Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கல் தோண்டு; பயில்; கல்விகல்; படைக்கலம்முதலியனபயில்.

கற்றதனால் - கல்வி கற்பதனால்; அறிவு பெறுவதனால்

ஆய - ஆகும்

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

என்கொல் -  என்ன அது ?
கொல் - A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி

வால் - இளமை; தூய்மை; வெண்மை; நன்மை; பெருமை; மிகுதி; விலங்குகளின்பின்புறத்தில்நீண்டுதொங்கும்உறுப்பு; நீளமானது; குறும்புசெய்பவர்; குறும்பு; காண்க:வாலுளுவை.

அறிவன் - அறிவுடையவன்; நல்லறிவுடையான்; அருகன் புத்தன் கணி கம்மாளன் செவ்வாய் புதன் உத்தரட்டாதி

வாலறிவன் - vāl-aṟivaṉ   n. வால்¹ +. God,as pure intelligence; கடவுள். வாலறிவ னற்றாடொழாஅ ரெனின் (குறள், 2).

நல் - nal   adj. நன்-மை. [K. nal.] Good;நல்ல. கச்சையங்களி நல்யானை (சூளா. அரசியாற். 27).  

தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.

தொழாஅர் எனின்? - தொழுது நம்மை (அந்த இறைப்பொருளிடம் வழிநடத்தலுக்காக) ஒப்புவித்தல்

முழுப்பொருள்
நாம் பல நூல்களை கற்று என்ன பயன் நாம் அறிவுக்கு அறிவானவனின், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன் பாதங்களை தொட்டு வணங்காவிட்டால்? என்கிறார் திருவள்ளுவர். இங்கே நல்லறிவுடையான் / வாலறிவன்  என்று கூறப்படுவது தூயறிவுச் சுடராய் விளங்கும் இறைவன் என்னும் ஆதிப்பரம்பொருள் ஆகும். நாம் கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. ஆதலால் கற்றவர்கள் அவர்களுக்கு மேல் உள்ள மெய்ஞானத்தை வணங்குவார்கள். கற்றதனால் நாம் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் என்று நினைக்கக்கூடாது.

கற்பவை எல்லாம் இறையின் சூட்சும உருவத்தில் ஐந்து வெளிப்பாடுகளாகும் (ஓசை,உணர்தல், பார்த்தல், முகர்தல்,ருசித்தல்) அவற்றின் பௌதீக வெளிப்பாடுகளாகவும் உணர்ந்து கொள்ளவே, நம் அறிவும், அறிவுக்கண்ணைத் திறக்கும் கருவியான கல்வியும்.

வித்தைக்கு அழகு விநயம் என்பதற்கேற்ப  நாம் கற்றது கடுகளவாகவும் கல்லாதது ககனமளவாகவும் உணர்ந்து, ஆதிப்பரம்பொருளை நாம் சரணமடைந்தோமானால், நம் உள்ளொளி பெருக்கி, ஞான ஊற்றாய் பெருகும் என்பதை குறிப்பினால் உணர்த்துவது இக்குறள். தொழல் என்றலும், நம்மை அவ்வாதியினிடத்தில் ஒப்படைப்பதென கொளலாம்.

ஜெயமோகன் உரை [எரிமருள் வேங்கை]
கற்றதனால் என்ன பயன் கடவுளைத்தொழாவிட்டால் என்றால் அது கவிதை அல்ல. அதிலுள்ள வாலறிவன் என்ற சொல்லே அதை கவிதையாக்குகிறது. அறிவுக்கு அறிவானவன், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன். அந்த அறிவை அறியாவிட்டால் பிற அறிவுகளால் என்ன பயன்? அதுவே அந்தக் கவிதையின் தரிசனம். அவ்வாறு விரிவடைவது பொதுமொழியில் நிகழவில்லை, கவிதையின் தனிமொழியில் நிகழ்கிறது. அந்தத் தனிமொழியை அறியாதவர்கள் கடவுளை கும்பிடாதவன் கற்றுபயனில்லை என்ற எளிய பொருளையே எடுப்பார்கள். அவர்களுக்கு அது நீதி, கவிதை அல்ல.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வாலுணர்வுமேல் முடுகினார்” (கம்ப.தாடகை 3)
“வாலறிவற்கு” (கம்ப.வேள்வி.21)

