இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை

குறள் 855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.

சாய்ந்து - சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல்.

ஒழுக - ஒழுக - மெதுவாக; சிறிதுசிறிதாக; சொரிய; வடிய; ஓட.
ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வல்லாரை - வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்

யாரே - எவரும்

மிகல் - மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை.

ஊக்கும் - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

தன்மை - குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி

யவர் - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

முழுப்பொருள்
மனவேறுபாடு துளிர்க்கும் பொழுதே அதனை வளரவிடாமல் அல்லது பகை இருப்பினும் அதனை மறந்து எதிர் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று அவருடன் இணங்கும் மனமும் குணமும் உள்ளவர் வலிமையானவர் திறமையுள்ளவர். அத்தகையவரை வெல்ல முடியாது. ஆனால் அவரை வெல்ல முயற்சி செய்யும் ஆற்றல் படைத்தவர் யார்?  

ஊக்கும் என்றால் முயலுதல் என்ற பொருளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பகையை வளர்க்காமல் நட்பை வளர்க்கும் மனமும் திறனும் உள்ளவரை வெல்ல யாரும் முயற்சிக்கக்கூட  மாட்டார்கள். 

ஆதலால் மனவேறுபாடுகளை துளிரிலேயே அழிப்பது நமக்கு நெடுங்காலத்திற்கு வெற்றியையும் நண்பர்களையும் தரும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்? (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.

மு.வரதராசனார் உரை
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

சாலமன் பாப்பையா உரை
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

No comments:

Post a Comment