இன்மை இடும்பை இரந்துதீர்

குறள் 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் 
வன்மையின் வன்பாட்ட தில்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

இடும்பை - துன்பம், தீமை, 
- ஏமஞ்சாலா விடும்பை (தொல். பொ. 50). 
- நோய். [கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056).]
- தரித்திரம். [இடும்பையா லடர்ப்புண்டு (திவ். பெரியதி. 1, 6, 5)]
- அச்சம்

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரந்து - கடன் பெற்று, பிச்சை எடுத்து, யாசகம் செய்து
இரப்பு - யாசிப்பு
இரவலர், இரவோர், இரப்போன், பரந்தவர் (இரந்து திரிவோர்)

தீர் - tīr   VI. v. t. finish, complete, முடி; 2. accomplish, perfect, பூர்த்தியாக்கு; 3. settle, decide, தீர்மானி; 4. expiate (as sin), cure (as sickness), allay (as thirst) நீக்கு.

தீர்வாம்  + என்னும் - தீர்ப்பது. வறுமையை ஒழிப்பது என்கிற எண்ணம்

என்னும் - என்கிற

வன்மை - வலிமை, கடினம், வன்சொல் / கடுஞ்சொல், ஆற்றல், வன்முறை; வலாற்காரம், சொல்லழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து

வன்பாடு - முருட்டுத்தன்மை, வலிய தன்மை, மரியாதையின்மை, காட்டுத்தனம்

முழுப்பொருள்
வருமையினால், ஏழ்மையினால் வரும் துன்பத்தை இரவல் பெற்று அதாவது பிறரிடம் கடன் பெற்று யாசகம் செய்து தீர்த்து விடலாம் என்கிற ஒரு மிக மோசமான் எண்ணத்தை, செயலை, மனப்பான்மையை மிகவும் முரட்டுத்தனமான நெறியில்லாத ஒழுக்கமற்ற செயலாக திருவள்ளுவர் கூறுகிறார். 

ஒருவரின் ஏழ்மையை, வறுமை ஒருவர் போக்க வேண்டுமானால், தீர்க்க வேண்டுமானால் அவர்கள் தங்களின் சொந்த முயற்சியில் செய்ய வேண்டும். சொந்த முயற்சி செய்யாது பிறரிடம் யாசகம் செய்து இரவல் பெறுவது கொடுமை என்கிறார்.

வறுமைத் தீர்தற்கு நெறி இரவன்று என்பது கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி, 1) ஒருவர் உழைக்காமல் முயற்சி செய்யாமல் ஒன்றை அடைவார் என்றால் அவர்கள் எந்நாளும் அவர்கள் கண்ட வறுமையின் துயரத்தை உணர மாட்டார்கள். வறுமையில் இருந்து பாடம் கற்க மாட்டார்கள்.  2) மேலும், அவர்களின் செலவுகளையும் குறைக்க மாட்டார்கள், மேன்மேலும் கடன் தான் வாங்குவார்கள். தவறை உணரமாட்டார். முதலில் ஒருவரிடன் பின்பு மற்றொருவரிடம் என்று மாறி மாறி கடன் வாங்குவார். இன்னும் அதிகமாக கடனாளியாகதான் ஆவார். 

”.................இலன் என்னும்
வன்மையின் வன்பாட்ட தில்” (நான்மணி.30)

ஆத்திச்சுடி
ஏற்பது இகழ்ச்சி 

உதாரணம்
எனது வாழ்நாளில் எனக்கு மிக அருகில் (உறவு / பக்கத்து வீடு / நண்பர் / குடும்ப நண்பர் / அலுவலக நண்பர்) ஒருவர் இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக எனக்குப் படுகிறது. அதனை நேராக நெத்தியில் அடித்தாற்ப் போல சொல்லி உள்ளார் திருவள்ளுவர். அவர்களின் செயல் ஒரு பாடம் என்றே நினைக்கிறேன் மற்றபடி ஏளனம் அல்ல. 

கணவன் மனைவி இருவரும் மிக நல்ல ஒரு வேலையில் உள்ளவர்கள். பணி இயல்பாகவே மிக நல்ல சம்பளம். இருவரும் சம்பாத்திக்கையில் அவர்களின் வருமானம் ஒரு குடும்பம் நடத்துவதற்கு மிக அதிகம்.  ஆனால் அவர்கள் மிகவும் உல்லாசமான ஒரு வாழ்வை பின்பற்றினார்கள். கேளிக்கைக்கு அளவே இல்லை. சினிமா, வாடகை கார் (மகிழூந்து) எடுத்து ஊர் ஊராக அலைவது, பார்ப்பதை எல்லாம் வெட்டி ஜம்பத்திற்க்காக வாங்குவது என்று. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு செமிப்பு என்று எதுவுமே இல்லை. ஒரு நாளும் செமிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களின் கேளிக்கைகளை குறைக்கவே இல்லை. ஆதலால் கடன் உயர்ந்துக்கொண்டே இருந்தது. மூச்சுமுட்டும் அளவிற்கு. 