“கற்றவர் தாந்தொழு கேத்தநின்றான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி” (சம்பந்தர்.கீழைத்திருக்காட்டுப்பள்ளி 9)

“பெற்றிகொள் பிறைநுத லீர்உமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே” (சம்பந்தர்.திருநெல்வெண்ணைய்.6)

“கற்றாங்கவன் கழல்பேணினர்” (திருவாசகம் 508)

“செய்யுள்நிகழ் சொற்றெளிவும் செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே எனத்துணிந்து விளங்கிஒளிர்
மையணியும் கண்டத்தான் மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார்” (பெரிய.பொய்யடிமை)

“கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற் காளன்றி யாவரோ” (திருவாய்மொழி 7.5:7)

குறிப்பு
கற்றதன் பயன் அறிவு பெறுதல், அதன் பயன் இறைவனைத் தொழுதல். அறிவு பெற்றார் தொழுதற் குரியவன் என்பதற்குப் பொருத்தமாக “வாலறிவன்” என்ற தொடரைக் கூறினார். கற்றால் வருவது நூலறிவு: இறைவனைத் தொழுதலால் வருவது வாலறிவு.

பரிமேலழகர் உரை
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

மு.வரதராசனார் உரை
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மெய்யறிவை அடையவே கல்வி உதவ வேண்டும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
இறைவன் உளன் என்பதற்குக் காரணங்கள்
இப்படைப்பு தொழிலைக் கொண்டே நையாயிகர் கடவுள் உண்டு என்பதை நிரூபிக்கும் விதங்களைக் குறிப்பிடலாம். நையாயிகர் காட்டும் முக்கிய காரணங்களுள்ளே ஏனைய மதத்தினர் காட்டாத காரணம் எதுவும் இல்லை. மண் தானாகவே பானையாகாது. மண்ணைப் பானையாக்க அறிவுடைய குயவன் ஒருவன் தேவை. அது போலவே பதினாறு பதார்த்தங்களும் தாமாகவே உலகு ஆகா. அவற்றை உலகாக்க வல்ல பேரறிவாளன் ஒருவன் தேவை. இது கடவுளுண்டு என்பதற்கு ஒரு நியாயம். உலகைப் படைப்பவன் மட்டுமல்லன் இறைவன். தொடர்ந்து உலகை இயக்கிக்கொண்டிருப்பவனும் அவனே. 

இவ்வுலகிலே தீமை செய்வோர் சிலர் இன்புறவும், நன்மை செய்வவோர் பலர் துன்புறவும் கண்கின்றோம். இதற்குக் காரணம் அவர்கள் முற்பிறப்பில் செய்த கன்மங்களாகும். அவரவர் செய்த கன்ம பலன்கள், அவரவரைச் சேருமாறு செய்யவல்ல அறிவாளன் ஒருவன் வேண்டும். இது இறைவன் உளன் என்பதை நிரூபிக்கும் இரண்டாவது காரணம்.

வேதங்களிலே கூறப்படும் பல உண்மைகள் எத்தகைய அதிமனிதனது அறிவுக்கும் அப்பாற்பட்டவை. முற்றறிவுடைய ஒருவனால்தான் அறற்றைக் கூறமுடியும் இதிலிருந்தும் கடவுள் உண்டென்னும் உண்மை நிச்சயமாகின்றது. இது மூன்றாவது காரணம். 

வேதங்கள் கடவுள் உண்டு எனக் கூறுவதும் கடவுள் உண்டென்பதற்கு ஓர் ஆதாரம். இது நான்காவது

English Meaning - As I taught a kid - Rajesh
What is the benefit of all your learning (from all the books, from all your teachers, from experiences, from scholars etc.), if you can’t surrender yourself at the feet of God. Here the term Vaalarivan means, God in the form of flame of pure knowledge; God is the knowledge of the knowledge; God has the primary/ultimate knowledge;  God is full of knowledge. He is the Primary Universal God (ஆதிப்பரம்பொருள்).  

What we know is only of the size of a fist and what we don't know is of the size of world. Learnt people will surrender to the ultimate wisdom/knowledge (மெய்ஞானம்) that is above them. Just be know more, more than most of the people, we should not think we know everything. Surrender to God, the knowledge.

Questions that I ask to the kid
Whom should we surrender to? Whom should we worship?
Who has the ultimate knowledge?
Why should we surrender to God?

No comments:

Post a Comment