Skip to main content

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்

குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

தாம்வீழ்வார் - தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்); தாம் விரும்பும் மகளிர்

மென்றோள்  - மெல்லிய தோளுடைய மகளிர்

துயிலுதல் - உறங்குதல்; தங்குதல்; இறத்தல்; மறைதல்.

துயிலின் - (அவளுடன்) உறங்குவது போல

இனிது - இனிமையானது (சொர்க்கமானது); இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

கொல்  A poetic expletive--as in காணுங்கொல், he will see, அசைச்சொல். 2. A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி. 3. An imitative sound--as in கொல்லெனச்சிரித்தார்கள், they broke out into laughter, ஒலிக்குறிப்பு. 4. s. Suffering, distress, affliction, வருத்தம். (சது.) 5. [With suitable prefixes,] Gold or iron. 6. The blacksmith's caste; a blacksmith, கொல்லன். 7. A mason's trowel, கொல்லற்று. 8. (loc.) Brass or iron, nailed across a door, or gate, for strength, குறுக்குத்தாழ்.

தாமரை - s. the lotus, or water lily. தாமரைக்கொடி; ஒருபேரெண்; பதுமவியூகம்; எச்சில்தழும்பு.

கண்ணான் - கண் உடையவன்

தாமரைக்கண்ணான் - தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக் கண்ணை உடைய அந்த திருமாளின் (வைகுண்ட சொர்க்கம்) உலகம்

முழுப்பொருள்
ஐம்புலனும் (கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள) நுகர்வர்தற்குரிய தனது காதலுக்கு பாத்திரமான மகளிரின் மெல்லிய தோளில் துயிலும் துயிலைவிட இனிதான சொர்க்கம் இருக்குமோ ? அது அந்த தாமரைக் கண்ணையுடைய திருமாளின் சொர்க்கத்தை விடவா சிறியது  இது?

பி.கு: சமீபத்தில் கர்ணாடக சங்கீத பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் ஒரு (நேர்காணல் போன்ற ஒரு) காணொளியை கண்டேன் (Notes to myself - Bombay Jeyashree @ 1:14:53). அதில் அவர் Life of Pi என்ற ஒரு திரைப்படத்தில் பாடிய ஆராரோ ஆரிரரொ பாடல் உருவான விதத்தைப் பற்றி கூறியிருப்பார். அதில் ஒரு ஆராரோ ஆரிரரோ பாடல் முதலில் உருவான பொழுது சங்கீதம் நன்றாக இருந்தது என்று கூறியிருப்பார். ஆனால் அப்படத்தில் இயக்குனர் ஆராரோ ஆரிரரொ வகையான பாடல்களை கேட்கும் குழந்தைகள் சங்கீதத்திற்காக உறங்குவதை விட தாயிடம் அப்பாடல் மூலமாக கிடைக்கும் பாதுகாப்பு உணர்விற்காக உறங்குகின்றன என்று கூறினாராம். 

அப்பேட்டியை நேற்று கேட்டேன். இன்று (11-sep-2021) இக்குறளை யேதேச்சையாக ஒரு கூட்டு வாசிப்பில் வந்தது. அப்பொழுது தொடர்பு படுத்தி பார்த்தபொழுது, ஒரு உறவில் தலைவன் தன் அறம் (கடமை) தனை முறையாக செய்து பொருள் ஈட்டினால் அவன் இன்பத்தை (இன்பத்துபாலை) முழுமையாக அனுபவிக்க முடியும். அப்படி புறச்சூழலும் நன்றாக அமைந்து மனமும் மகிழ்ச்சியாகவும் பாதுக்காப்பு உணர்வுடனும் இருக்குமானால் அப்பொழுது தலைவனும் தலைவியும் ஐம்புலனும் அகமும் அறியுமாறு புணர்ந்தால் அவர்கள் அதில் உணரும் அவ்வின்பம் சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பத்திற்கு குறைவில்லாததாக கருதக் கூடும். அதுவும் கூடலில் உச்சத்தை தொட்டப்பின் அவர்கள் துயிலும் பொழுது நிறைவாக உறங்கும் இன்பமே இன்பம். 

