குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]
பொருள்
ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.
ஊடிப் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெறுகுவம் - பெறுவோம்
கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.
வெயர்ப்பக் - வெயர்ப்பு - வேர்வைநீர்; வேர்வையுண்டாகை; சினம்.
கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.
கூடலின் - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை.
தோன்றிய - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு;;;(வி)வீங்கு; பொங்கு ஊது பொருமு
முழுப்பொருள்
தலைவியும் தலைவனும் முயங்கிக் கூடினார்கள். நெற்றியில் வேர்வை வியர்க்குமளவு தழுவிப் புணர்ந்தார்கள். அத்தகைய கூடலில் தோன்றியது இன்பமும் இனிமையான சுவையும். ஆனால் இனிமையான சுவை சற்று அதிகமாகவே இனித்ததற்கு காரணம் இனிப்பிற்கு முன்பு உண்ட காரத்தைப்போன்று இவர்கள் கூடலுக்கு முன் ஊடல் கொண்டது தான். ஆதலால் மறுபடியும் ஊடிக் கூடலின் இன்பத்தை பெறுவோமா என்று இருவரும் கேட்கிறார்கள்.
“.......................அமைத் தோளாய்நின்
மெய்வாழ் உப்பின் விலைஎய் யாமென” என்று கூடலின் கண் தோன்றிய உப்பை பற்றி அகநானூற்று (390:10-11) வரிகள் கூறும்
“ஊடினும் புணர்ந்தொர்த் தினியவள்” (சீவக.1996)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
மு.வரதராசனார் உரை
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
சாலமன் பாப்பையா உரை
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
No comments:
Post a Comment