குறள் 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
பொருள்
முழுப்பொருள்
ஊழி - முடிவுகாலம்; யுகமுடிவு, கடல்பெருகிஉலகம்அழியும்காலம்; நெடுங்காலம்; பூமி; விதி; முறைமை; வாழ்நாள்
பெயரினும் - பெயர்தல் - போதல்; பிறழ்தல்; மீளுதல்; மாறுதல்; சிதைவுறுதல்; இணைப்புநெகிழ்தல்; கூத்தாடுதல்; சலித்தல்; அசையிடுதல்; இடம்விட்டுமாறுதல்; பிரிதல்; கிளர்தல்; தேய்தல்; நாணயம்வழங்குதல்; வசூலாதல்.
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.
பெயர்தல் - போதல்; பிறழ்தல்; மீளுதல்; மாறுதல்; சிதைவுறுதல்; இணைப்புநெகிழ்தல்; கூத்தாடுதல்; சலித்தல்; அசையிடுதல்; இடம்விட்டுமாறுதல்; பிரிதல்; கிளர்தல்; தேய்தல்; நாணயம்வழங்குதல்; வசூலாதல்.
பெயரார் - மாறமாட்டார்
சான்றாண்மைக்கு- கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.
ஆழி - சக்கரப்படை; ஆணைச்சக்கரம்; கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன்திகிரி; யானைக்கைந்நுனி; கடல் கடற்கரை காண்க:ஆளி; குன்றி கணவனைப்பிரிந்தமகளிர்இழைக்கும்கூடற்சுழி.
எனப்படுவார் - என்றறியப் படுவார்
சான்றாண்மை கொண்ட ஒருவர் காலங்கள் மாறினாலும் தன்னுடைய நிலை மாறினாலும் தன்னிடம் உள்ள செல்வங்கள் அழிந்தாலும் ஊழின் வலிமையால் தன்நிலை மாறினாலும் தனது சால்பினை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார் என்றால் அவர் சான்றாண்மைக்கு கடல்போன்றவராவார். ஏன் அவரை சான்றாண்மைக்கு கடலாக திருவள்ளுவர் கூறுகிறார்? ஏனெனில் மழையானாலும் வறட்சியானாலும் வற்றாமல் நீர் மிகுந்து கடல் காணப்படுகிறது. அதைப்போல் காலங்கள் மாறினாலும் சால்பு மாறாமல் இருக்கிறார் அவர்.
இன்னும் சற்று யோசித்தால், மனதில் எவ்வளவு வருத்தங்களும் கோபங்களும் சந்தோஷங்களும் இருந்தாலும், கடலின் முன்னே ஒரு நாழிகை அமைதியாக அமர்ந்து கடலை நோக்கினால் நம் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது. வருத்தமாக இருப்பவரும் கோபமாக இருப்பவரும் கடலின் அமைதியால் அமைதியாகிறார். அதுவே மிக சந்தோஷமாக இருப்பவர் பெரு வெற்றி குவித்தவரும் கடலின் அகலத்தாலும் ஆழ்ந்த அமைதியாலும் அவர் தன்னடக்கம் பெற்று அமைதியாகிறார். அதுப்போல் சால்பு உள்ள ஒருவர் முன்னே சென்று நின்றால் சிறிது நேரம் பழகினால் மனஅமைதி கிடைக்கும். அதுவே நேர்மறைப்பண்புக்கான ஷக்தி. அதனால் தான் என்னவோ உண்மையான துறவிகளுக்கும் சில மடாதிபதிகளுக்கும் (காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சந்தரசேகராச்சாரியார்) மற்றும் மஹாத்மா காந்தி போன்றோருக்கும் பலர் சரணடைந்து இருந்தார்கள்.
ஒப்புமை
“உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும்
குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்” (நாலடி 141)
“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர்
செய்வர் செயற்பாலவை” (நாலடி 147)
“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்” (நாலடி 148)
“செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன” (நாலடி 149)
“எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றவர்” (நாலடி 150)
“கொடைக் கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது” (நாலடி 184)
“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)
”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி 358)
“பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகையார்” (பழமொழி 96)
“ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின் மேல்” (பழமொழி 119)
“மறம்தி றம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ” (கம்ப.மந்தரை.66)
ஔவையாரின் மூதுரைப் பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
“சான்றோர் கடன்நிலை குன்றலும் இலர்” என்று நற்றிணைப் (327:4-5 பாடல் வரியொன்று கூறுவதும்,
“தோல் வற்றிச் சாயினும் சாகன்றாண்மை குன்றாமை” என்று திரிகடுகப் (27) பாடல் கூறுவதும் இத்தகையோரைப் பற்றிதான்.
“...... தம்மின்
உறழா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியோர் வாய்ச் சொல்” (பு.வெ.167)
“பழங்குடி பண்பில் தலைபிரிதல் அன்று” என்று ஏற்கனவே குடிமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கிறார் அல்லவா?
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.).
மணக்குடவர் உரை
சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.
மு.வரதராசனார் உரை
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
No comments:
Post a Comment