குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]
பொருள்
தொடின் - தொடுதல் - தீண்டுதல்; தோண்டுதல்; பிடித்தல்; பிழிதல்; தொடங்குதல்; உண்ணல்; ஆணையிடுதல்; செலுத்துதல்; வாச்சியம்வாசித்தல்; அடித்தல்; செருப்பணிதல்.
சுடின் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
அல்லது - தீவினை; தவிர
காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
காமநோய் - s. Love-sickness, மதன நோய்.
போல - ஓர்உவமவுருபு, 1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble']
விடின் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.
சுடல் - சுடரிலிருந்துவிழும்எண்ணெய்த்துளி; திரியின்எரிந்தமுனைமுடிச்சு.
சுடல் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
ஆற்றுமோ - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.
முழுப்பொருள்
தீயினை அணுகினால் அது மிகவும் சுடும். அதே தீயைவிட்டு விலகினால் தீயின் வெட்பத்தை நம்மால் அனுபவிக்க முடியாது. அதனால் தான் அகலாது அணுகாது தீக்காய வேண்டும் என்பதை நாம் அறிவோம் (மன்னர் சேர்ந்தொழுகதலிலும் பார்த்தோம்).
தீயினை தொட்டால் தான் நம்மை சுடும். தீ நம்மீது படும் பொழுது அது சுடும். பின்பு ஆறிவிடும். ஆனால் என் தலைவர் மீதுள்ள காதலினால் வந்த இக்காமநோய் ஆனது அவர் என்னை விட்டு விலகினாலும் சுடுகிறது. அவர் பிரிவால் நான் துன்படுவேன் (துன்படுகிறேன்) என்று தலைவி கூறுகிறாள். ஆதலால் காதலர் பிரிவு தீயினை விட கொடியது என்று கூறுகிறாள்.
மேலும் அஷோக் உரை
ஒப்புமை
(1)
பழம்பாடல் ஒன்று அழகாக இதைக் கூறும்.
“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல்லாதே”
மற்றொரு நாலடியார் (90) பாடல் வரி,
“நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்” என்கிறது.
“அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (குறுந் 257:5-6)
“கவவிற் கமைந்த காமக் கனலி
அவவுறு நெஞ்சத் தகல்விடத் தழற்ற” (பெருங் 2:18:8:9)
“நின் பிரிவினும் சுடு மோபெருங் காடென்றாள்’ (கம்ப.நகர்நீங்கு 226)
(2)
”கந்தர வந்த காம ஒள்எரி” (குறுந் 305:1)
“காமக் கனலெரி கொளீஇ யாமும்” (பெருங் 1.33:203)
“மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால்” (கம்ப.சூர்ப்பணகை 72)
பரிமேலழகர் உரை
(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)
மணக்குடவர் உரை
தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
மு.வரதராசனார் உரை
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
சாலமன் பாப்பையா உரை
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.
No comments:
Post a Comment