கரவாது உவந்தீயும் கண்ணன்னார்

குறள் 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரவச்சம் - மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை.

கரவு- மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை

கரவாது - வஞ்சனை செய்யாது; களவு செய்யாது; பொய் சொல்லாது

உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

உவந்து - மகிழ்ந்து; விரும்பி;

ஈயும் - ஈ-தல் - ī-   4 v. [T. ittsu, K. ī.] tr. 1. Togive to inferiors, give alms, bestow, grant;இழிந்தோர்க்குக் கொடுத்தல் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொல். சொல் 445). 2. To give;கொடுத்தல். 3. To distribute, apportion; பகிர்ந்துகொடுத்தல். 4. (Arith.) To divide; வகுத்தல் (W.) 5. To give instruction; படிப்பித்தல் ஈதலியல்பே யியம்புங் காலை (நன். 36). 6. To create,bring into existence; படைத்தல் எவ்வுயிர்களுமீந்தான (கம்பரா. அகலி 49). 7. To bring forth;ஈனுதல்.--intr. To agree, consent; நேர்தல் (பரிபா. 9, 17.)

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)

அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such persons

கண்ணும் - அவரிடம்

இரவு - iravu   n. இர-. Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள்,552).

இரவாமை -  யாசிக்காது இருத்தால்

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உறும் - உறு - uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).

முழுப்பொருள்
தன்னிடம் இருக்கும் பொருள்களை (பொன், உணவு போன்ற மற்ற செல்வங்களும்) எக்காரணத்திற்காகவும் மறைக்காமல் மகிழ்ச்சியாக விரும்பி கொடையளிக்கும் கண்ணோட்டம் (பிறரிடம் கருணையுடன் இருத்தல்) என்னும் மாண்பு கொண்டோராக ஒருவர் இருந்தாலும் அவரிடம் கூட யாசகம் செய்யாது இருக்க முடியும் என்றால் அது (யாசகம் செய்தலை காட்டிலும்) நூறுநூறாயிரம் முறை சிறந்தாகும். 

இக்குறள் மேலோட்டமாக பார்த்தால் "குறள் 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு" உடன் முரண்படும். ஆனால் சற்று யோசித்தால் நாம் பின்வருமாறு பொருள் கொள்ளலாம்.. [1054] கொடை வள்ளல்கள் கனவிலும் கூட தன்னிடம் இருக்கும் செல்வம் தனை மறைத்து வாழ வேண்டும் என்று நினைக்கமாட்டர்கள். இவர்கள் பிறருக்கு உதவி செய்வதே மிக பெரிய பேறு என்று நினைப்பவர்கள், உணர்ந்தவர்கள். ஆதலால் அத்தகைய கொடையுள்ளம் குணம் கொண்ட வள்ளல்களிடம் சென்று யாசிப்பது என்பது நாம் அவர்களுக்கு செய்யும் கொடைப்போன்றதே ஆம். [1061]. ஆனால் அத்தகைய கொடை வள்ளல்களிடம் யாசகம் செய்யாமல் இருக்க முடியும் என்றால் அது (யாசகம் செய்தலை காட்டிலும்)  நூறுநூறாயிரம் முறை சிறந்தாகும். அப்படியானால் யாசகம் செய்யாமல் வேறு வேலை பார்த்து தீர்வுகாணமுடியுமானால் அதுவே சிறந்தது.

கழைதின் யானையார் என்ற புலவரின் புறநானூற்றுப் பாடல் மிகவும் அழகாக ஈதலையும் இரத்தலையும் பற்றி கீழுள்ள வரிகளால் கூறுகிறது.

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” 

இக்குறளின் கருத்தினையொட்டிய நாலடியார் பாடலொன்று, “மறுமை இம்மை நிலைகளைக் கருதி, கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , பிறரை இரவாமலிருப்பது, அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்” என்கிறது. அப்பாடல்:

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் – வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும். (நாலடி.95)

மற்றொரு நாலடியார் பாடலும், “தமக்கொன்று ஒளியாத உறுதியான மெய் அன்பினையுடைய கண்போன்ற அன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாது வாழ்வது வாழ்க்கையாகும்; இரத்தலாகிய செயலை நினைக்கும்பொழுதே உள்ளம் கரையும்; அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங் காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாதிருக்கும் என்று கேட்கிறது. அப்பாடல்:

கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும்
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை; இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ,
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு? (நாலடி 304)


ஒப்புமை

“ஈந்துவக்கும் தன்மையார்”  -- சம்பந்தர். (ஆக்கூர்.9) 

”கண்போல் நண்பின் கேளிர்” (புறநா 71:15)

“கண்ணே தோழர்”  (பெருங் 2.10:101)
“கண்புரை தோழன்”  (பெருங் 17:161)
“கண்போற் காதலர்” (பெருங் 4.3:61)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , மானம் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.).

மணக்குடவர் உரை 
தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்துகொடுக்குங் கண்போலச் சிறந்தார்மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று.

மு.வரதராசனார் உரை
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

No comments:

Post a Comment