குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
பொருள்
மற-த்தல் - 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
மறந்தும் - மறதியுலும், நினைவில் கொள்ளாமல் கூட, உறக்கத்தில் கூட
பிறன் - மற்றவர்களுக்கு
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை
சூழல் - s. (சூழ்) a small-hill; 2. a company; 3. an incarnation, அவதாரம்; 4. a trick or stratagem, தந்திரம்; 5. consultation; 6. deliberation, thought; reflection
s. Thought, reflection, கருத்து. 2. Purpose, intention, design, குறிப்பு. 3. Place, location, position, இடம். 4. Collec tion, group, clump, assemblage, கூட்டம். (p.) See under சூழ், v.
சூழற்க! - நினைக்காதே. அந்த எண்ணத்தை ஒழித்து விடு
சூழின் - மீறி அப்படி நினைத்தால்
அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) - தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,
சூழும் - அவதரித்து, தந்திரத்தால்
சூழ்ந்தவன் - கேடு நினைத்தவனுக்கு, கேடு எண்ணியவனுக்கு
கேடு - கேடு விளைவாகும்
முழுப்பொருள்
பொதுவாகவே நாம் மற்றவருக்கு கேடு நினைத்தல் தவறு. ஆனால் திருவள்ளுவர் ஒரு படி மேலே சென்று மறந்தும் கூட கனவிலும் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காதீர் என்கிறார். ஒரு வேளை மறந்து தீங்கு நினைத்தால் அதனை உடனே மனதில் இருந்து ஒழித்து விடுக. கண்டிப்பாக பிறருக்கு தீங்கு செய்யாதே. அப்படி அல்லாமல் மற்றவர்களுக்கு தீங்கு நினைத்தாலோ அல்லது செய்தாலோ, அறம் அதாவது கருமம் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் கனவிலும் மற்றவருக்கு கேடு நினைக்காதீர்.
உதாரணமாக சொன்னால் ஒரு விவசாயி பயிர்கள் நன்கு விளையவேண்டும் என்பதற்காக ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தால் அதனை உண்ணும் மனிதர்களுக்கு கேடு ஏற்படும். சில காலம் கிடைக்கும் வருமானத்திற்காக இதை செய்தால் சில காலத்தில் அந்த விவசாய நிலம் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தியதால் கெட்டுப்போகும். மேலும் பூச்சிகொல்லிகள் இருப்பதால் பூச்சிகள் பறவைகள் வராமல் மகரந்த சேர்க்கை நடக்காமல் செடிகள் பூக்காது பழங்களையும் தானியங்களை தராது. அதனால் தான் மறந்து பிறன்கேடு செய்யாதே என்றார் திருவள்ளுவர். ஏனெனில் விளைவுகள் உனக்கே ஆபத்தாக முடியும்.
குறிப்பு: இதனால் தான் என்னவோ மனசு படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்களோ என்னவோ. சில நேரம் நான் நினைப்பது உண்டு. நாம் மற்றவர் பற்றி நினைத்துக்கொண்டு நம் வாழ்வை தொலைத்து விடுகிறோம். அவர்களை பற்றிய வெறுப்பை கக்கி நமது மகிழ்ச்சியை சிதைத்துக்கொள்கிறோம். இதற்கு மாறாக நாம் நமது முன்னேற்றத்திலும் ஆக்கப்பூர்வமான செயல்களில் நேரத்தை செலவு செய்தால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கிட்டும் என்று.
ஒப்புமை
”விட்டனன் இலங்கை தன்மேல் விண்ணுற விரிந்த மாடம்
பட்டன பொடிக ளான பகுத்தன பாங்கு நின்ற
சுட்டனபொறிகள் பின்னைத் துளங்கினர் அரக்கர் தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்” (கம்ப.பொழிலிறுத்த 54)
“ஈண்டிவ் வண்டத்துள் இராக்கதர் எனும்பெய ரெல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன்னின்று முடுக
மாண்டு வீழும் இன் றென்கின்ற தென்மதி வலியூழ்
தூண்டு கின்றதென் றடிமலர் தொழுதவன் சொன்னான்” (கம்ப.மூலபல 33)
பரிமேலழகர் உரை
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.).
மணக்குடவர் உரை
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
(நன்றி கவிப்புயல் இனியவன்)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.
தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.
பொருள்: மறந்தும் பிறன் கேடு சூழற்க - (ஒருவன்) மறந்தும் பிறனது கேட்டை எண்ணற்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - (பிறனது கேட்டை) எண்ணின் (அவ்வாறு) எண்ணியவனது கேட்டை அறக் கடவுள் எண்ணும்.
கருத்து: பிறன் கேட்டைக் கருதியவனுக்குக் கடவுள் கேடு நினைப்பர்.
மு.வ உரை
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்
சாலமன் பாப்பையா உரை
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தனை மறந்த நிலையினிலும் பிறர்க்குத் தீங்கைத்
தான் செய்ய ஒரு காலும் எண்ணிடாதீர்
அதை மறந்து தீங்கதனைச் செய்தீர் என்றால்
அறம் செய்யும் தீங்கதனைச் செய்தவர்க்கு
நிதம் இதை மனதினிலே கொண்டு விட்டால்
நிம்மதியாய் வாழ்ந்திடலாம் அதனை விட்டு
அறம் நம்மைச் சூழ்ந்து நின்று தீங்கைத் தரும்
அதை உணர்வீர் யார்க்கும் தீங்கு செய்ய வேண்டாம்
No comments:
Post a Comment