Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்

குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி.

கற்றீண்டு - (மெய்ப்பொருளை) கற்று (அனுபவம் மூலம்) அறிந்தவர்களிடம் கற்று

ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம்; இம்மை; விரைவு; புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது.

மெய்ப்பொருள் - வாழ்வின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

கண்டார் - உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

தலைப்படுவர் - செல்லும் வாழ்வின் பாதை

மற்றீண்டு - மீண்டும் இந்த உலகில் வந்து வாழ பிறக்க

வாரா - வாராத

நெறி - வழியாக தேர்ந்தெடுப்பார்.

முழுப்பொருள்

வாழ்வில் மெய்ப்பொருள், நிலையான பொருள் என்றவற்றை உணர கற்க தக்க அற நூல்களும், ஆன்மீக நூல்களும் இன்றியமையாததாகும். அதைப்போல், அவற்றை கசடற (faultlessly. கசடு - குற்றம்) கற்க, அதனை கற்று, பட்டு உணர்ந்த ஒருவரை குருவாக கொண்டு கற்பது இன்றியமையாததாகும்.

அப்படி ஒரு குருவிடம் மெய்ப்பொருள் யாது என்று கற்று உணர்ந்தவர், பின்பு அதனை மனதில் அவதானித்து தியானித்து கொண்டே இருந்தார் என்றால் அவர் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணும் வழியை தேர்ந்தேடுப்பார். அதில் பயணிப்பார்.

அப்படி மெய்ப்பொருள் வேண்டி / தேடி செல்வார் மீண்டும் மானுட வாழ்வில் பிறவி எடுக்க மாட்டார் என்று சொல்கிறார் திருவள்ளுவர். 

ஒருவர் நூல்களை படித்தால் மட்டும் போதாது. மெய்ப்பொருள் அறிய, அவனை அறிய, கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) ஆகியவற்றைக் கொள்ள வேண்டும். 

கண்டார் என்று சொன்னது எதற்கு என்றால் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணலாம், இதற்காக மற்ற உலகிற்கு (மடிந்து) செல்ல வேண்டியதில்லை

இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இந்தப் பிறவியிலேயெ மெய்ப்பொருளை காண, அதற்கான வற்றை கற்று, அந்த வழியைத் தேடி செல்வோர் (பெய்ப்பொருளை அடைவார், ஆதலால்) மீண்டும் பிறவி எடுத்து மெய்ப்பொருள் கற்க வேண்டிய அவசியமில்லை என்று. 

ஆத்திச்சூடி
பேதைமை அகற்று.
பெரியாரைத் துணைக் கொள்.
சான்றோர் இனத்து இரு.
மேன்மக்கள் சொல் கேள்.
உத்தமனாய் இரு.
வித்தை விரும்பு.
எண் எழுத்து இகழேல்
சேரிடம் அறிந்து சேர்.
தக்கோன் எனத் திரி.

பையலோடு இணங்கேல்.

மேலும்: அஷோக்
மேலும்: ஞானதானம்

திருவாசகத்தில் வரும் சிவபுராணத்தில், “மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே” என்பார் மாணிக்கவாசகர்.  

அறநெறிச்சாரப்பாடல் ஒன்று, “அறிவிற் கறிவாவ தென்னின் மறுபிறப்பு மற்றீண்டு வாரா நெறி” என்று இதே கருத்தைச் சொல்கிறது. 

கம்பரும், “ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபுநண்ணினர் வீடு என” என்கிறார். குற்றம் நேர்ந்ததால், இம்மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள், பின்பு முழு ஞானம் பெற்று, தங்கள் உலகமாகிய வீட்டினை அடைந்தார்கள் என்று இக்குறளை ஒட்டியே சொல்லியுள்ளார்.

பரிமேலழகர் உரை
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். 

விளக்கம்
('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருளுணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர்.

