Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

குறள் 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]

பொருள்
கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

பொறியில் - பொறி - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ்.

குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு

இல் - இல்லை 

இலவே - இல்லை 

வே எண்  – விரும்பத்தக்க, விழைதலுக்குரிய

எண்குணத்தான்- எட்டுக்குணங்களையுடையகடவுள்; அருகன்; சிவன்.

தாளை - தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.

வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.

வணங்காத் - வணங்காதவன் 

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
முன் குறிப்பு: சில உரைகள் எண்குணங்களை இவ்வதிகாரமான கடவுள் வாழ்த்து-இல் முதல் 8 குறள்கள் வகுக்கும் 8 குணங்கள் என்று கூறுகின்றன. அப்படி இருக்க வாய்ப்புகள் மிக குறைவு. ஏனெனில் திருக்குறள் பெரும்பாலும் மற்றொரு குறளை சார்ந்து இருக்காது. ஒரு தனிக்குறளாகவே பொருளை அளிக்கும். சில குறள்கள் மற்ற குறளை மனதில் வைத்து படித்தால் நமக்கு அதன் ஆழம் இன்னும் அதிகமாக இருக்குமே தவிர முற்றிலுமாக மற்ற குறள் மீது சாரந்து இருக்காது. அது மட்டும் இன்றி திருக்குறளின் அதிகாரங்களில் வரும் வரிசை முறை பற்றி பலவேறு கருத்துக்கள் உள்ளன. 20ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வேறுபட்ட வரிசை முறைகளை உரையாசிரியர்கள் கையாண்டு இருக்கிறார்கள்.

கொள்கை இல்லாத ஐந்து பொறிகள் இருந்தும் அவற்றால் ஒரு பயனுமில்லை. அதுப்போல எல்லோரும் விரும்பக்கூடிய நற்குணங்களை கொண்ட இறைவனின் தாள் (திருவடிகள்)கண் பணியாத/வணங்காத தலை இருந்தும் ஒரு பயனுமில்லை. 

திருநாவுக்கரசரின் “தலையே நீ வணங்காய்” என்கிற பாடலில் 
“தலையே நீ வணங்காய், 
கண்காள் காண்மின்களோ, 
செவிகாள் கேண்மின்களோ, 
மூக்கே நீ முரலாய், 
வாயே வாழ்த்து கண்டாய், 
நெஞ்சே நீ நினையாய், 
கைகாள் கூப்பித்தொழீர், 
ஆக்கையாற்பயனென், 
கால்களாற் பயனென்” ஒவ்வொரு பயனுடை புற காரணங்களையும் விளித்து அவைகளுக்குண்டான இறைப்பொருளைச் சார்ந்த கடைமைகளைக் கூறுகிறார்.

இவரும் முதன்மையாகத் தலையைத்தான் சொல்லுகிறார்.  தலையென்பது சிந்திக்கும் மூளையுளது, அதனுடைய ஆட்சியில்தான் மற்றவுறுப்புகள் இயங்குகின்றன. அது உண்மையான இறைப் பொருளை அறிந்து, பணிவுடன் இருந்துவிட்டால், மற்றவுறுப்புகள் தாமாக அவ்வவற்றுன் பயனைச் சரிவர செய்துவிடும்.

பல உரைகளுள் கவனிக்க படவேண்டிய ஒன்று - இங்கு கவனிக்கப்பட வேண்டியது பௌத்த சமயக் கோணம்.

எண்குணத்தான் பண்புகள் என்பது சமண தீர்த்தங்கரருக்குப் பொருந்துவது போலவே புத்தருக்கும் புத்தரின் போதனைகளுக்கும் பொருந்தும். இருப்பினும் குறளுக்கான புத்த சமய அடிப்படை விளக்கங்கள் எதுவும் நமக்குக் கிடைத்தில. முதல் அதிகாரத்தில் வெளிப்படையாகப் புத்த சமய சாயல்கள் பல தெரிந்தும் குறளுக்குப் புத்த அடிப்படையில் விளக்கம் அளிக்கவோ (சைவ சமயத்தார் போல), உரிமை கொண்டாடவோ முற்பட்ட ஒரு பௌத்த நூல் சென்ற நூற்றாண்டின் அயோத்திதாசர் காலம் வரை இல்லாததற்குக் காரணம் எதுவாக இருக்கலாம் என்பதைத் தற்காலத்தில் நாம் யூகிக்க மட்டுமே முடியும். திருக்குறள் முதல் அதிகாரம் காட்டும் துறவியின் குறிப்புகளான  1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. வேண்டுதல் வேண்டாமை இலான், 5. இருவினையும் சேரா இறைவன், 6. பொறிவாயில் ஐந்தவித்தான் , 7. தனக்குவமை இல்லாதான், 8. அறவாழி அந்தணன், 9. எண்குணத்தான், 10. இறைவன் என்பவை புத்தருக்கும் பொருந்தக் கூடியவை.

எழுத்தாளர் ஜெயமோகன் ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3” கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார் -> ”கடவுள் வாழ்த்து முதல் குறளின் சொல்லாட்சிகளில் உள்ள ஆசீவக-சமணப்பாதிப்பு என்பது பிற எந்த மத-தத்துவச் செல்வாக்கை விடவும் அதிகம் என்றே எண்ணத்தோன்றுகிறது. சமண மரபுப்படி முதல் தீர்த்தங்காரர் ஆகிய ஆதிநாதரை வணங்கியபடித்தான் நூல் தொடங்குகிறது [ஆதிபகவன்] வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான்,அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று வள்ளுவர் சொல்லும் எல்லா சொற்களும் இயல்பாக சமண தீர்த்தங்காரர்களுக்கு மட்டுமே பொருந்துபவை.

இச்சொற்களுக்கு பிற்காலத்தில் உரையாசிரியர்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் பல. ஆனால் சம்ஸ்கிருத சமண நூல்கள் பலவற்றில் இதே சொல்லாட்சிகள் இப்படியே சமண மூலவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரியவரும் விஷயம்.  அறத்தின்ஆழி என்பது சமணர்களின் அறச்சக்கரம் என்பதை உணர்வதற்கு ஆய்வே தேவையில்லை”.

பௌத்தம் காட்டும் உயர்ந்த வழியில் நடக்கும் குணங்கள்:

1. நன்மொழி (Right Speech), 
2. நற்செயல் (Right Conduct), 
3. நன்னெறி (Right Livelihood), 
4. நன்முயற்சி (Right Effort), 
5. நல்லெண்ணம் (Right Mindfulness), 
6. நல்லறம் (Right Intention),  
7. நல்நோக்கம் (Right View), 
8. நல்லறிவு (Right Insight) ஆகியன.

இதன் அடிப்படையில்; எண்குணத்தான் என்பதற்கான புத்தசமய விளக்கமாக, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கும் பௌத்த நல்வழிகளான 1. நன்மொழி, 2. நற்செயல், 3. நன்னெறி, 4. நன்முயற்சி, 5. நல்லெண்ணம், 6. நல்லறிவு, 7. நல்நோக்கம், 8. நல்லறம்  என்ற இத்தகைய எட்டு பண்புகளைக் கொண்டவரும், துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர். அவரை ஒரு அறவாழி அந்தணனாக, தருமசக்கரத்தைச் சுழற்றும் முத்திரை காட்டுபவராக புத்தரின் சிலை அமைப்புகளும் காட்டும். தர்மசக்கரத்தின் எட்டு ஆரங்களும் இந்த எட்டு பண்புகளையே பௌத்தத்தில் குறிக்கிறது. புத்தர் தாமரை மலரில் நடந்தார், மலர்மிசை ஏகினார் என்ற புத்த தொன்மங்களும் உள்ளன. திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரைக் குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப் பொருத்தமாகவும் இருக்கும்.



மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பண்ணவன் எண்குணன்” (சிலப் 10:188)
“எட்டுக் கொலாமவர் ஈறில் பெருங்குணம்” (அப்பர்.விடந்தீர்த்த 8)
“குணங்கள்தோள் எட்டு மூர்த்தி” (அப்பர்.வன்னியூர் 7)
“கலைஞானிகள் காதல்எண் குணவன்காண்” (அப்பர்.தென்குரங்கு 4)
“எட்டு வான்குணத் தீசனெம்மான்” (அப்பர்.இடைமருது 4)
“இறையவனை மறையவனை எண்குணத்தினானை” (சுந்தரர்.கானாட்டு.3)
“எண்குணத் தீசனை” (பொன்வண்ணத் 53)
“எண்குணனும் கோட்பட்டு” (சீவக 1469)

“தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்” (சம்பந்தர்.கானப்பேர் 8)
“தலையினால் வணங்கத்தவ மாகுமே” (சம்பந்தர்.மழபாடி 4)
“தலையே நீவணங்காய்” (அப்பர்.அங்க.1)
“வணங்கத் தலைவைத்து” (திருவா.281)

“தம்பத்தின் மேற்புழை ஏழுள் ஆக்கித் தமித்துவைத்த
கும்பத்தி னோடு நிகரொக்கு மாம்குனிப் பின்றிஐந்தாம்
பம்பத்தி காயம் பணித்த பிரான்பசுந் தாமரைத்தாள்
செம்பத்தி யால்வணங் காச்சிறி யார்தம் சிரத்திரளே” (திருநூற் 23)

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன்
ஒருவனுக்கு எல்லாம் இருக்கிறது. அறிவு இருக்கிறது, கல்வி இருக்கிறது, செல்வம் இருக்கிறது, சுற்றமும் நட்பும் சூழ்ந்த நிறைவான வாழ்க்கை இருக்கிறது. போக நுகர்ச்சிக்கும் அளவே இல்லை. அவை போதுமா ?

அவன் சான்றோர்களை மதிக்கவில்லை. அனுபவஸ்தர்களை ஏளனமாகப் பார்க்கிறான். வயோதிகர்களை, தன்னினும் எளியவர்களை உயிர்ராசியாகக் கூடக் கருதுவதில்லை. எல்லாம் தனக்குத் தெரியும் என்று முன்னோர் வாக்குகளை மீறி நடக்கிறான். அவர்கள் கனவுகளைத் தகர்த்து தன்வழியே தருக்கனாய்ச் செல்கிறான்.

இது ஒருபுறம் இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் மேம்பட்ட ஒன்று இருக்கிறது. அதற்கு அவனைப்போல் ஒற்றைப்படையான குணமில்லை. எட்டுக்குணம் கொண்டது அது.

முழுமையைச் சொல்ல தமிழில் எட்டு, பத்து என்ற எண்வகையைப் பயன்படுத்துவார்கள். ‘எட்டுத்திசை’ என்பர். அது ‘எல்லாத் திக்கும்’ என்றே பொருள்படும். ‘ஒன்றுக்குப் பத்துமுறை கேட்டுவிட்டேன்’ என்பார்கள். அளவற்ற முறை கேட்டுப் பார்த்ததை அவ்வாறு சொல்கிறார்கள். 

அந்த எண்குணமுள்ளதைச் சிலர் இயற்கை என்கிறார்கள். கூருணர்ச்சி பெருகியவர்கள் அதை ஆன்மிக அனுபவமாகத் துய்த்திருக்கிறார்கள். அதைக் கண்டவர்கள் என்பதால் விளக்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். உள் கட’ந்த ஒன்றைக் கடவுள் என்கிறார்கள். நாம் இறை என்றே கருதுவோம்.

அந்தப் பேரிறைக்கு வாய்த்த எண்குணங்களையும் வகுத்திருக்கிறார்கள். 
 1. தன்வயத்தன் ஆதல் 
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பந்த பாசங்களிலிருந்து நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவில்லாத ஆற்றலுடைமை
8. வரம்பில்லாத பேரின்பமுடைமை



இவ்வெண்குணங்களும் வாய்க்கப் பெற்றவன் கண்முன்னே தோன்றுகின்ற அருளாளனாகவும் இருக்கலாம். கண்ணுடையோர் மட்டுமே அத்தகையோரைக் காண்பர்.

அத்தகைய எண்குணம் வாய்க்கப்பெற்ற வல்லானை உணர்ந்து அறிந்து தாள்பணிந்து வணங்காத ஒருவன் தலையைக் கொண்டிருந்தால்கூட அவன் தலையைக் கொண்டுள்ளவனாகக் கருதப்பட வேண்டியவன் இல்லை’ என்கிறார் வள்ளுவர். அதாவது ‘தலையற்ற முண்டமே’ என்று வைகிறார். 

ஆனால், பாருங்கள்... அவன் தலையிலும் உடலிலும் ஐம்பொறிகளும் உள்ளனவே என்று மேல்முறையீடு செய்வார்கள். ஐம்பொறிகள் இருந்தும் இல்லாதனவே’ என்கிறார். கண் நன்றாகப் பார்க்கிறது,

காது நன்கு கேட்கிறது, தொடுவுணர்ச்சி உண்டு’ என்பார்கள். ‘காண்பதும் கேட்பதும் உணர்வதும் குணங்கெட்டவைகளைத்தாம். அவற்றின் அருங்குணங்கள் அழிந்து வெறும் நுகர்குணங்களாக மிஞ்சியுள்ளன. அதனால் அவ்வுறுப்புகள் குணமிழந்தவையே’ என்கிறார் வள்ளுவர். 

எண்குணமுள்ள பேரிறையின் தாள் கண்டு வணங்காத தலையுள்ளவன் அதைக் கொண்டிருந்தும் இல்லாதவன். பொறிகள் இருந்தும் அற்றவன். அவற்றுக்குப் புலனுணர்ச்சிகள் இருந்தாலும் அவை அவற்றின் பண்பழிந்தவை’ என்கிறார்.

இதோ குறள் (அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் எண் 9)
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ பொருள் புரிகிறது. 

கோளில் - கோள் இல் - கோள் என்றால் கொள்ளுதல், கொண்டிருத்தல். இல் என்றால் இல்லை. 

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில் - எட்டுக்குணமுடைய இறைவன் தாள்களைப் பணிந்து வணங்காத தலையை ஒருவன் கொண்டிருந்தும் அது இல்லாததே ஆகும். 

பொறியில் - அத்தலையில் பொறிகள் ஐந்தும் இருந்தென்ன... அவையும் இல்லாதனவே.

குணமிலவே - அவற்றுக்கு புலன் உணர்ச்சிகள் இருந்துமென்ன அவை குணமில்லாதவையே. 

எண்வகைப் பண்புகளையுடைய இறைவனின் திருவடியை வணங்காத தலை இருந்தும் இல்லாததே. அத்தலையில் பொறியுறுப்புகள் இருந்தும் இல்லாதனவே. அவற்றுக்குப் புலப்பாடுகள் இருந்தும் இல்லாதனவே. 

1) தன்வயத்தனாதல் - சுதந்திரம் உடையவனாக இருத்தல். அதாவது பிறர் வயப்பட்டு தொழிற்படாது, அனைத்திலும் சுதந்திரம் உடையவன். இவனது ஆணைவழியே அனைத்தும்.

2) தூய உடம்புடைமை - உயிரின் இருப்பை எமக்கு அறிய உதவுவது உடம்பு. அதுபோல் இறைவனது இருப்பை அறிந்து கொள்வதற்கு அவனது அருள் உதவுகின்றது. எனவே உவமைகளைக் கடந்த, இப்படிப்பட்டது,இத்தகையது என்ற வர்ணனைகளுக்குள் அடங்காத அருளையே தனது உடலாகக் கொண்டிருப்பவன். அருளே அவனது திருமேனி.

3) முடிவிலா ஆற்றல் உடையவன் / அளவிலா ஆற்றல் உடையவன் -  அறிவித்தாலன்றித் தாமே அறியமாட்டாத உயிர்களையும் அசைவித்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஏககாலத்தில் அறிவித்து, அசைவித்து அனைத்தையும் ஆளுகின்ற ஆற்றல். எச்செயலையும் எக்காலத்திலும் செய்ய வல்லமை உடைவனாக இருத்தல்.

4) இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் - இறைவன் இயல்பாகவே  ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசத்துக்குள் அகப்படாதவன். ஆணவம்,கன்மம்,மாயை என்னும் பாசம் இறைவனை அணுகும் திறனற்றவை. இறைவனும் இயல்பாகவே அவற்றில் இருந்து விலகி; தூய்மையானவனாக இருப்பவன்.

