பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

thirukkural meaning விளக்கம் குறள் 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல்  ; மதிக்காமல்

பெட்பவே - பெட்ப - peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).பாதுகாப்பு.
பெட்பு - peṭpu   s. desire, lust, ஆசை.

செய்யினும் - செய்தாலும்

கொண்கனைக் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.

காணாது - காணாமல்

அமை - அமைதல்  - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அல - ala   same as அல்ல, see under அல்;

அமையல - அமையாது

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
காதலி என்னை விரும்பவேண்டும் போற்றவேண்டும் என்னுடன் நேரம் செலவிடவேண்டும் என்று நான் நினைக்கிறன் / எதிர்பார்க்கிறேன். ஆனால் அவ்வாறு என்னை விரும்பாது தன் தொழிலில் (அல்லது வேறு ஏதாவது ஒன்றில்) மிக ஈடுபட்டு தன்னலமாய் அவர் இருந்தாலும் பரவாயில்லை. என் அன்பிற்குரியத் தலைவனை காணமால் மூடாது என் கண்கள். அவர் வருவார் என்று காத்திருக்கிறேன்.

இந்நிலையைப் பல இலக்கியப் பாடல்களும் சுட்டுகின்றன.

பேணாய் நீ பெட்பச் செயல்” - (கலித்.91:24)

“துனிநீர் கூட்டமொடு துன்னாராயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்” என்று நற்றிணை (216:1-2) பாடல் கூறுவதும்,

“காதலர் நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக்கினிதே” என்று குறுந்தொகை (60:4-6) பாடல் கூறுவதும்,

“கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்த னாகிலும்
கொடியவென் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்”  என்று திருவாய்மொழி (5.3:5) பாடல் கூறுவது இந் நிலையைத்தான்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

மு.வரதராசனார் உரை
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain