குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]
பொருள்
அலரறிவுறுத்தல் - அலர் + அறிவுறுத்தல்
அலர் - பலரும் அறிந்து புறங்கூறல், பலரறிந்துபழிதூற்றுகை
எழ - எழல் - எழும்பல்; கிளர்ச்சி; தோன்றுதல்; புறப்படுதல்; உதித்தல்; மேற்பட்டுவருதல்; துயரம்.
ஆர் - நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன்; ஆதன்; ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து; ஓசை; ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்.
நிற்கும் - நிலைக்கும்
அதனைப் பலர் - தெரியாத ஒன்றை மற்றவர்கள், பிறர்
அறியார் பாக்கியத்தால் - அறிவதனால் ஏற்படும் நன்மையால்
முழுப்பொருள்
திருமணத்திற்கு முன் காதலர்கள் கூடி புணர்ச்சி கொள்வர். அப்படி புணர்ச்சிக்கொண்ட பின்பும் அவர்களால் எல்லோரிடமும் தங்கள் உறவை முறையாக தெரிவிக்க முடியவில்லை. அவர்களும் ஒன்றாக இல்லை. பிரிந்து இருக்கிறார்கள். அப்படி பிரிந்திருப்பதால் உயிரற்று இருப்பதற்கு சமானம்.
ஆனால் இவர்களுடைய காதலை ஊர் மக்கள் புறங்குறினால் என்ன ஆகும்? அது கிசு கிசு வாக ஏழும். அது உயிரற்ற இவர்கள் காதலுக்கு ஆருயிர் பாய்ச்சி நிலைநிறுத்த ஏதுவாக இருக்கும். ஏனெனில் இது ஊரில் பலருக்கும் தெரியவந்ததால் எனக்கும் அவளுக்குமான உறவு உறுதிபடுத்தும். ஆக மக்கள் புறங்குறுவது இவர்களுக்கு மிகுந்த பாக்கியமே. ஆனால் ஊர் மக்களுக்கு தெரியாது அவர்கள் பேசி பேசி இவர்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்று!!
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது , களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும் , வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான் , நாணுத்துறவுஉரைத்தலின் பின் வைக்கப்ப்பட்டது.]
(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.
மணக்குடவர் உரை
நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அல்லகுறிப்பட்ட பின்வந்த தலைமகனைத் தோழி அலரறிவுறுத்தி வரைவு கடாயவிடத்து, அவன் சொல்வியது.)
அலர் எழ ஆருயிர் நிற்கும்-என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலராயெழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமையான வுயிர் அவளைப் பெற்றது போன்றுமகிழ்ந்து நிலை பெறும்; அதனைப் பாக்கியத்தாற் பலர் அறியார்-அவ்வுண்மையை என் நற்பேற்றினால் அலர் கூறும் பலரும் அறியார்.
அல்லகுறிப்படுதலாவது, இரவுக்குறிக் காலத்தில் தலைமகன் வரவறிவிக்குங்குறி தற் செயலாக நிகழ்ந்து, தோழியுந் தலைமகளுஞ் சென்று தலைமகனைக் காணாது திரும்புதல்.
உயிரினுஞ் சிறந்ததொன் றின்மையான் 'ஆருயிர்' என்றும்; தன் காதலியைப் பெறாமையல் அவ்வாருயிர் மிகத் துன்புற்று நீங்கும் நிலையிலிருத்தபோது, அலரெழுந்து பெறற்கரியவளை எளியளாக்கி அவளைப் பெறுதற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும் ; அதை அலர்கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர் போமாதலானும், அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பேறாக (Blessing in disguise) வாய்த்ததென்றும்; கூறினான். முற்றும்மை செய்யுளால் தொக்கது.
மு.வ உரை
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலித்து விட்டேனாம் என்னை விட்டு
கண்ணாளர் பிரிந்தாராம் ஊரே கூடி
பேதலித்து விட்டேன் நான் என்று சொல்லி
பின்னாலும் முன்னாலும் பேசி நிற்பார்
ஆதரவே அவர் தூற்றல் அதனாலன்றோ
ஆருயிரும் அழியாமல் நிற்கின்றது
காதலினை அவர் பேசப் பேசப் பேச
கவலையின்றி வாழுகின்றேன் நல் வினையால்
நம் காதலின் உயிர்ப்பு.... !!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)
நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!
ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!
காதலிப்பது யாருக்கும் தெரியாது என்றால்....காதல் நிறைவேறாவிடின்..வருத்தமுறும் காதலன் நிலை ஏன் இப்படி ஆயிற்று என யாருக்கும் தெரியாது.ஆனால்..அதுவே ஊருக்கே தெரிந்துவிட்டால்..வேறு வழியின்றி காதல் நிறைவேறியே ஆகும்.இதைத்தான் வள்ளுவன் மறைமுகமாக இக் குறளில் உணர்த்துகிறானோ?
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.
No comments:
Post a Comment