5) பேரருள் உடையவன் - பயன் கருதாது அருள் வழங்கும் தன்மையுடையவன். ஆன்மாக்கள் தங்களைப் பிடித்துள்ள ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களின் நிமித்தம் அறிவு சுருங்கி, பேரின்பத்தை அனுபவிக்கமுடியாது துன்புறுவது கண்டு; அவற்றுக்கு பாசநீக்கம் செய்து பேரின்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும் என்று எழுகின்ற பெரு இரக்கமே இறைவனின் பேரருள். உயிர்களுக்கு பிறவிகள் தந்து, வினைகளைப் போக்கி, ஆன்மாவை மெதுமெதுவாக பக்குவப்படச்செய்து, பாசங்களிலிருந்து நீக்கி விடுவித்து முக்தி வழங்குகின்ற இறைவனின் ஒப்புவமையற்ற பெரு இரக்கம்.

6) இயற்கை உணர்வினன் -  ஆன்மா கருவி கரணங்களின் துணையினால் அறிவிக்க அறிவது.( ஐம்புலன்களின் துணையோடும் ஐம்பொறிகளின் மூலம் அறிந்து கொள்வது) ஆனால் இறைவன் தன்னியல்பால் அறிவுடையவானாக விளங்குதல். அனைத்தையும் இயல்பாகவே தானே அறியும் தன்மை உடையவன்.

7) முற்றுணர்வினன் - அறிவு இயற்கையாகவே விளங்குவதுடன்;  ஏக காலத்தில் அனைத்தையும் உணருகின்ற முற்றறிவு உடையவன்.அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.

8) வரம்பிலா இன்பம் உடையவன் / அளவிலா ஆனந்தம் உடையன் -  பேரின்பம் உடையனாக விளங்குதல். அதாவது யாதொரு குறையும் இல்லாதவன்.

தன்வயத்தனாதல்,தூய உடம்புடைமை,முடிவிலா ஆற்றல் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை 
ஆகிய நான்கும் இறைவனின் சத்து தன்மைக்குள் அடங்கும். 

முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை ஆகிய மூன்றும் சித்து தன்மைக்குள் அடங்கும். 

வரம்பிலா இன்பம் உடைமை ஆனந்தத்தன்மைக்குள் அடங்கும். 

எனவே சச்சிதானந்த நிலையாகிய இறைவனின் இயற்கைத்தன்மையை சைவசித்தாந்தம் அழகுற விரித்து தெளிவுபடுத்துகின்றது என்றால் மிகையில்லை! 

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்- சிவஞான போதம் 

அதுசரி, சைவநூல்கள் இறைவனை நிர்க்குணன் என்றும் குறிக்கின்றது. எண்குணன் என்றும் குறிக்கின்றது. குழப்பமாக இருக்கே?
மும்மலப்பிணிப்பால் வருகின்ற சாத்வீகம்,இராசதம்,தாமதம் என்னும் முக்குணங்களைக் கொண்டிருப்பவன் அல்லன் என்ற பொருளிலேயே நிர்க்குணன் என்று சைவநூல்கள் குறிக்கின்றன.

தடத்தநிலையில் எண்குணனாக வெளிப்படும் இறைவனின் எண்குணங்கள் சொரூபநிலையில் வெளிப்படுத்தப்படாது "சும்மா" இருக்கும் சிவமாக சிவப்பரம்பொருள் விளங்கும். இந்நிலையில் சச்சிதானந்தம் என்று போற்றப்படுகின்றார் என்று விரிவாகப் பார்த்தோம்.

பரிமேலழகர் உரை
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

மு.வரதராசனார் உரை
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்ல குணங்களே நலம் வாழ அடிப்படை.

3 comments:

  1. Wowwwww arumayaana website... Super learning indetail... Great work...

    ReplyDelete
  2. திருக்குறள் என்பது பகுத்து அறிந்து உணர்வதே, இவ் உரைகள் போல வெறும் அறிவைக் கொண்டு மட்டுமே உரைப்பதல்ல.

    செல்வரசன்
    திருக்குறள் நெறியாளர்.

    ReplyDelete
    Replies
    1. அறிவில்லாமல் எப்படி பகுத்து அறிந்து உணரமுடியும்?

      Delete