குறள் 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]
பொருள்
முழுப்பொருள்
தும்முச் - தும்மு-தல் - tummu- 5 v. intr. [T. tum-muṭa, M. tumpuka.] 1. To sneeze; சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல் ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312). 2. To breathe; மூச்சுவிடுதல் (சூடா.--tr. To emit, let go, leave; விடுதல் (W.)
செறுப்ப - செறுப்பு - கட்டுப்பாடு; நெருக்கம்; கொலை.
அழுதாள் - அழுதல் - அழு - aẕu I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்
நுமர் - நுமன் - உம்மைச்சார்ந்தவன்.
உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல்.
எம்மை - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு.
மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.-
மறைத்திரோ - மறைத்திடவேதான் செய்தீர்
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
தலைவன் கூறுவதுப்போல் அமைந்த குறள் இது.
தலைவன் நான் தும்மல் வந்தபொழுது அதனை அடக்கிக்கொண்டேன். அதனை கண்ட தலைவி அழுதாள். ஏன் அழுகிறாய் என்று கேட்டேன்? உங்களை தங்களது விருப்பத்திற்கு உரியவர் என்று எண்ணும் பிறர் இருக்கின்றனர். அவர்கள் உங்களை நினைத்ததால் வந்த தும்மலை நான் அறிந்திடலாகாது என்று நீங்கள் என்னிடம் இருந்து வேண்டுமென்றே மறைத்துள்ளீர்கள் என்று அழுகிறாள்.
மிளகாய் பொடி நெடியா அல்லது தூசு விழுந்த நெடியா என்று உண்மையை என்னவென்று அறிந்துக்கொள்ளாமல் இதுதான் காரணம் என்று தானாகவே ஒரு விளக்கத்தை கற்பனையாக கூறி தலைவனுடன் ஊடுகிறாள் தலைவி.
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.
No comments:
Post a Comment