ஒப்புமை
”தாம்வீழ்வார் ஆகம் தழுவுவோர்” (பரி10:31)

“வேய்புரை மென்தோள் இன்துயில்” (குறிஞ்சிப் 242)
“அரிவை தோளிணைத் துஞ்சி” (குறுந் 323:6)
“வேயுறழ் மென்றோள் துயில்பெறும்” (கலி 104:24)
“தோள்புலம் பகலத் துஞ்சி” (அகநா.187:1)
“முருந்தேர் முறுவல் இளையோள்
பெருந்தோள் இன்றுயில் கைவிடு கலனே” (அகநா 193:13-4)

“விரிதிரைப் பெருங்கடல் வளை இய வுலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போன் மேனி
மாண்வரி யல்குற் குறுமகள்
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே” (குறுந்.101)

பரிமேலழகர் உரை
'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
விளக்கம் (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நிலையான பேரின்பத்தைப் பெறற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இங்ஙனம் நைவது தகாதென்று கழறிய பாங்கற்குச் சொல்லியது)

தாமரைக் கண்ணான் உலகு - நீ மிகச் சிறந்ததாக வுயர்த்திக் கூறும் செங்கண்மாலின் வீட்டுலகம்; தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல்- ஐம்புல வின்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில்போல இன்பஞ்சிறந்ததோ?

இஃது ஒரு பெண்ணின்பப் பித்தன் கூற்று;

"தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பா மகல்வானத்
தும்ப ருறைவார் பதி."

(நாலடி.137)

என்னும் போக்கில் அமைந்தது. ஐம்புல வின்பம் நுகர்வார் என்னும் பெயர் "கண்டுகேட் டுண்டுயிர்த்து" என்னுங் குறளினின் றமைக்கப்பட்டது. தாமரைக்கண்ணா னுலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; திருவள்ளுவர் சிவனுந்திருமாலும் ஒன்றென்னும் கடவுண் மதத்தாராதலின், சிவனடியார்க்கும் திருமாலடியார்க்கும் பொதுவாக ஒரே வீட்டுலகங்கொண்டாராதலானும்; பெண்ணின்பச் சிறப்பை உயர்வு நவிற்சியாகக் கூறுதற்கு வீட்டுலகத் தின்பத்தோ டுறழ்வதே யேற்குமாதலானும்; அவ்வுரை பொருந்தாதென்க. இனி, இதனாலே,சிவ வீட்டுலகமும் திருமால் வீட்டுலகமும் வெவ்வேறென்று கொண்டு ஏற்றத்தாழ்வு கூறும், குறுநோக்காளர் கூற்றும் பொருந்தாமை காண்க. இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழ வறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது." என்றும், காலிங்கர் கூறியதும் பெருந்தவறாம். இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கரடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல். திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

மணக்குடவர் உரை
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

மு. வரதராசன் உரை
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
புலர் காலைப் பொழுது. மணம் முடித்துச் சில நாட்களே ஆன இளம் தம்பதியினர். அதிகாலை எழுந்து குளித்து தலை ஈரம் காய துண்டினைத் தலையில் சுற்றிக்கொண்டு துணைவனுக்கு தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கிச் செல்கின்றாள் பனிமலர் போன்று.

உறக்கத்தில் இருப்பவனைத் தொடாமல் எழுப்ப மேஜையினைத் தட்டுகின்றாள். உறக்கம் கலைந்தவனோ நீராடி நிற்கும் நிர்மலமான அழகில் திளைத்து வியக்கிறான்.

தேநீரை மேஜையில் வைத்து அருந்தச் சொல்லுகின்றாள் அழகுப் பெண்.

அருகில் வந்து தரச் சொல்கின்றான் அவன்.

நோக்கம் புரிந்து கொண்டவள் கவனமாக மறுக்கின்றாள்.

ஒன்றும் செய்ய மாட்டேன் உறுதி அளிக்கின்றான் அவன்.

அவளைப் பொறுத்த வரையில் அவனது உறுதி மொழி உறுதியாய் இராது என்று
உணர்ந்திருந்தாள்.

நான் நீராடி விட்டேன் சீக்கிரம் எழுந்து வாருங்கள்.குளித்தீர்கள் என்றால் கோயிலுக்குப்போகலாம் என்றாள்.

என்னை நம்ப மாட்டாயா என்று கெஞ்சினான்.

நம்புகிறாற் போல் நீங்கள் நடந்து கொண்டதில்லையே என்றாள்.

நீ பக்கத்தில் வந்து கொடுத்தால்தான் அருந்துவேன். இல்லையெனில் எழவே மாட்டேன்என்றான் அவன்.

சரி கோப்பையை மட்டும்தான் தொட்டு வாங்க வேண்டும் என்றாள்.

ஆணை என்றான்

அருகில் சென்றாள்

தந்த உறுதியில் உறுதி காத்தான் அவன்

வியந்தாள் அவள்.

கோப்பையைத் திரும்பப் பெறும் போது கைகளைப் பற்றிக் கொண்டான் அவன்.

திருட்டுத்தனம் என்றாள் அவள்.

உரியவளைத் தொடுதல் திருட்டுத்தனமா என்றான்.

கோப்பையை மட்டும் தான் தொடுவேன் என்று சொல்லி விட்டு இது என்ன ஏமாற்றுஎன்றாள் அவள்.

வாங்கும்போது மட்டும்தானே சொன்னேன் என்றான் அவன்.

அவன் தொடாமல் விட்டிருந்தால்தான் தோகை துவண்டிருப்பாள்.

கட்டித் தழுவிக் கொண்டான்.

விட்டு விலக முயற்சிப்பவள் போல் அவளும் கட்டித்தான் கொண்டாள்.

மீண்டும் குளிக்க வேண்டும் என்று அலுப்பது காட்டி அணைத்துக் கொண்டாள்.

என்னை விட்டு விட்டு தனியாகக் குளிக்கக் கூடாது இனிமேல் என்றான் அவன்.

கனிச் சுவைகள் அனைத்தும் கன்னியிடம் பெற்றான்.cமலர்ந்த பெண்ணின் மலர்ந்த கண்கள் மயங்கிச் செருகிக் கொள்ள அந்த மென் தோளில் அவன் சாய்ந்தான். உறங்கியும் போனான்.

தாயாகிப் பெண்ணாள் அவன் தலைக்குள் விரல் கொண்டு கோதி அவனைக் கொஞ்சுகின்றாள். மாட்டேன் என்று சொன்னவுடன் எங்கே சரி என்று எழுந்து விடுவானோ என்று தயங்கியதையும் ஆனால் அவன் தழுவிக் கொண்டதையும் எண்ணி எண்ணி மகிழுகின்றாள்.

மெல்ல விழிக்கின்றான் மென்னகையாள் கோபிக்கின்றாள். கோபமில்லாக் கோபம்.மாட்டேன் மாட்டேன் என்றேன். போங்கள் என்று சிணுங்குகின்றாள்.

அவன் கல கலவென்று சிரிக்கின்றான்.

அவளை வெட்கம் வாட்டுகின்றது. எதற்குச் சிரிக்கின்றீர்கள். இதற்குத் தான் நான்மாட்டேன் மாட்டேன் என்றேன். என்றாள்.

அட கிறுக்கே எதற்கு நான் சிரித்தேன் தெரியுமா. நேற்று வீட்டிற்கு வரும் வழியில்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார் தாமரைக் கண்ணனின் உலகைச் சென்றடைவதுதான் பேரின்பம் என்று. உனது இந்த மென் தோளில் துயில்வதனை விடவா சொர்க்கம் பெரியது என்று கருதினேன். சிரிப்பு வந்தது என்றான். தோளின்தலையை மார்பிற்கு மாற்றினாள் செல்லப் பெண்.

குறள்
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...