குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]
பொருள்
வழுத்தினாள் - வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்; மந்திரித்தல்.
தும்மினேனாக - தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டுஒலியுடன்மூக்குவாய்வழியாய்வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல்.
அழித்து - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.
அழுதாள் - அழுதல் - அழு - aẕu I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்
யார் - யாவர்; எவர்;
உள்ளித் - உள்ளு-தல் - uḷḷu- 5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )
தும்மினீர் - தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டுஒலியுடன்மூக்குவாய்வழியாய்வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல்.
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
முழுப்பொருள்
தலைவன் தும்மினான். அருகில் இருந்த தலைவி தலைவனை நீடுடி வாழ்க என்று வாழ்த்தினாள். அவன் மகிழ்ச்சி அடைவதற்குள் அவள் உள்ளம் மாறி அழ தொடங்கினாள். தலைவி தலைவனை கேட்டாள் யார்(எவள் அவள் / எந்த சிறுக்கி) உன்னை இப்பொழுது நினைத்தாள் நீ(நீர்/நீங்கள்) இப்பொழுது தும்மினாய் ?
ஊடல் புரிவதற்கு தும்மல் போதும் என்று உணர்ந்த தலைவன் விழி பிதுங்கி நின்றான்.
ஒரு தும்மலில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று தெரிந்தால் தலைவன் தும்மியேயிருக்கமாட்டானோ என்னவோ! தும்மினால் யாரோ நம்மை நினைப்பதால்தான் தும்முகிறோம் என்று பெரியவர்கள் கூறுவதும்கூட 2000 வருடத்துக்கும் மேலாக இருந்துவரும் ஒன்றுதான் போலுள்ளது
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள். (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.).
மணக்குடவர் உரை
யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள். இது தும்மினும் குற்றமென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.
சாலமன் பாப்பையா உரை
நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.
No comments:
Post a Comment