உலகநூற் கல்வி போன்றே மெய்ப்பொருட் கல்வியும் பல்வேறு நிலையிற் பல்வேறு ஆசிரியர்பாற் கற்றுங் கேட்டுமறிய வேண்டியிருப்பதால் 'கற்று' என்றும், நிலவுலகிலன்றித் தேவருலகில் வீடுபேற்று முயற்சிக்கிடமின்மையால் 'ஈண்டு' என்றுங் கூறினார். 'ஈண்டுவாரா நெறி' வீட்டு நெறி. வீட்டையளிப்பது இறைவனேயாதலால் அவனை யறிவதற்கு ஆம்புடைகள் (உபாயங்கள்) கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) என நான்காம். கேள்வியும் கல்வியுளடங்குமாதலின் அவையிரண்டும் இங்கே ஒருங்கே கூறப்பட்டன.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

பொருள்: கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் -(கற்கத் தக்க நூல்களைக்) கற்று இவ்வுலகின்கண் மெய்ப்பொருளைக் கண்டவர், மற்று ஈண்டு வாரா(த) நெறி தலைப்படுவர் - திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழியை அடைவர்.

அகலம்: மெய்ப்பொருளைக் காண்டற்குக் கல்வி இன்றியமையாத தென்பதைக் குறிப்பதற்காகக் ’கற்று’ என்றார். கற்கத் தக்க நூல்களாவன, அறநூலும் ஆன்ம நூலும். இவ் வுலகத்தைவிட்டு வேறு உலகத்தில் மெய்ப் பொருளைக் காணலாகுமோ என்று நினைப்பாரைக் கருதி, இவ் வுலகின் கண்ணேயே மெய்ப்பொருளைக் காணலாகும் என்றார். மெய்ப்பொருளைக் கண்டார் பிறப்பு இறப்புக்களினின்று நீங்குவர் என்பது ஒரு தலையாகலின், மற்று ஈண்டு வாராநெறி தலைப்படுவர் என்றார். வாராத என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. இக் குறளால் மெய்ப் பொருளை இவ் வுலகத்தின்கண்ணே காணலாகும் என்றார்.

கருத்து: மெய்ப் பொருளைக் கண்டார் பிறப்பினை அடையார்.

நன்றி: திருவருட்பா
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

பஜகோவிந்தமும் மறுபிறவியும்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே 

புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு
புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு
புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது
க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

மணக்குடவர் உரை
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

இந்த உலக தோற்றத்தின் உண்மையை, உயிர் சுமந்து வாழும் வாழ்க்கையின் உண்மையை, ஆராய்ந்து கற்று அறிவதே மெய்ப்பொருளை அறியும் வழியாகும். உலகில் இயங்கும் பொருள் இயங்காப் பொருள் என இருவகைப் பொருட்கள் இருக்கின்றன. இயங்கும் பொருட்களே, இயங்காப் பொருள்களை இயக்குகின்றன. இந்த உண்மையைக் கண்ட மனிதன், இவ்வுலகையும் உலக உயிர்களையும் இயக்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமே என ஆராய்ந்தான். உலகத்தை இயக்கும் அப்பெரும்பொருளாகிய சக்தியை இயக்கி என்றான். இயக்கியோடு இசைந்தவன் இயக்கன் ஆனான். அண்ட கோளங்களை இயக்கும் அம்மெய்ப் பொருளை இன்றைய மனிதர்களாகிய நாம் கடவுள் என்கிறோம்.

அந்த மெய்ப்பொருளை அறிந்தோர், இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து சுழழும் வழியில் வராது வேறு வழியுள் செல்வர். அந்த மாற்றுவழியை, அதாவது கடவுளை அடையும் வழியை திருவள்ளுவர் வாராநெறி என அழைத்துள்ளார். வாரா நெறி என்பது திரும்பவும் பிறவி வராத வழி.  நாம் மீண்டும் பிறவி எனும் வழியே வரத்தேவை இல்லை. அதனாலேயே அதனை நம் முன்னோர் வாராநெறி என அழைத்தனர். 

 மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்
வாரா வழியருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுதாய்...............”                                   -(ப.திருமுறை: 8: 8: 2) 
என திருவள்ளுவர் கூறிய வாராநெறியை, வாராவழி எனச் சொல்கிறார்.

மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து வராதிருக்கும் வழியில் செல்ல வேண்டுமானால், உலகின் மெய்ப்பொருள் எது என்னும் உண்மையைக் கற்று அறியுங்கள் என இக்குறள் கூறுகிறது.

நன்றி: ஆத்திகம்
ஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.
அதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.
அவர் சொல்றதைக் கேட்டுக்க.
அப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.
ஒரு அறிவு வரும்.
அத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ.
அவ்ளோதான்!

No comments:

Post a Comment