தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

thirukkural meaning விளக்கம் குறள் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை
குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

இலர் - இல்லாதவர்

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

வீழ் - வீழு (விழு), desire, ஆசி,
வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு)
வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்)

மென் - மெல்லிய - மென்மையான

தோள் - புயம்; கை; தொளை.

அகறலின் - அகறல் - அகலல்; கடத்தல் நீங்குதல் விரிதல் அகலம்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் ஒன்றாக இருக்கும் பொழுது தலைவி தலைவன் மேல் குற்றம் சுமத்துகிறாள். சிறிதோ பெரிதோ எதுவாயினும் தலைவன் மேல் தவறு இல்லையென்றாலும் தன்னுடைய ஆசைத் தலைவியின் அழகிய மென்மையான தோள்களை சிறிது நேரம் பிரிந்து இருக்க நேரிட்டாலும் தலைவியிடம் மறுத்துப் பேசாது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவனுக்கு ஒரு இன்பம் காத்திருக்கிறது அங்கு. ஏனெனில் தலைவி புரிவது ஊடல். மேலும் மறுமொழிகளுக்கு முடிவேயில்லை. ஊடல் பின் கூடல் என்பது நாம் அறிந்ததே. ஊடல் பின் கூடல் அதிகமாகவே சுவைக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain