குறள் 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]
பொருள்
நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.
நினைப்பவர் - நினைக்கின்றவர்
போன்று - போல
நினையார் - நினைக்காதவர்
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
தும்மல் - tummal n. தும்மு-. [T.tummu.] 1. Sneezing; தும்முகை. குறிப்பின்றித்தும்மல்போற் றோன்றிவிடும் (குறள், 1253). 2.Breath; மூச்சு (பிங்.)
சினைத்தல் - தோன்றுதல்; பூஅரும்புதல்; தழைத்தல்; சிரங்குபுடைத்தல்; கருக்கொள்ளுதல்; பருத்தல்.
சினைப்பது - தோன்றுவது
போன்று - போல
கெடும் - கேடு
முழுப்பொருள்
தும்மல் என்பது எல்லோருக்கும் வரும் இயற்கையான ஒன்று. பொதுவாக தும்மல் வந்தால் நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்று தான் நாம் அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். அப்படி இருக்கையில், காதலர்கள் இருவரும் பிரிந்து இருக்கும் பொழுது ஒருவருக்கு தும்மல் வரப்போவதைப்போல நாசிகளுக்கு தோன்றி பின்பு தும்மல் வரமால் போகும். தும்மல் வரத்தோன்றும் பொழுது எல்லாம் என் காதலருக்கு (காதலிக்கு) என்னை பற்றிய நினைப்பு வர இருக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்தேன் ஆனால் அது இப்பொழுது (தும்மல் நின்ற பொழுது) என் நினைவு அவருக்கு நின்று விட்டு இருக்குமோ என்று நினைத்து நான் வருந்துகிறேன்.
பிரிவில் இருக்கும் பொழுது நம் காதலர் (காதலி) நம்மை குறைந்த பட்சம் (அல்லது அவ்வப்போதாவது) நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று காதலில் இருப்பவர்கள் நினைக்கின்றனர்.
ஒப்புமை
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.).
மணக்குடவர் உரை
அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.
மு.வரதராசனார் உரை
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.
சாலமன் பாப்பையா உரை
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.
நாசி உளைகிறது தும்மலுக்காய்
நலம் கொண்டார் நினைக்கின்றார் என மகிழ்ந்தேன்
ஆசை ஒழிந்ததங்கு தும்மலில்லை
அன்புடையார் நினைத்தாற் போல் நிறுத்தினாரோ
பாசம் நிறைந்தவளாய்த் துடிக்கின்றாளாம்
பாவி மகன் பிரிவாலே பெரிய கண்ணாள
நேசம் நிறைந்தவளின் உணர்வதனை
நெஞ்சுணரக் காட்டுகின்றார் குறளின் வேந்தர்
No comments:
Post a Comment