குடியாண்மை யுள்வந்த குற்றம்

குறள் 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
[பொருட்பால், அரசியல், மடியின்மை]

பொருள்
மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய், ஓர்விதவலை
மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை; 

குடி  - குடும்பம், குலம்; வீடு; ஊர்; வாழிடம், ஆட்சிக்குட்பட்டகுடிகள்

ஆண்மை - ஆளும்தன்மை; வெற்றி; வலிமை; அகங்காரம்; உடைமை; வாய்மை. 

வந்த - வருதல்

ஆண்மையுள் வந்த - ஆளும் பொழுது வந்த / அகங்காரத்தால் வந்த

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

குற்றம் - குற்றம் தனை

ஒருவன் - ஒருவன் 

மடியாண்மை - சோம்பலை / நோய்களை (நெருங்க விடாமல்) ஆள்வது

மாற்று - வேறுபடுத்துகை; ஒழிக்கை; கொடியமருந்து, நஞ்சுமுதலியகுற்றத்தைநீக்கக்கொடுக்கும்மருந்து; பண்டமாற்று; விலை; வண்ணான்வெளுத்தஉருப்படி; மாற்றிஉடுத்தும்சீலை; பொன்வெள்ளிகளின்உரைமாற்று; தங்கம்; எதிர்; உவமை; வலிமை; வண்ணம்.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

மாற்றக் கெடும் - (சோம்பல) நீக்கினால் / மாற்றினால் அழியும்

முழுப்பொருள்
ஒருவரது குடும்பத்திலும் (அரசருக்கு குலம், ஊர், ஆட்சி), அவரது ஆளும் திறமையிலும் கேடு வந்துவிட்டால் ? அத்தகைய கேட்டினை மாற்ற, நீக்க ஒரு வழிதான் உள்ளது.  அது அவனிலும், அவன் குடியுள் புகுந்த சோம்பலை நிக்குவதே ஆகும். 

இங்கு நாம் குறிப்பாக நோக்க வேண்டியது “யுள் வந்த’ என்று திருவள்ளுவரின் சொல்லாட்சி. ’உள்ளே வருவது குற்றம்’ ஆயின் அதற்கு சோம்பல் உள்ளே வந்ததாக பொருள்.

மேலும்: அஷோக்

ஆத்திச்சூடி
சோம்பித் திரியேல்
சையெனத் திரியேல்
கௌவை அகற்று
தோற்பன தொடரேல்

பரிமேலழகர் உரை
ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந்தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.

விளக்கம்
(மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏது வாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத் தொகை. 'அவற்றின் கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)

மணக்குடவர் உரை
குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் மடியாண்மை மாற்ற - ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கவே ; குடி ஆண்மையுள்வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும்.

இஃது ஓரரசன் குற்றமுந் திருத்தமும். மடியாண்மை மடியை ஆளுந்தன்மை. 'குடியாண்மை' உம்மைத்தொகை.இனி,

'குடி ஆண்மையுள் வந்த குற்றம் -நெடுங்கால மாகத்தொடர்ந்து வரும் ஒரு குடியுள்ளும் அதன் தலைவரின் ஆண்மையுள்ளும் நேர்ந்த குற்றங்களால் விளைந்த கேடுகள்; மடியாண்மை - அவற்றிற்குக் கரணியமாயிருந்த சோம்பல் தன்மையை ; ஒருவன் மாற்றக் கெடும் - ஊக்கமும் பெருமுயற்சியு முள்ள ஒரு தலைவன் நீக்கியவுடன் நீங்கும்'. என்றுமாம்.

இதற்குக் கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்க்கு அடங்கியிருந்த சோழர்குடியில் தோன்றிய விசயாலயன், கி.பி.850 போல் தஞ்சையைக் கைப்பற்றி மீண்டும் தன் குடியுயர்வை நிலைநிறுத்தியமை, நல்லெடுத்துக்காட்டாம். குடிமைக் குற்றம் ஒற்றுமையின்மையும் உட்பகையும் சேரபாண்டியரொடு சேராமையும் .ஆண்மைக் குற்றம் போர் முயற்சியின்மை. இஃது ஓரு குடியின் குற்றமுந் திருத்தமும்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

No comments:

Post a Comment