குறள் 1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
[பொருட்பால், குடியியல், கயமை]
பொருள்
சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
சொல்லப் - தெளிந்தோர் (கற்றோர்/ சான்றோர்) கூறும் அறிவுரைகளை கேட்டு
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
பயன்படுதல் - payaṉ-paṭu- v. intr. id. +.To be of use or service; பிரயோசனப்படுதல்.சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078).
பயன்படுவர் - பயன்படுவார்கள்
சான்றோர் - சான்றோர்கள், அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.
கரும்பு - karumpu n. [K. kabbu, M. karimpu,Tu. karumbu.] 1. Sugar-cane, a saccharinegrass, Saccharum officinarum. கரும்புபோற்கொல்லப் பயன்படுங் கீழ் (குறள், 1078). 2. TheSeventh nakṣatra; புனர்பூசம் (திவா.)
கரும்புபோல் - கரும்பினைப் போன்று (நசுங்கினால் தான் சாறு தரும்)
கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
கொல்லப் - அடிப்படுவதன் மூலம் துன்பம் தனை அடைந்து
கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
கொல்லப் - அடிப்படுவதன் மூலம் துன்பம் தனை அடைந்து
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
பயன்படுதல் - payaṉ-paṭu- v. intr. id. +.To be of use or service; பிரயோசனப்படுதல்.சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078).
பயன்படும் - துன்பம் மூலமாக கற்று உணர்ந்து பயன் படுவார்கள்
கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.
கீழ் - கீழ் மக்கள்
முழுப்பொருள்
கற்றோர் கூறும் நல்லுரைகளை பின்பற்றி வாழ்வில் நன்மை அடைபவர்கள் சான்றோர்கள். ஆனால் கற்றோர் கூறும் அதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், - இவன் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று இருந்துக்கொண்டு வாழ்வில் பிழைகள் புரிந்து துன்பங்கள் அடைந்து அதன் மூலம் கற்று வாழ்வார் கீழ் மக்கள். அதாவது நசுங்கினால் தான் கரும்பு சாறு தரும். அதுப்போல் துன்பப்பட்டால் தான் அறிவு என்னும் சாறு கிடைத்து பயன் பெறுவர் கீழ்மக்கள்.
இதனால் கற்றோர் கூறும் நல்லுரைகளை பின்பற்றினால் துன்பம் வராது என்று பொருளில்லை. வரக்கூடிய துன்பங்களை ஆராய்ந்து குறைத்துக்கொள்ளலாம்.
இதனை முன்பு ‘கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.' என்று வேறுவிதமாக கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.
ஒப்புமை
“இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை --- விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாம் கீழ்” (நாலடி 279)
“தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா
உளிநீரர் மாதோ கயவர் -- அளிநீரார்க்கு
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்” (நாலடி 355)
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி உரை
தெளிந்தோர் அறிவுரைகளால் விளக்கம் பெற்று வாழ்வில் பயனடைவர் மேன்மக்கள். கீழ் மக்களோ அறிவுரைகளை ஏற்க மாட்டார்கள். அவர் கீழ் நிலைக்கேற்ப செயல்களாற்றி விளைவாகத் துன்பமேற்று, அதன் பின்னரே உணர்ந்து திருந்தி பயன் அடைவார்கள். கரும்பு நசுக்குண்டபின் பயனாவதைப் போல என்பதே இக்க்குறளின் பொருள்.
உதாரணம்; தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடல் உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்கத் தக்க செயலே தவறு அல்லது குற்றம் எனப்படும். அறியாமையாலோ, உணர்ச்சி வயப்பட்டோ தவறு புரியும் ஒருவரைத் திருத்தித் தூய்மையாக்க வேண்டுமென்று அவர்பால் அன்பு கொண்ட ஒருவர் நினைப்பது இயல்பு. திருத்துவதற்காகவே தவறுகளைச் சுட்டிக் காட்டுவார்கள்; திருந்தும் முறைகளையும் கூறுவார்கள். தான் திருத்தம் பெற்று உயர வேண்டுமென்ற மேன்மக்கள் பிறர் எடுத்துக் காட்டும் விளக்கச் சொற்களை ஏற்றுக் கொள்வார்கள். நன்றி கூறிச் சிந்தனை செய்து அவ்வுயர் வழியைக் கடைப்பிடித்து வாழ்வில் வளம் பெறுவார்கள். ஆனால், கீழ் மக்கள் மனநிலை வேறு. தன்னிடம் பிறர் குறை அல்லது தவறு காண்பதையே பொறுக்க மாட்டார்கள். தவறுணர்த்துபவர் அல்லது அறிவுரைகளை கூறுவோரை உணர்ச்சி வயப்பட்ட சொற்களால் உளம் நோகப் பேசுவார்கள். அத்தகைய அறிவு மயக்கத்தால் தவறுகள் பெருகிக் கொண்டேபோகுமல்லவா ? அவர்கள் எவ்வாறு திருந்துவார்கள் ? அவர்கள் திருந்தி நலம் பெறும் வழியே இல்லையென்று பொதுவாகப் பலரும் எண்ணுவர். அத்தகையவரும் திருந்தி நலம் காண வாய்ப்பு உளது என்று அறுதியிட்டுக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை.
எந்தச் செயலுக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு. அவர் செய்து கொண்டே போகும் தவறுகள் அல்லது குற்றங்கள் பெருகப் பெருக, அதன் விளைவாகத் துன்பமும் பெருகத்தானே வேண்டும். அத்தகைய துன்பங்களால் தாக்கப்பட்டுவருந்தி நசுங்குண்டபின் அவருக்கும் ஒரு விழிப்பு ஏற்படும்; சிந்தனை மலரும். தான் படும் துன்பங்களுக்குத் தன் தவறான செயல்களே காரணம் என்ற உண்மையை உணர்வார்; பின்னர் தானே படிப்படியாகத் திருந்துவார். தெளிந்தோர் சொல் கேட்டு அன்றே திருந்தியிருந்தால் துன்பங்களை ஏற்காமலே நலம் பெற்றிருக்கலாம். அதைப் புறக்கணித்ததால் தவறு செய்து, விளைவாகத் துன்பம் ஏற்று கரும்பு நசுங்குண்டபின் சாறு வெளியேறிப் பயனடைவது போல், கீழோரும் துன்பம் ஏற்ற பின்னரே உணர்ந்து நலம் பெறுவர் என்ற இக்கருத்து, இந்தக் குறளில் செறிந்துள்ளது.
இக்குறளுக்கும் என் கருத்துக்கு மாறாக பலர் விளக்கம் கூறக் கேட்டிருக்கிறேன். மேலோர்களாயின் சொல்லின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழோரை துன்புறுதித்தான் பயன் காண வேண்டும் என்றே விளக்கம் கூறக் கேட்டிருக்கிறேன். அன்பும் அருளும் ததும்பும் திருக்குறளார் கருத்து, இவ்விதம் இருக்காது என்பதே என் துணிவு.
சொல்லால் திருத்தம் பெற்று நலமடைவார்கள் மேலோர். தவற்றின் விளைவாக நோயுற்றோ, இழப்பினாலோ வருந்தி உணர்ந்த பின்னரே பயன் பெறுவார் கீழோர் என்பதே பேரறிவு பெற்றோர் கருத்தாக இருக்க வேண்டும்
இது கயமை என்ற தலைப்பில் கீழோர்களின் இயல்பைக் கூறுகிறதே தவிர அவர்களைப் பயன்படுத்தும் விதம் பற்றி மற்றோர்க்குக் கூறப்படவில்லை என்பதையும் சிந்திக்க.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் - மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழாயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர்.
விளக்கம்
(பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சான்றோர் சொல்லப் பயன்படுவர் - மேன்மக்கள் வலியாரும் மெலியாரும் சென்று தமக்கு வேண்டிய தொன்றைக் கேட்டவளவிற் கொடுத்துதவுவர்; கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும் - ஆனால், கீழ்மக்களோ; வலியார் சென்று கரும்பை ஆலையில் வைத்து நெறித்துப் பிழிந்தாற்போல, வருத்தி நெருக்கிய போதே ஒன்றை வருந்தித் கொடுப்பர்.
கீழ் மக்களின் இழிவு விளங்கித் தோன்றுமாறு மேன்மக்கள் இயல்பும் உடன் கூறினார். இது வேற்றுமையணி. 'கீழ்' ஆகுபெயர்.வலியாரும் வருத்தினாலன்றிக் கயவர் கொடார் என்பது இக்குறளாற் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை
பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள். அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள். இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.
மு.வ உரை
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
சாலமன் பாப்பையா உரை
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
Comments
Post a Comment