வாமை இருக்கும். அது என்னவென்று ஆராய வேண்டும். ஒருவேளை இவர் நம்பத்தகாதவராக இருக்கலாம். அல்லது பொறாமை கொள்பவராக, தீங்கு விளைவிப்பவராக, ஒழுக்கமல்லாதவராக இருக்கலாம். அத்தகையவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

மேற்சொன்ன நான்கையும் நன்கு ஆராய்ந்து நற்பண்புகள் கொண்ட அறவழியில் செல்கிற ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிற குற்றங்கள் புரியாத எல்லோராலும் விரும்புகின்றவரை நட்பாக கொள்ளவேண்டும். 

இக்கருத்தையே ஒட்டிய நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. “ஒருவனை மனம் விரும்பி நண்பனாக ஏற்ற பிறகு, அவனது பண்பு நலன்கள் என்ன, குற்றங்கள் யாவை என்று ஆராய்ந்து திரிவேனாகில், ஒலி கடல் சூழ் உலகத்தார் என்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்குமாறு நான், நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக”. அப்பாடலானது:

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக (நாலடி 230)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

No comments:

Post a Comment