Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_133. Show all posts
Showing posts with label Athikaaram_133. Show all posts

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

 

குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

காமத்திற்கு - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

அதற்கு அதற்கு

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், 
காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை.

முயங்கப் - முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

பெறின் பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதலிற்கு இன்பம் ஊடல். ஏனெனில் ஊடலின் பின் கூடல் சுவைக்கும். ஆனால் அந்த ஊடலுக்கு எது இன்பம் தெரியுமா? ஊடலின் தன்மையை அறிந்து அதன் அளவை அறிந்து தக்க நேரத்தில் ஊடலை தீர்க்க வேண்டும். அப்படித் தக்க நேரத்தில் ஊடலை முடித்து தலைவனும் தலைவியும் தழுவி முயங்கி புணர்கையில் கூடல் இன்பமாய் அமையும் சுவைக்கும். 

கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரை பரிபாடல், கலித்தொகை, நாச்சியார் திருமொழி, கம்ப இராமாயணம் இவற்றிலிருந்து பல மேற்கோள்களை ஒப்புமைப் பாடல்களாகக் காட்டியிருக்கிறது.

கலித்தொகைப் பாடலொன்று (92:7.9), இக்குறளின் கருத்தையே இவ்வாறு கூறுகிறது:

“வீழ்வார்ப் 
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் 
தருதல் தகையாதான் மற்று” 

நாச்சியார் திருமொழி (4:11)  பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இவ்வாறு கூறும்:

“ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை 
  நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர் 
  கூடலைக் குழற் கோதைமுன் கூறிய”

ஒப்புமை
”வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய்
களிப்பர் குளிப்பர் காமம் கொடிவிட
அளிப்ப துனிப்ப ஆங்காங் காடுப”  -பரிபாடல் (6:102.4)

"ஊடல் ஊடுறக் கூடுவார்” (கம்ப, நகரப் 56)
“ஊடவும் கூடவும் உயிரின் இன்னிசை” ((கம்ப, நகரப் 66)
“ஊடல் வந்து கூட” (கம்ப, விராதன் 65)
“ஊடல்,
கூறன் மாந்தினர் அனையவர்த் தொழுதவர் கோபத்து
ஆறன் மாந்தினர் அரக்கியர்க் குயிரன்ன அரக்கர்” (கம்ப, ஊர்தேடு 31)

மேலும்: அஷோக் உரை
 
பரிமேலழகர் உரை
(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.) ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க

மணக்குடவர் உரை
காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

சாலமன் பாப்பையா உரை
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

 

குறள் 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
ஊடல் ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

ஊடுக ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு.

ஒளியிழை -  ஒளி பொருந்திய அணிகளை அணிந்த என் காதலி

யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

இரப்ப - இரப்பு - வறுமை; பிச்சை யாசிக்கை.

நீடுக - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்.

மன்னோ - வாழ்வேனா ?

இரா - இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை

முழுப்பொருள்
ஊடலின் பின் கூடல் என்ற சுவை அறிந்தவன் தலைவன். ஒளிபொருந்திய அணிகலங்களை அணிந்த தலைவி தன்னிடம் ஊட வேண்டும் என்று விரும்புகிறான். அப்பொழுது, தான் தலைவியை சமாதானப்படுத்தி பின்பு அவளுடன் முயங்கி (ஊடலிற்குப் பின்னான) கூடலின் (கூடுதல்) சுவையை அடையமுடியும். அப்படிக் கூடுகையில் இந்த இரவு பொழுது நீளவேண்டும் என்று யாசிப்பானாம்/வேண்டுவானாம் தலைவன். ஏனெனில், அப்பொழுதுதான் தலைவியுடன் கூடல் நீளுமாம். கூடல் நீண்டால் சுவையும் நீளுமல்லவா?

வள்ளுவர் மிகவும் அழகாக “யாமிரப்ப” என்ற சொல்லை இடைச் சொல்லாகப் பொருத்தி, அதைப் பின்வரும் வரிக்கும், முன்வரிக்கும் ஒருங்கே பொருந்துவதாக அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது தம் காதலி, தாம் வேண்டி அமைதிப்படுத்திக் கூடுவதற்கு ஏற்ப ஊடவேண்டும் என்றும், தாம் வேண்டிக்கொள்வதற்கு இணங்க, இரவுப்பொழுது நீடிக்கவேண்டும் என்று இருவிதமாகவும் அச்சொல் பொருந்துவது அழகு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).

