பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்லது இல்லை பொருள்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொருள்சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

அல்லவரைப் -  இல்லாதவரை (மதிக்கத்தகாதவர்)

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆக - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பொருளாகச் செய்யும் -  ஓர் பொருட்டாக (மதிக்கதக்க) கருதச் செய்ய தக்க

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்லது - தீவினை; தவிர

பொருள் அல்லது - வல்லமை பொருளுக்கு (பணம், நிலம், பொன் முதலியவை) அன்றி

இல்லை இருக்காது, தங்காது

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

இல்லை பொருள் - வேறு ஒன்றுக்கும் இல்லை

முழுப்பொருள்
ஒருவர் எத்தகைய தளத்திலும் (அறிவு, அறம், திறமை) மதிக்கதகாதவராக இருப்பார். ஆனால் அத்தகைய சிலரை இவ்வுலகில் மக்கள் மதிப்பர். அதற்கு காரணம் அவர்களிடம் உள்ள பொருட்செல்வம் காரணமாக இருக்கும். ஆக ஒருவரை மதிக்க செய்யக்கூடிய வல்லமை பொருள் (பணம், நிலம், பொன்) அன்றி வேறு எதுவுமில்லை. ஆதலால் பொருட்செல்வமும் மதிக்கத்தக்கதே. 

பொதுவாக ஆன்மீக வழியிலே வாழ விருப்பமுடையோரில் சிலரும், ஆன்மீகத் துறையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோரில் சிலரும், பொருட் செல்வத்தை அலட்சியம் செய்வதும், அவ்வாறே பேசுவதும் உண்டு. அதன் விளைவாக அத்தகையவர்கள் வாழ்வில் தாழ்வு அடைகிறார்கள். அவர்கள் முயற்சியில் வெற்றிக் காண முடியாமல் தோல்வியடைகிறார்கள். இந்த நிலைமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆழ்ந்தச் சிந்தனையோ அனுபவ அறிவோ இல்லாதவர்கள் ஒரு தலைப்பட்சமாகப் பொருட் செல்வத்தை அலட்சியம் செய்யும் கருத்தை மாற்றி, ஆன்மீக வாழ்விற்குக் கூட பொருட்செல்வம் எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை நடுநின்று ஆராய்ந்து கூறியுள்ளார் திருவள்ளுவர்.

ஒரு குறிப்பிட்ட (தேவையான) அளவு கையில் பொருள் இல்லையென்றால் அந்நபர்க்கு எதிர்மறை எண்ணங்கள் வர வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் அறம் பொருள் இன்பம் என்னும் சமநிலை குலைந்துள்ளது. (சோம்பல் உண்டாக கூட வாய்ப்புகள் அதிகம்).  கையில் பணம் இல்லாமல் ஒருவர் ஓயாது எதிர்மறை எண்ணங்களை சந்திக்க நேரிட்டால் அவருக்கு வாழ்வே சூன்யமாகக்கூடத் தோன்றக் கூடும். (உதாரணமாக ஒருவர் நன்கு சம்பாதித்துவிட்டோ அல்லது நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டோ, சில காலம் கையில் காசு இல்லாமல் ஒரு கையறு நிலையில் இருக்கும்பொழுது அவர் படும் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம்). அத்தகையவர் ஏதோ ஒரு வேலையில் உழைத்து தனது தேவைக்கு ஏற்ற வருவாயை ஈட்டுவார் என்றால் அவருக்கு இந்த எதிர்மறை எண்ணங்கள் குறைவாக வரக்கூடும். அவர் நல்ல ஒரு வேலையில் அல்லது அவருக்கு பிடித்த ஒரு வேலையில் உழைந்த்து தான் நினைக்கும் சம்பாத்தியத்தை ஈட்டினால் நேர்மறை எண்ணங்கள் வர வாய்ப்புகள் அதிகம். பொருள் இல்லாத சமயம் சமநிலை குலையும். அமைதி குறையும். அதுவே தேவையான அளவு பொருளை உழைத்து(/அறம் செய்து) ஈட்டினால் இன்பம் கிட்டும்.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் வாக்கு, உறுதியான நாடும், அதைக் காக்கின்ற அரண் இருந்தாலும், பொருள் ஈட்டமும் தேவை என்பதைச் சொல்லும். தனிமனிதருக்கும், நாடு என்கிற ஒருங்கிணைந்த அமைப்புக்கும் இது பொருந்தும்.

கலித்தொகைப் பாடல் (14:10), “பொருளல்லால் பொருளும் உண்டோ” என்று இக்குறளின் கருத்தை ஒட்டியே வினவுகிறது.

வென்றி ஆக்கலும் மேதக வாக்கலும், 
அன்றி யும்கல்வி யோடழ காக்கலும்
குன்றி னார்களை குன்றென வாக்கலும்
பொன்றும் சாகத்தி னாய்பொருள் செய்யுமே” – என்கிறது சீவக சிந்தாமணிப் 1922 பாடல் எளிதாக எல்லோருக்கும் புரியும்படியாக.

”குலம்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்..........
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ” (வளையாபதி 751)

“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.

மேலும்: கோவை ஞானி
ஒரு பொருட்டாக மதிப்பதற்கில்லாத தீயவரிடமும் செல்வம் சேர்ந்துவிடுகிறது. அப்பொருள் எதையும் சாதிக்கத்தக்க ஆற்றலுடையதாகவும் மாறிவிட்டது. இத்தகையவன் செல்வத்தைப் பிடித்த நோய் - பேய். செல்வச் சேர்க்கை, சமுதாயத்தைப் பிடித்தநோய் - பேய். செலவச் சேர்க்கையே ஒருவனைத் தீயவனாக்கிவிடுகிறது. மதிப்பற்றவனையும் மதிக்கத்தக்கவனாக்கிவிடுகிறது. நற்குணம் முதலியவை அவனுக்கு அலங்காரமாக்கப்படுகின்றன. இவ்வாறு வள்ளுவர் கருதுகிறார்.

வறுமையும் மனிதனைக் கெடுக்கிறது. செல்வமும் கெடுக்கிறது. எந்நிலையில் என்பது பற்றிய கருத்தும் இல்லை. வறுமையால் கெடுவதைக் குறிப்பிடுவர், செல்வத்தால் கெடுவதைக் குறிப்பிடவில்லை. வறுமை நிலையிலும் நற்குணத்தை முயன்றால் காத்துக்கொள்ள முடியும். மனித இயல்புக்கு அத்துனையாற்றல் வேண்டும். அதுபோல ஏற்கனவே தீயவனிடம் சேரும் செல்வம் தான் நோயாகிறது. பேயாகிறது. எனவே, தீக்குணமே வித்து. தீமை, விளைவே மனித இயல்புக்கே முதன்மை தருவது வள்ளுவர் சிந்தனைப் போக்கு.

எழுத்தாளர் ஜெயமோகன் மாயை என்ற கட்டுரையில் உலகியல் பொய் அல்ல. அதற்கு ஓர் இடம் உண்டு என்று ஆழமாக கூறுகிறார்.
உலகியல் செயல்பாடுகள் பொருளற்றவையா? அவ்வப்போது நமக்குத் தோன்றுவது அது. நமது பெரும்பாலான மனநிறைவுகள் மகிழ்ச்சிகளும் உலகச் செயல்பாடுகளில்தான் உள்ளன. ஒரு நல்ல வேலை கிடைத்தால், பணம் கிடைத்தால், நல்ல பொருள் வாங்கினால் உரியவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் மகிழ்கிறோம். அம்மகிழ்ச்சி பொய்யானதா என்ன? அவ்வண்ணம் எண்ணியது நிகழாத போது இவை அனைத்தும் பொய் என எண்ணுவோம் எனில் அது நமது உளச்சோர்வுக்கான ஒரு காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தவிர மெய்யானதல்ல. மகிழ்ச்சி உண்மை, துயரம் மாயை என எண்ணுவீர்கள் என்றால் அது எப்படிப்பட்ட மடமை. உலகியல் என்பது பொய் என்று சொல்லவேண்டும் என்றால் அதன் மகிழ்ச்சிகளும் பொய் என உண்மையாகவே உணரும் மனநிலை இருக்கவேண்டும்.

பாரதி ஒருவேதாந்தியாக நின்று சொன்னதுதான் இது. இவ்வுலகத்திலுள்ள இன்பங்கள், கடமைகள், இலக்குகள் எவையும் பொய்யானவை அல்ல. அவற்றைத் துறந்துவிட்டு நாம் இங்கு வாழவும் இயலாது. உறவுகளும் கடமைகளும் தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்திருப்பதற்கு இத்தகைய சில தத்துவத் தெளிவுகள் பயன்படும். உலகியல் இலக்குகள் முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவு. ஆனால் அவை  மட்டுமே முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவின்மை.

அது ஒரு பொருளுக்கு அதற்கு தகுதியில்லாத பல மடங்கு விலை அளிப்பது போல. நூறு ரூபாய் மதிப்புள்ள சட்டையை நூறு ரூபாய்க்கு வாங்குவதென்பது பொருளுள்ள செயல். முழு வாழ்க்கையையும்  கொடுத்து அந்த சட்டையை ஒருவர் வாங்கினாரென்றால் அது அபத்தமானது. உலகியல் வாழ்க்கைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அளிப்பவர் உலகியல் வாழ்க்கை பொருளற்றது என்ற இடத்துக்கு சென்று சேர்வதில்லை. அது அளிக்கும் இன்பங்கள் இவ்வளவுதான் என்பதை உணர்பவர்கள் அது அளிக்கும் துன்பமும் அவ்வளவுதான் என்பதை வகுத்துக்கொள்ள முடியும்.

உங்கள் உறவுகளில் ஒரு நன்று நடந்தால் அது முழு வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் துள்ளிக் கொண்டாடுவீர்கள் என்றால் உங்கள் உறவுகளில் ஒரு தீது நடந்தால் முழு வாழ்க்கையும் அழிந்துவிட்டதென்ற பெருந்துயரை அடைவீர்கள். முழு வாழ்க்கையின் அர்த்தமே உலகியல் சார்ந்ததென்று எண்ணுவீர்கள் என்றால் உலகியலில் அடையும் தோல்வி முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும் என்றும் அறிவீர்கள்.

உலகியல் என்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அது மனமயக்கல்ல பொய்யல்ல.  மாயை அல்ல. இங்கு நாம் உடல்கொண்டு இருப்பதனாலேயே வேறு வழியில்லாமலேயே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்.  உணவுண்டால் தான் பசி தீருமே ஒழிய எந்த தத்துவத்தை வைத்தும் பசியை தீர்க்க முடியாது. பொருளீட்டினால் தான் வாழ்வே ஒழிய உள எழுச்சிகளைக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. உணவுக்கும் உலகப்பொருளுக்கும் உகந்ததை இயற்றுவது எவ்வகையிலும் பொய்யல்ல. தேவையற்றதல்ல.

ஆனால் அதற்கப்பால் நமக்குரிய அகக்களங்கள் வேறு .நாம்  இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. நாம் அடையவேண்டிய நுண்ணிய இன்பங்கள் ,ஆழ்ந்த நிறைவுகள் பல உள்ளன. நமக்குள் அவற்றை நிகழ்த்திக்கொள்வதற்கு உரிய புறத்தை உருவாக்குவதே உலகியலில் நாம் செய்யவேண்டியது. நமது தெய்வத்தை நிலை நிறுத்தும் கல்பீடம் இது என்று கொள்க. இங்கிவற்றை இயற்றும்போது அகத்தை நம்மை ஆக்கிக்கொள்வதற்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுகிறோம்.

ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை.  உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மனித சமுதாயத்தின் நலத்திற்கும், வளத்திற்கும் எந்த வகையிலும் பயனில்லாத அல்லது மதிப்பேயில்லாத ஒருவரை, பலரும் மதிக்கச் செய்வது பொருட்செல்வமாகும். 

எந்த இடத்திலும், எவராலும் ஒரு மனிதனை மதிக்கும் படி செய்வது பொருட் செல்வமல்லாது மற்றது ஏதுமில்லை. பொருட் செல்வமின்றி வேறு ஒரு பொருளுமில்லை என்று தெளிவுரை கூறுகிறது இந்தக் குறள்.

பொதுவாக ஆன்மீக வழியிலே வாழ விருப்பமுடையோரில் சிலரும், ஆன்மீகத் துறையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோரில் சிலரும், பொருட் செல்வத்தை அலட்சியம் செய்வதும், அவ்வாறே பேசுவதும் உண்டு. அதன் விளைவாக அத்தகையவர்கள் வாழ்வில் தாழ்வு அடைகிறார்கள். அவர்கள் முயற்சியில் வெற்றி காண முடியாமல் தோல்வியடைகிறார்கள். இந்த நிலைமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆழ்ந்த சிந்தனையோ அனுபவ அறிவோ இல்லாதவர்கள் ஒரு தலைப்பட்சமாக பொருட் செல்வத்தை அலட்சியம் செய்யும் கருத்தை மாற்றி, ஆன்மீக வாழ்விற்குக் கூட பொருட்செல்வம் எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை நடுநின்று ஆராய்ந்து கண்ட தெளிவை உலக மக்களுக்குப் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் வரும் 10 குறட்பாக்கள் மூலம் பல கோணங்களில் விளக்கிக் கூறுகிறார் திருவள்ளுவர். 

அதிகாரத்தில் அடுத்துவரும் குறள்கள் இரண்டையும் நினைவிற் கொள்வோம்.

மேலும்: அஷோக் 

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பரிமேலழகர் உரை
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. 
விளக்கம் (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார். இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற் சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள் அல்லவரை-பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும்; பொருளாகச் செய்யும் பொருள் அல்லது-மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லாமல்; பொருள் இல்லை-சிறந்த பொருளொன்று இவ்வுலகத்தில் இல்லை.

மதிக்கப்படாதவர் கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கமில்லார், நோயாளியர், இளஞ்சிறார் முதலியோர். மதிக்கப்படுவாராகச் செய்தலாவது கற்றோரும் அரசனுட்பட்ட அதிகாரிகளும் அவருதவியை நாடச்செய்தல். இழிவு சிறப்பும்மை தொக்கது. இதில் வந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை. பொருட்பின்வருநிலை வரையறைப்பட்டது.

மு. வரதராசன் உரை
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது. 

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

English Meaning - As I taught a kid - Rajesh
On a spiritual sense, we have learnt that money is not the ultimate and money/wealth should not be the ultimate desire of life.
This kural says that, a person who doesn't have money would be considered significant in the society when he earns sufficient money for himself (and his family). And there is no other comparable thing like money which can given such a significance to him in the society. It means that money is essential in the society. Money is essential to have a balanced life and lead family. One has to do duties life and one has to do work in order to earn money ethically. Only then, one will be able to lead a happy life.

Questions that I ask to the kid
Why should we make money?
What are the advantages of money?

1 comment: