நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல் குறள் 1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்
குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
நீங்கின் - நீங்குதல்  - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்

தெறு - சுடுகை; கோபம்; அச்சம்; துன்பம்.
உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி

தெறூஉம் - தெறு -

குறு - kuṟu   VI. v. i. become short, diminish, குறுகு
குங்குதல் - குன்றுதல், குறைதல்.

குறுகுங்கால் - குறுகுங்குதல் - நெருங்கி வரும் பொழுது

தண் - taṇ   n. 1. [K. M. taṇ.] Coolness,coldness; குளிர்ச்சி (பிங்.) 2. Water; நீர் Brāh.3. Grace; love; அருள் தண்கலந்த சிந்தையோடு(சேதுபு. சீதைகுண்ட. 5)
குளிர்ச்சி - kuḷircci   குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death.. 

தண்ணென்னும் - குளிர்ச்சியாக 

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

யாண்டுப் - எங்கு; எப்பொழுது; ஆண்டு

பெற்றாள் - பெற்றாள்

இவள்? -இந்த பெண் (என் காதலி, தலைவி)

முழுப்பொருள்
பொருள் 1
தலைவன் நான் தலைவி இவள் அருகில் வரும்தோறும் மிக அருகில் இருக்கும் பொழுது என்னுடன் முயங்கும் (புணர்ச்சி கொள்ளுதல்) பொழுதும் குளிர்ந்தநீர்ப்போல குளிர்ச்சியாக அதாவது அன்பாக என்னிடம் நடந்துக்கொண்டாள்.  ஆனால் இவளை விட்டு நான் நீங்க போகிறேன் என்று தெரிந்தவுடன் நெருப்புபோல என்னை சுட்டெரிக்கிறாள். கோபம்கொள்கிறாள். குளிர்மையான நீர் போன்றவள் என்று நினைத்தேன். எங்கிருந்து இப்படிப்பட்ட சுட்டெரிக்கும் தீயை பெற்றாள் இவள் ?

நெருப்பு மூட்டி சற்று தொலைவில் இருந்து குளிர்காயும் பொழுது இதமாக இருக்கிறது. ஆனால் மிக அருகே சென்றால் சுடுகிறது அல்லவா? ஆனால் இங்கோ அருகில் இருக்கும் பொழுது இதமாக இருக்கிறது. விலகிச்சென்றால் சுட்டெரிக்கிறது. இது போன்ற தீயை எங்கு பெற்றாள் இவள்?  

பொருள் 2
இக்குறளை வேறு ஒரு மாதிரியும் பொருள் கொள்ளலாம். தலைவனும் தலைவியும் கூடும் பொழுது, பெண் தலைவனை எவ்வளவு விரும்புகிறாள் தன் அகத்தோடு உணர்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. தன் தலைவனை கூடும் பொழுது அவன் அவளை நெருங்கும் பொழுது குளிர்கிறாள். மகிழ்ச்சி அடைகிறாள். இன்பம் கொள்கிறாள். தலைவனும் அவ்வின்பத்தை கொடுக்கிறான் பெறுகிறான். அவ்வின்பத்தருணத்தில் தலைவன் சிறிதளவு பிரியும் பொழுது அச்சிறுப்பிரிவைக்கூட விரும்பாத தலைவி கோபம் கொள்கிறாள். தீயைப்போன்று சுடுகிறாள். [பின்பு என்ன, விலகும் தலைவனை அள்ளி அனைத்துக்கொள்கிறாள் தலைவி என்பதை யாரும் விளக்கவேண்டாம். ]

முயங்கும் பொழுதே பிரிவை விரும்பாத தலைவி எப்படி தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் பொழுது அதனை ரசிப்பாள்? அதான் அவள் சுடுகிறாள். பிரிவைப் பற்றியும் அதனால் வரும் துயரைப்பற்றியும் வரப்போகும் அதிகாரங்களில் விரிவாக காணலாம்.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் வருவதால் பொருள்-2ஏ பொருத்தமானதான பொருளாக எனக்கு தோன்றுகிறது.

பழம்பாடல் ஒன்று அழகாக இதைக் கூறும்.

“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து 
தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல்லாதே”


மற்றொரு நாலடியார் (90) பாடல் வரி, 
“நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி 
ஒளிப்பினும் காமம் சுடும்” என்கிறது.

“அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (குறுந் 257:5-6)

“கவவிற் கமைந்த காமக் கனலி
அவவுறு நெஞ்சத் தகல்விடத் தழற்ற” (பெருங் 2:18:8:9)

“நின் பிரிவினும் சுடு மோபெருங் காடென்றாள்’ (கம்ப.நகர்நீங்கு 226)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.).

மணக்குடவர் உரை
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.

மு.வரதராசனார் உரை
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

தீயென்றால் தொட்ட உடன் சுடும் என்று
     தீண்டி அதை உணர்ந்துள்ளோம் அனைவருமே
மாயப் பெண் இவளிடத்தில் உள்ள தீயோ
     மாற்றங்கள் கொண்டதுவாய் இருப்பதென்ன
தோய்ந்து அவளைத் துய்த்திருந்தேன் அப்போதெல்லாம்
     துடியிடையாள் தீயதனின் குளிர்ச்சி தேர்ந்தேன்
போய் வரலாம் என்றே தான் பிரிந்தேன் தீ
     போட்டு என்னை வறுத்ததினை உணர்ந்தேன் வெந்தேன்
பிரிகையிலே சுடுகின்ற இந்தத் தீயைப்
     பெண் மகளாள் பெற்றதிங்கு யாரிடத்தில்
அறிவதற்கு முயல்கின்றேன் முடியவில்லை
     ஆனாலும் அனுபவித்தே மகிழ்கின்றேன் நான்
துடியிடையைத் தொட்டவுடன் தீயைக் காணோம்
     தொட்டு உடன் விலகி நின்றால் குளிரைக் காணோம்
அட அட இப் பெண்ணாளை அடைந்ததிலே
     அறிவியலின் தோல்வியினைக் கண்டேன் நானும்

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain