அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

குறள் 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]

பொருள்
அருஞ் - அருமை - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள்

இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

முகத்தான் - முகத்து + ஆன்
முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம்
ஆன் - அவ்விடம், இக்கணம்

பெருஞ்செல்வம் -  பெரிய செல்வம்

பே - ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஏ); நுரை; அச்சம்; மேகம்; 'இல்லை'என்னும்பொருள்தரும்சொல்

எய் - முள்ளம்பன்றி; அம்பு; ஓர்உவமவுருபு.

பேஎய்  -பேய் - பிசாசம்; காட்டுத்தன்மை; தீமை; வெறி.

கண்டன் - கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல்.

அன்னது - அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

முழுப்பொருள்
தன்னை பிறர் சந்திக்க வருவதை தவிர்க்க சந்தர்ப்பங்கள் அமைவதை கடுமையாக்கி காலம் தாழ்த்துவதும் பிறருக்கு கடுமையான / கீழ்மையான/ மகிழ்ச்சியற்ற முகத்தை காண்பிக்கும் தன்மை ஒருவருக்கு (ஒரு அரசருக்கு) தீங்கு விளைவிக்கும். அத்தகையவரிடம் இருக்கும் செல்வம் பேய்யிடம் இருக்கும் பெருஞ்செல்வம் போன்றதாகும். யாருக்கும் பயனில்லை. மக்களை உறவை சுற்றத்தை மறந்து செல்வமே பிரதானம் என்போரை மனிதர் என்று எப்படிச் சொல்ல முடியும்? அத்தகையவர் பணப்பிசாசு அல்லவா. 

பொதுவாக ஒருவர் எளிதாக நெருங்க கூடியவராக இன்முகத்தத்துடன் கூடிய அன்பானவராக இருத்தல் வேண்டும். அதற்கு மாறாக கடுமையான முகம் கொண்டு எளிதில் நெருங்கமுடியாதவராக இருப்பின் அவரை பிசாசு சென்று சொல்லுவர். 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.).



மணக்குடவர் உரை
காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து.

இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.

மு.வரதராசனார் உரை
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா உரை
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

No comments:

Post a Comment