ஒருநாள் உட்கார்ந்து யோசித்து கடன் அடைக்க திட்டமிட்டு இருந்தால் அது ஐந்தே வருடங்களில் அடைந்து இருக்கும். ஆனால் அப்பொழுதும் பாடம் கற்கவில்லை. பார்ப்போரிடம் எல்லாம் கடன் கேட்டார்கள். அதுவும் எத்தனை வட்டியாக இருந்தாலும் பறவாயில்லை. ஒருவர் கடன் தற மறுத்தால் என்றால் அவரை ஏசுவது. நான் உனக்கு அது செய்தேன் இது செய்தேன் நீ எனக்கு உதவி செய்ய மறுக்கிறாய் என்று. ஒருவர் எப்படி அவர் கேட்டும் பெரிய தொகையை தருவார் அவரிடம் அவ்வளவு இல்லாத பொழுது. இவ்வளவு கடன் இருந்தும் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் இவர்கள் பேருந்தில் செல்ல மாட்டர்கள் காரில் தான் செல்வார்கள். மொத்தமாகவே பேருந்தில் 200-300 ரூபாயில் முடிப்பதை விட்டுவிட்டு காரில் 3000-4000 ரூபாய் செலவு செய்வார்கள். அதுவும் உடம்பு நன்றாக இருக்கும் பொழுதே. இப்படி செலவு செய்தால் கடன் எங்கே குறையும் ?

யாரிடமாவது கடன் வாங்கி வட்டி கட்டிவிடலாம் இந்த மாதம் என்றவாரு ஊர்சுற்றி கடன். ஒரு கட்டத்தில் ஊரை விட்டே வெளியே செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளபட்டார்கள். சென்றார்கள். ஆயினும் கடன் குறைவில்லை. பிரச்சனைகள் குறையவில்லை. இருப்பினும் கார்ப் போன்ற கேளிக்கைகள் குறைவில்லை. இதனை எடுத்து உரைத்தவர்கள் எல்லோருக்கும் பாட்டு கிடைத்தது தான் மிச்சம். நீயா கொடுக்க போகிறாய் ? நீயா அடைக்க போகிறாய் என்ற ஏளனம் வேறு. அதுமட்டுமின்றி அவர்களின் சமகால மக்கள் நேர்மையாக ஒழுக்கமான ஒரு வாழ்வில் முன்னேறி இன்று வீடு வசதியுடன் இருப்பதை கண்டால் அவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி வேறு. மனதில் அப்படி ஒரு எரிச்சல். 

ஆகவே தான் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் வன்மையின் வன்பாட்ட தில் என்று. 

ஆனால் எனக்கு மற்றுமொரு உதாரணமும் தெரியும். ஒரு நாணயமான பக்கத்து வீட்டுகாரர். இரண்டு சீட்டுகள் ஏலம் நடத்துபவர். அதில் வரும் சிறிய வருமானம் அவருக்கு சிறியதாக உதவியது. துர்திஷ்டவசமாக ஒருவரிடம் பன்னிரண்டு சீட்டிற்கு ஏமாந்து போனார். அதுவும் சீட்டின் துவக்கத்திலேயே. மாதம் கிட்டதட்ட 24000 ரூபாய் கட்ட வேண்டிய நிலைமை. அதுவும் 2 வருடத்திற்கு. அவருக்கு என்று வேறு நிதியோ சொத்தோ இல்லை. ஆனால் யாரிடமும் அவர் கடன் கேட்கவில்லை. அவருடைய எல்லா பொருள்களையும் விற்று சரி செய்தார். அந்த இரண்டு சீட்டுகள் முடிந்தவுடன் வேறு சீட்டுகள் துவங்கவில்லை. அவரின் சொந்த முயற்சியால் யாரிடமும் யாசம் கேட்காமல் சமாளித்தார். இன்றும் தான் அந்த துன்ப நாட்களின் துயரத்தை உணர்வார். ஆனால் அதில் இருந்து நேர்மையாக மீண்டு வந்ததில் கர்வமும் கொள்வார். தவறில்லையே

பரிமேலழகர் உரை
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. 


விளக்கம் 
(நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமைத் தீர்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.)

மு.வரதராசனார் உரை
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

மணக்குடவர் உரை
வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது. 

சாலமன் பாப்பையா உரை
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

No comments:

Post a Comment