இரப்பன் இரப்பாரை எல்லாம்

குறள் 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன்-இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)

இரப்பன்- யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்
எல்லாம் - எல்லோரிடமும்
இரப்பின் -  மற்றவர்களிடம் யாசகம் செய்வது
கரப்பு -  மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.
கரப்பார் - வஞ்சகம் செய்வோர்
இரவன்மின் - யாசகம் செய்ய வேண்டாம்
என்று - என்று

முழுப்பொருள்
ஒருவர் வறுமையில் யாசகம் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் யாரிடம் சென்று யாசகம் செய்வது என்பதில் ஒரு அளவுகோல் வேண்டும். அதாவது எல்லோரிடமும் யாசகம் செய்யக் கூடாது. யாசகம் என்று வந்தால் மற்றவரை ஏமாற்றுவார் பலர் உள்ளனர். அவர்கள் பலவகையாக ஏமாற்றுவார்கள். உதாரணமாக 1) என்னிடம் பணம்/ பொருள்/ உணவு/ யாசகம் வேண்டி வந்த பொருள் இல்லை என்று பொய் சொல்லுவார்கள் 2) அதிக வட்டிக்கு பணம் கொடுப்பார்கள் 3) ஏமாற்றி பத்திரம் எழுதிக்கொள்வார்க்ள்.  இவர்கள் யாசகம் வேண்டி வந்தவர்களை வஞ்சிப்பார்கள்.  

வறுமையில் வாட வேண்டிய நிலை வந்தாலும் தயவு செய்து இத்தகைய வஞ்சகர்களிடம் யாசகம் செய்யாதீர் என்று வேண்டுகிறார் திருவள்ளுவர்.

“கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறும் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே” (சம்பந்தர்.கோவலூர் வீரட்டம் 2)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)

மணக்குடவர் உரை
பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி.

இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இரப்பின்-இன்றியமையாமை பற்றி இரக்கநேரின்; கரப்பார் இரவன்மின் என்று-தம்மிடமுள்ளதை யில்லையென்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டாமென்று; இரப்பாரை எல்லாம் இரப்பன்-இவ்வுலகில் இரப்பாரையெல்லாம் நான் இரந்து வேண்டிக்கொள்கின்றேன்.

இது ஆசிரியர் கூற்று. இதனால் மேற்கூறிய நெறியின் கடுமையைத் தளர்த்தித் தம்மை நடைமுறைக்கேற்ற வழிகாட்டியாகக் காட்டியுள்ளார். ’கரப்பாரிரவன்மின்’ செய்யுள் நடைபற்றிய இரண்டாம் வேற்றுமைத்தொகை. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின் வருநிலை. இதனால் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

மு.வ உரை
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கையேந்தி நிற்கின்ற ஏழையர் முன்
கையேந்தி நிற்கின்றார் வள்ளுவரும்
பொய்யாகப் பொருள் சேர்த்து வீட்டினுள்ளே
பூட்டியே அதைக் காவல் காப்பார் முன்னே
அய்யா நீர் கையேந்தி நின்றிடாதீர்
அடியேனின் வேண்டுகோள் என்று சொல்லி
கையேந்தல் வறுமையால் என்ற போதும்
கையேந்தும் சரியான இடத்தில் என்று

No comments:

Post a Comment