Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்

குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், கருணை,பக்தி,நேசம்  

நாண் - வெட்கம்; மகளிர்க்குரிய கூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு;

ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;), இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல்.

வாய்மையொடு - வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

ஐந்து- இவை ஐந்து குணங்களும்

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

ஊன்றிய - (வி)வேரூன்று; நிறுத்து; நடு; சார்பு, தாங்கு; அழுத்து; நிலைபெறு; இறுகப்பிடி.

தூண் - தம்பம்; கட்டடத்தூண்; பற்றுக்கோடு; தறி; பற்றுக்கோல், ஆதாரம்

முழுப்பொருள்
இவ்வுலகில் சான்றாண்மை என்னும் நன்மதிப்புடன் வாழவேண்டும் என்றால் அதற்கு ஐந்து குணங்கள் தூண் போன்று ஒருவர் இடத்தில் இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்தில் ஒரு முக்கியமான தூண் இல்லையென்றாலும் அது கட்டிடத்தை பாதிக்கும். அது போலவே ஐந்து குணங்களில் ஒரு குணம் இல்லாவிட்டாலும் ஒருவருடைய சான்றாண்மை ஆட்டம் கண்டு விடும்.

அந்த ஐந்து குணங்கள் யாதெனில் 
1) அன்பு (அன்புடைமை) - பிற மனிதர்களிடம் அன்பு/நேசம் செலுத்தி வாழ்வது இன்றியமையாதது ஆகும். அது சமூதாயத்தில் இணைந்து வாழ முக்கியமான ஒன்றாகும் 

"நம்மவர் பாவத்துக்குக் கூச்சப்படுவதில்லை
அன்புக்குக் கூச்சப்படுகிறார்கள்" என்று நித்ய சைத்தன்ய யதி சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.அன்பு செலுத்துவதைப் பற்றி “அகம் மறைத்தல் (சுட்டியைத் தட்டவும்)” என்ற முக்கியமான கட்டுரையில் எழுத்தாளர் ஜெயகோகன் கூறியுள்ளார்

2) நாண் (நாணுடைமை) அறம் அற்ற (தீய) செயல்களை செய்ய வெட்கப்பட்டு, பழிக்கு அஞ்சி தன் செயல்களை மிகுந்த கவனுத்துடன் நல்வழியில் செய்வது. அதுமட்டும் இன்றி (குறள் 137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி) ஒழுக்கத்தை எய்தவில்லை என்றால் இழுக்கை எய்தி நீங்காத பழியினை அடைவர். ஆதலால் பழிக்கு அஞ்சி நாணம் கொண்டு ஒழுக்கத்தை எய்துவர் 

3) ஒப்புரவு (ஒப்புரவறிதல்) உலகநடைக்கு  / உலக ஒற்றுமைக்கு, பிறருக்கு உதவி செய்து வாழும் பெருங்குணமே ஏற்றது, அவ்வாறு வாழ்கின்றவரே உயிரோடு வாழ்கின்றவர். மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன். ”குறள் 214 ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்  செத்தாருள் வைக்கப் படும்

4) கண்ணோட்டம்  (கண்ணோட்டம்) -  பிறரிடம் தாட்சிணியம் காட்டி அன்பு செய்தல் ஆகும். பிறர் மனம் வாட  நடந்துக்கொள்ள கூடாது. கண்ணோட்டத்துடன் இருப்பவனே மனிதன் இல்லையேல் அவன் மிருகம். கண்ணோட்டத்துடன் இல்லாதவன் மரத்திற்கு ஒப்பானவன்.

5) வாய்மை (வாய்மை) - நமது பேச்சில், செயலில், எண்ணங்களில் வாய்மை இருக்க வேண்டும். வாய்மையோடு இல்லை என்றால் பிறருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் தன்நெஞ்சுக்கு தெரியும் - அதுவே கொன்றுவிடும். மனதோடு வாய்மை மொழிகிறவன்  தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையவன்.பொய் சொல்லாது இருத்தலும், அறம் அல்லாதவற்றை செய்யாது இருத்தலும் நன்மை பயக்கும். வாய்மை எனப்படுவது விளக்கு போல் துணையாக வழிக்காட்டியாக சான்றோருக்கு உதவும். “குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

"சான்றோன் ஆக்குதல் தந்தை கடனே" என்று புறநானூற்றில் கூறப்பட்டு உள்ளது.  "குறள் 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" சரி அது என்ன சான்றோன் ஆக்குதல்? கற்றவன், அறிஞன், பணக்காரன், அரசன், மந்திரி என்றெல்லாம் கூறாமல் அது என்ன சான்றோன்? சான்றாண்மை அதிகாரத்தைப் படித்தால் அதற்கான விடை முழுவதமாய் கிடைக்கும். உதாரணமாக சொன்னால் “குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்” . அவ்வதிகாரத்தில் சான்றோன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய குணநலங்கள் கூறப்பட்டு இருக்கும். சரி, அது ஏன் சான்றோன்? ஏனெனில் சால்புடைய இயல்புகளே ஒரு கட்டிடத்தை பல நூற்றாண்டுகள் தாங்கி நிற்கும் தூணாய் அமையும். நான் “Build to Last: Successful Habits of Visionary Companies by Jim Collins" என்ற ஒரு புத்தகத்தை சில ஆண்டுகள் முன்பு படித்தேன். அதில் ஒரு நிர்வாகம் பல ஆண்டுகளாக (ஒரு 80+ ஆண்டுகள்) பல தலைமுறைகளாக நீடித்து நிற்பதற்கு காரணம் என்ற ஆராய்ச்சியைப் பற்றி கூறப்பட்டு இருக்கும். அது செயல்வியூகம், லாபம், பணம், யோசனைகள் (ideas), எல்லோரையும் கவரக்கூடிய தலைவர் என்றவற்றையெல்லாம் அல்ல ஏனெனில் பல வெற்றியடைந்த நிர்வாகங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளன. ஒரு நிர்வாகத்தை பலகாலம் நிலைத்து நிற்க அடிப்படையான தேவை காலாவதி ஆகாத நிர்வாக கொள்கைகள் (Core Values / Ideologies). அதுவே அந்நிறுவனத்தை வழி நடத்தும் வளர்ச்சிப்பெறச் செயும். அதுப்போல் ஒருவருக்கு வாழ்வில் குணநலங்கள் முக்கியம். அதுவே அவனையும் அவன் சந்ததினயரையும் சான்றோன் ஆக்கும். உதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் ஒரு தலைமுறையில் ஒருவர் சான்றோன் ஆக அல்லது பெரும் பணக்காரணாக இருப்பதை காணலாம். ஆனால் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையிலோ ஒரு பெரும் வீழ்ச்சியை காண முடியும். ஏனெனில் அவர்கள் தங்களை சான்றோன் ஆக்கிய அல்லது வெற்றிபெற்றவர்களாக்கிய நற்குணங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி (கற்றுக்கொடுத்து) இருக்க மாட்டார்கள். அதுவே சீராக அதை செய்து இருந்தால் அக்குடும்பம் பல தலைமுறைகளாக முன்னேறிக்கொண்டு இருப்பதை காண முடியும். அதனால் தான், ”குறள் 68  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்றுக் கூறினார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்பு - எல்லார் மேலுமுள்ள அன்பும், நாண் - பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , ஒப்புரவு - வேளாண்மையும் ; கண்ணோட்டம் - எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; வாய்மையொடு - உண்மை யுடைமையும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம்.

"என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி
ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே,"

என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (779), எண்ணோடு முன்னவற்றொடும் ஒன்றியது, இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நில்லாமையின், இவற்றைத் தூணென வுருவகித்தார். சால்பை மண்டபமென வுருவகியாமையின் , இது ஒருமருங்குருவகம். இங்கு எளியார் என்றது செல்வம்,கல்வி, உடல்வலிமை, அகவை முதலிய பலவகையிலுந் தாழ்ந்தவரை.

மணக்குடவர் உரை
அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.

மு.வரதராசனார் உரை
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Love/Kindness/Affection, 
2) Ashamed about Sin / Wrong Things / Bad reputation /, 
3) Benevolence / Helpful Generous to others/ 
4) Compassion /  benevolence / favour and 
5) Honesty / Integrity / Truthfulness; 
These are the five pillars on which perfect goodness rests.

Questions that I ask to the kid
What the 5 noble qualities ? 
What are qualities make goodness?
Why these qualities are pillars? (for the person and also for the legacy to last long (built to last))

No comments:

Post a Comment