மணக்குடவர் உரை
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

மு.வரதராசனார் உரை
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

சாலமன் பாப்பையா உரை
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

 

குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.
ஊடிப் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறுகுவம் - பெறுவோம் 

கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

வெயர்ப்பக் - வெயர்ப்பு - வேர்வைநீர்; வேர்வையுண்டாகை; சினம்.

கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

கூடலின் - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை.

தோன்றிய - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு;;;(வி)வீங்கு; பொங்கு ஊது பொருமு

முழுப்பொருள்
தலைவியும் தலைவனும் முயங்கிக் கூடினார்கள். நெற்றியில் வேர்வை வியர்க்குமளவு தழுவிப் புணர்ந்தார்கள். அத்தகைய கூடலில் தோன்றியது இன்பமும் இனிமையான சுவையும். ஆனால் இனிமையான சுவை சற்று அதிகமாகவே இனித்ததற்கு காரணம் இனிப்பிற்கு முன்பு உண்ட காரத்தைப்போன்று இவர்கள் கூடலுக்கு முன் ஊடல் கொண்டது தான். ஆதலால் மறுபடியும் ஊடிக் கூடலின் இன்பத்தை பெறுவோமா என்று இருவரும் கேட்கிறார்கள். 

“.......................அமைத் தோளாய்நின் 
மெய்வாழ் உப்பின் விலைஎய் யாமென” என்று கூடலின் கண் தோன்றிய உப்பை பற்றி அகநானூற்று (390:10-11) வரிகள் கூறும்

“ஊடினும் புணர்ந்தொர்த் தினியவள்” (சீவக.1996)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.

மு.வரதராசனார் உரை
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.

சாலமன் பாப்பையா உரை
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

குறள் 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
உணலினும் - உண்ணுதல் -   உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டது  - உண்ட உணவு 
உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை

அறல் - அறுகை; அறுத்துச்செல்லும்நீர்; அரித்தோடுகை; நீர் சிறுதூறு நுண்மணல் கருமணல் நீர்த்திரை; மயிர்நெறிப்பு; கொற்றான் திருமணம் விழா

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

புணர்தலின் - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்.

ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
ஒருவர் உணவை உண்பதிலோ அல்லது உண்டுகொண்டே இருப்பதாலோ இன்பம்/பயன் இல்லை. உணவு உண்ட பின்பு அவ்வுணவு நன்கு செரிமானம் ஆவதில் தான் இன்பமும் பயனும் உண்டு. அப்படி நன்கு செரிமானமானால் உடம்பிற்கு புத்துணர்ச்சியும் நல்ல தூக்கமும் வரும். அதுவே உணவு செரிக்கவில்லையென்றால் உடம்பிற்கு அவதி தான். அத்துன்பத்தை அனுபவிக்கும் பொழுது உண்ணவும் முடியாது. உண்டால் மேலும் துன்பமே. 

அதுப்போல காதலில் / காமத்தில் புணர்வதோ அடுத்தடுத்து புணர்வோதோ இன்பம் இல்லையாம். ஊடலுக்குப்பின் அமையும் புணர்தலே இனியதாம். அதுவே முறையாம். ஆதலால் ஊடல் காமத்திற்கு இன்பமாம். 

உணவு செரிமானம் ஆன பின்பு பசிக்கும். பசிக்கும் பொழுது உண்டால் சுவைக்கும்.  அதுப்போல ஊடல் தீர்ந்த பின்பு உடலும் மனமும்  புணர்தலுக்கு ஏங்கும். அப்பொழுது புணர்ந்தால் காமம் இனிக்கும். 

ஆதலால் உணவு செரிமானம் ஆவதை தடுக்காதீர் அதுப்போல ஊடலை தவறவிடாதீர்/தடுக்காதீர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும். ('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

இலர் - இல்லாதவர்

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

வீழ் - வீழு (விழு), desire, ஆசி,
வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு)
வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்)

மென் - மெல்லிய - மென்மையான

தோள் - புயம்; கை; தொளை.

அகறலின் - அகறல் - அகலல்; கடத்தல் நீங்குதல் விரிதல் அகலம்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் ஒன்றாக இருக்கும் பொழுது தலைவி தலைவன் மேல் குற்றம் சுமத்துகிறாள். சிறிதோ பெரிதோ எதுவாயினும் தலைவன் மேல் தவறு இல்லையென்றாலும் தன்னுடைய ஆசைத் தலைவியின் அழகிய மென்மையான தோள்களை சிறிது நேரம் பிரிந்து இருக்க நேரிட்டாலும் தலைவியிடம் மறுத்துப் பேசாது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவனுக்கு ஒரு இன்பம் காத்திருக்கிறது அங்கு. ஏனெனில் தலைவி புரிவது ஊடல். மேலும் மறுமொழிகளுக்கு முடிவேயில்லை. ஊடல் பின் கூடல் என்பது நாம் அறிந்ததே. ஊடல் பின் கூடல் அதிகமாகவே சுவைக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

குறள் 1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
புல்லி - புறவிதழ்; பூவிதழ்.

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

விடா - விடாமல் - நீங்காமல்

அப் - அந்த

ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

புலவி - ஊடல்; வெறுப்பு

யுள் - உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

தோன்றும் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

என் - என்னுடைய

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உடைக்கும் - பிளக்கும்
உடைத்தல் - தகர்த்தல்: அழித்தல்: வருத்துதல்: தோற்கச்செய்தல்: வெளிப்படுத்துதல்; குட்டுதல்: பிளத்தல்: கரைஉடைத்தல்: புண்கட்டியுடைதல்; முறுக்கவிழத்தல்.

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

படை - (வி)உண்டாக்கு; படைஎன்ஏவல்.

முழுப்பொருள்
தலைவனிடம் கொஞ்சநேரம் ஊடவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஆனால் என்னுள் உள்ள உறுதியை பிளந்துவிட்டது இந்த கூடலின் வேட்கை. ஏனெனில் அது என்னுள் ஒரு மனப்போராட்டத்தை (படை : போர் : ஆயுதம்) உருவாக்கி என் உள்ள உறுதியைப் பிளந்துவிட்டது.  நான் ஊடலின் பொது கொண்ட மனப்போராட்டங்களையெல்லாம் இப்பொழுது கூடும்பொழுது என் பூவிதழ்களும் அவர் இதழ்களும் நீங்காது என் உடலும் அவர் உடலும் நீங்காது அன்பாய் தழுவி காண்பிக்கிறேன்.

ஊடலை முடிக்க ஊடலினுள் கூடல் என்னும் ஆயுதத்தை வைத்துள்ளது காதல். அதுவே காதலின் வலிமை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.

மு.வரதராசனார் உரை
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

சாலமன் பாப்பையா உரை
என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

ஊடலின் தோன்றும் சிறுதுனி

குறள் 1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
ஊடலின்  - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

தோன்றும் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

சிறு - (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.

புலவிநீட்டம் - ஊடல்மிகுதி; கலவியிற்கூச்சம்.

துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

நல் -  நல்ல, வறுமை

அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.

வாடினும் - வாடுதல்  - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.

பாடு உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

பெறும் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஊடல் உண்டாகுமாயின் (முளைக்குமாயின்) அது சிறிய அளவில் துன்பத்தை தரக்கூடும். அந்த துன்பத்தால் அவர்களுக்கு இடையே இருந்த நல்ல அன்பு / உறவு சிறிது நேரம் வாடக்கூடும் (தொய்வு ஏற்படும்). அதனால் அவர்கள் மெலிந்தும் காணப்படலாம். ஆனால் இதற்கு பலனாய் இறுதியில் இன்பம் பிறக்கும். ஊடல் முடிந்தவுடன் அவர்கள் பந்தம் இன்னும் வலுப்பெறும். அப்பொழுது சிந்தித்தால் இந்த ஊடல் உறவை பலப்படுத்தும் நன்மையை தான் செய்தது என்ற பெருமையை ஊடல் கிட்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.

மு.வரதராசனார் உரை
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

சாலமன் பாப்பையா உரை
ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

இல்லை தவறவர்க்கு ஆயினும்

குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப்பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

அவர்க்கு - avar   pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்

ஆயினும் - āyiṉ-um   conj. ஆ-. 1. Although, nevertheless; ஆனாலும் 2. Either . . .or; ஆவது பத்தாயினும் எட்டாயினுங் கொடு 3. And;உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல் (சிலப்.1, 14, உரை )

ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள

அவர் -  avar   pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்

அளிக்குமாறு - அளிக்கும்

முழுப்பொருள்
தலைவனிடத்தில் எந்த தவறும் இல்லை என்று தெரிந்தும் தலைவிக்கு தலைவனிடத்தில் ஊடல் செய்யவேண்டும் என்று ஆசையாம். ஏனெனில் ஊடலின் பயன்கள் அப்படி. இது பொய் பிணக்கு என்றாலும் தலைவியின் மீது உள்ள காதலினால் தலைவன் காதலியை வர்ணித்தோ, ஆசை வார்த்தைகள் பேசியோ, இயற்கை எழிலாடும் இடங்களுக்கு கூட்டிச்சென்றோ காதலின் கோபத்தை (ஊடலை) தணிக்க இப்படி பலவழிகளில் முயற்சிசெய்வான். 

இதை காணும் தலைவி தன் தலைவர் தனக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்கும் பொழுதும், தன் தலைவர் தன் மீது எவ்வளவு அன்புக்கொண்டு உள்ளார் என்று உணரும் பொழுதும், தவறே தன் மீது இல்லாத பொழுதும் தலைவர் அதனை கருத்தில் கொள்ளாது தலைவியிடம் ஊடலை தணித்து கூட வேண்டும் என்று எண்ணுகிறாரே என்று நினைத்தும் தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். இதுவே ஊடலுக்கு தலைவனின் பதில்.

இந்த ஊடலில்பின் அவர்கள் கூடல் கொள்ளும் பொழுது அடையும் இன்பமானது இயல்பைவிட அதிகமாய் உள்ளது. ஊடலில் பின் கூடலின் சுவையே தனி. அதனால் ஊடல் செய்கிறாள் தலைவி.

ஆதலால் ஊடல் செய்வீர்!


(சேதுபதி திரைப்படத்தில் கதாநாயகி ரம்யா நம்பீசன் கதாநாயகன் விஜய் சேதுபதியின் கோபம்(ஊடல்) ஆக இருப்பால். அப்பொழுது தலைவன் தன் காலில் விழுவதை இன்புற்று ரசிப்பதை ஒரு அழகான எடுத்துக்காட்டாக இங்கு நினைவுக்கூறுகிறேன்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”.....................துனிபடர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்புசேண் அகல நீந்திப்
புலவி யுணர்த்தல் வண்மை யானே” (நற் 217:6-9)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

சாலமன் பாப்பையா உரை
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

ஊடலில் தோற்றவர் வென்றார்

குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]

பொருள்
ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

தோற்றவர் - தோற்றல் - தோன்றுகை; வலிமை; புகழ்; தோல்வி; வீண்எண்ணம்; வெற்றியின்மை

வென்றார் - வெற்றி - வென்றி; வாகைசூடுதல், வெல்-. Victory, success,conquest, triumph; செயம்.

அது - அஃதானது

மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

கூடலின் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

காணப்படும் - உணரலாம்

முழுப்பொருள்
ஊடல் என்பது தலைவன் தலைவியின் இடையில் உண்டாகும் ஒரு பொய்யான பிணக்கு. பிணக்கு உள்ள காலங்களில் ஒருவரை ஒருவர் வெறுப்பர். யார் விட்டுக்கொடுப்பது என்று சண்டை வரும். எந்த ஒரு சண்டையிலும் ஒருவர் தானே வெற்றி பெற முடியும். ஆதலால் மற்றொருவர் தோல்வியடைவர்.

தோல்வியடைந்தவர் தோல்வியில் துவண்டு இருப்பார். ஆனால் வெற்றி பெற்றவரோ சிறிது நேரம் சந்தோஷமாய் இருந்தாலும் தோல்வியடைந்தவரை கண்டு வருத்தம் கொள்வார். என்னால் தானே எனது தலையாய காதலுக்கு பாத்திரமானவர் துவண்டுள்ளார் என்று தன்னை வெறுப்பர். இந்த நிலைமை மாற்றுவதற்காக இருவரும் இரவில் கூடுவர். இரவு புணரும் பொழுது தோல்வியடைந்தவரின் அகம் உணரும் இந்த கோபம் எல்லாம் பொய் என்று. ஆதலால் இவையெல்லாம் தோல்வியல்ல என்று. கூடலில் மகிழ்ச்சி அடைவதனால் அவர் இறுதியில் வெற்றி பெற்றவர் ஆகிறார். இதுவே பெரும்பான்மையாக நடக்கும் [சில சமயம் அப்படி நடக்காமலும் போகலாம்]

ஒப்புமை
”தோற்றாரே வெல்வர் துணைமிசையார் கோட்டியானை
ஏற்றுக் கழல்தொடியார் மிக்காரை யாவரைவர்
போற்றளி கூடல் கரி” (இன்னிலை 29)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
ஊடலில் தோற்றவர் வென்றார் - ஊடலில் தோற்ற மகளிர் வென்றவராவர்; அது மன்னும் கூடலிற் காணப்படும்- அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும்.

தோற்றவர் ஊடலைக் கடைப்பிடிக்காது இடையில் விட்டு விட்டவர். அவர் கலவிக்கண் பேரின்பம் பெறுதலால் வென்றாராயினர். 'மன்' மிகுதிப் பொருளது.தலைமகன் கலவியால் பேரின்பம் பேறும்போதே தலைமகளும் பெறுதல் கண்டானாதலாலும், அவள் ஊடல் நீங்கிய பொழுது ஒருவகைத் தோல்வி மனப்பான்மை கொண்டிருந்ததனாலும் , அவளைப் பாராட்டி ஊக்குமுகமாகத் 'தோற்றவர் வென்றார்' என்றான். ஊடல் ஆடவருக்கின்மையின், தலைமகன் ஊடலில் தோற்றானென்று கூறுவது பெருந்திணையாகுமேயன்றி அன்பினைந்திணையாகாதென அறிக. அடுத்த குறளையும் பார்க்க.

மணக்குடவர் உரை
ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.

மு.வரதராசனார் உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ

குறள் 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]

பொருள்
புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.
(நெஞ்சொடு புலத்தல் என்ற அதிகாரம் தனியாக உண்டு)

புத்தேள் - புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

நிலத்தொடு - நிலத்துடன்

நீரியைந் தன்னார் - நீர் + இயைந்து + அன்னார்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

இயைந்து - இயைதல் -  பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல் 

இயைந்து - உரிசொல் -> இயைபு -> புணர்ச்சி, பொருந்துதல்

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

அகத்து - (அகம் - உள்),  நெஞ்சத்தில், மனதில்

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின்
நிலத்துடன் நீர் இயர்கையாக பொருந்தி இருப்பதுபோல் இன்பமாக இருக்கிறார்கள் இரு காதலர்கள். அத்தகைய காதலர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஊடல் (வேறுபாடுகள், சின்ன சண்டைகள்) ஆனது பேரின்பம் பயக்குமாம்.

நிலத்தோடு நீர் இயற்க்கையாக இருப்பது வெட்பமும் தட்பமும் கூடியிருப்பதாகும். அது இன்பமும் துன்பமும் ஒன்றாக இருப்பதுப்போல் ஆகும்.

புத்தேள் நாடு உண்டோ
(மேற்சொன்ன) அத்தகைய பேரின்பம் தரும் ஒரு இன்ப உலகம் இருக்கிறதா ? இல்லை

குறிப்பு: புத்தேள் நாடு பற்றி திருத்தம் வலையத்தில் வாசிக்கவும் (சுட்டியை சொடுக்கவும்)

ஒப்புமை
”...........................இனத்தின் இயன்ற
இன்னா மையினும் இனிதோ
இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே” (குறுந். 288:3-5)

“செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” (குறுந்.40:4-5)

பரிமேலழகர் உரை
இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.

விளக்கம் (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.) ---

மணக்குடவர் உரை
நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?. நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.

சாலமன் பாப்பையா உரை
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.