சினத்தைப் பொருளென்று கொண்டவன்

குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்

சினத்தைப் - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்று - eṉṟu   என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்சென்று பசந்தது: (f) between words defining thingsenumerated, as in நிலனென்று, நீரென்று; வினைபெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றிவரும் இடைச் சொல் (தொல். சொல், 261, உரை: நன் 424.) 3. An expletive; ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.  

கொண்டவன் - உடையவன்

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

அறைந்தான் - அறைதல் - அடித்தல்; மோதுதல் சொல்லுதல் கடாவுதல் ஒலித்தல் பறைமுதலியனகொட்டுதல்; மண்ணெறிந்துகட்டுதல்.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

பிழையாதற்று - பிழையாகி போகுதல்

முழுப்பொருள்
பொருள் என்ற சொல்லுக்கு தலைமை(ப் பண்பு) என்ற பொருள் உண்டு. சினம் என்பற்கு கோபம், வெம்மை என்று அர்த்தம். சினத்தை/கோபத்தை தன்னுடைய பண்பாக உடையவனுக்கு கேடே பயனாய் கிடைக்கும் என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் எத்தகையதையும் தாங்கும் (பொறுமை உடைய) நிலத்தை ஓங்கி அடித்தால் அடித்தவரின் கைக்குத் தான் வலிக்கும். நிலத்திற்கு வலிக்காது. அதுப்போல சினம் கொண்டவருக்கு தான் வலி/கேடு. சினம் வலிமை அல்ல அது கேடு ஆகும்.

சினம் கொள்ளாமல் (அகழ்வாரை தாங்கும்) நிலம் போல் பொறுமையாக இருத்தல் வேண்டும் என்பதை சுட்டவே நிலத்தை இங்கே சுட்டுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“கதம் எனும் பொருண்மையிலர்” (கம்ப.மராமர.10)

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-19 இல் ஒரு வரி இப்படி வருகிறது

பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.

“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.

“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர்.



சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள்.
நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.

பரிமேலழகர் உரை
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

No comments:

Post a Comment