குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]
பொருள்
பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.
பேணாது - போற்றாமல் ; மதிக்காமல்
பெட்டார் - நண்பர்; விரும்பியவர்.
உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
மன்னோ - வாழ்வேனா ?
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
அவர்க் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணாது - காணாமல்
அமைவு - அமைதி; ஒப்பு
இல - இல், இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
முழுப்பொருள்
என்னுடன் கூடியவர் என்னை வேண்டாது என்னை உண்மையாக விரும்பாது பிரிந்துசென்றுவிட்டார். அத்தகைய பெட்டார் (நான் விரும்பியவர்) உயிர் வாழ்ந்துக்கொண்டுத்தான் இருக்கிறார். ஆனால் கண்ணே நீ அவர் மேல் வெறுப்பும் கோபமும் கொள்ளாது அவர் பிரிவால் தூக்கம் இழந்து நொந்து அமைதியிழந்து இயல்பான பொலிவிழந்து வாடுகிறாயே என்று தன் கண்களை கேட்பதாக தலைவி கூறுகிறாள்
“பெட்டார்” என்ற சொல் நட்பு, காதலர் மற்றும் பகைவர் என்று வெவ்வேறுவிதமாகப் பொருள்படும். காதலித்து, பின் பெண்ணின் காதலுக்குப் பிரிவின்மூலம் தற்காலிகமாகப் பகையாக ஆனதால், வள்ளுவர் பெட்டார் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகத் தோன்றுகிறது.
பின்னால் வரப்போகும் புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தின் கண், இதே பொருளில், “குறள் 1283காணா தமையல கண்” என்று எழுதியுள்ளார் வள்ளுவர். திருவாய்மொழிப் பாடலொன்றும் இக்குறளின் கருத்தையொட்டியதே! அப்பாடல்
“கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்த னாகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கும்”
(திருவாய் மொழி, 5.3:5)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)
மணக்குடவர் உரை
விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?
மு.வரதராசனார் உரை
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
சாலமன் பாப்பையா உரை
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.
No comments:
Post a Comment