குறள் 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]
பொருள்
உணலினும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.
உண்டது - உண்ட உணவு
உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை
அறல் - அறுகை; அறுத்துச்செல்லும்நீர்; அரித்தோடுகை; நீர் சிறுதூறு நுண்மணல் கருமணல் நீர்த்திரை; மயிர்நெறிப்பு; கொற்றான் திருமணம் விழா
இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
புணர்தலின் - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்.
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு
இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
முழுப்பொருள்
ஒருவர் உணவை உண்பதிலோ அல்லது உண்டுகொண்டே இருப்பதாலோ இன்பம்/பயன் இல்லை. உணவு உண்ட பின்பு அவ்வுணவு நன்கு செரிமானம் ஆவதில் தான் இன்பமும் பயனும் உண்டு. அப்படி நன்கு செரிமானமானால் உடம்பிற்கு புத்துணர்ச்சியும் நல்ல தூக்கமும் வரும். அதுவே உணவு செரிக்கவில்லையென்றால் உடம்பிற்கு அவதி தான். அத்துன்பத்தை அனுபவிக்கும் பொழுது உண்ணவும் முடியாது. உண்டால் மேலும் துன்பமே.
அதுப்போல காதலில் / காமத்தில் புணர்வதோ அடுத்தடுத்து புணர்வோதோ இன்பம் இல்லையாம். ஊடலுக்குப்பின் அமையும் புணர்தலே இனியதாம். அதுவே முறையாம். ஆதலால் ஊடல் காமத்திற்கு இன்பமாம்.
உணவு செரிமானம் ஆன பின்பு பசிக்கும். பசிக்கும் பொழுது உண்டால் சுவைக்கும். அதுப்போல ஊடல் தீர்ந்த பின்பு உடலும் மனமும் புணர்தலுக்கு ஏங்கும். அப்பொழுது புணர்ந்தால் காமம் இனிக்கும்.
ஆதலால் உணவு செரிமானம் ஆவதை தடுக்காதீர் அதுப்போல ஊடலை தவறவிடாதீர்/தடுக்காதீர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும். ('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
மு.வரதராசனார் உரை
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
No comments:
Post a Comment