Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

குறள் 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]

பொருள்
அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஆழி - சக்கரப்படை; ஆணைச்சக்கரம்; கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன்திகிரி; யானைக்கைந்நுனி; கடல் கடற்கரை காண்க:ஆளி; குன்றி கணவனைப்பிரிந்தமகளிர்இழைக்கும்கூடற்சுழி.

அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன்

தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்

சேர்ந்தார்க்கு - சேர்ந்தார் - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

அல்லால் - அல்லாமல்

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

ஆழி - சக்கரப்படை; ஆணைச்சக்கரம்; கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன்திகிரி; யானைக்கைந்நுனி; கடல் கடற்கரை காண்க:ஆளி; குன்றி கணவனைப்பிரிந்தமகளிர்இழைக்கும்கூடற்சுழி.

நீந்து - கிறேன், நீந்தினேன், வேன், நீந்த, v. n. To swim as living creatures, நீரில்நீந்த. 2. To swim over, swim out, நீந்தியேற. 3. To pass over, or though, escape from, கடக்க.

நீந்தல் - கடத்தல் 

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
அறக்கடலாய் விளங்கும் சான்றோனான இறைப்பொருளே அந்தணன் இங்கே. அத்தகைய இறைவனின் துணை இப்பிறவி பெருங்கடலை கடக்க மிக மிக தேவை. அவனை ஒரு காலமும் மறவாது (எப்பொழுதும் நினைத்துக்கொண்டு) அவன் தாள் பற்றி இருப்பவர் இப்பிறவி பெருங்கடலை நீந்த முடியும். மற்றவர்கள் இந்த பிறவி பெருங்கடலை நீந்திக் கடத்தல் மிக மிக அரிது. 

வாழ்க்கையென்பதை ஒரு கடலுக்கு ஒப்பாகச் சொல்வது வழக்கு. கடலானது சோர்வைத்தரும் நீண்ட தூரம், ஆழம், ஆர்ப்பரிக்கும் அலைகள், ஆபத்தை விளைக்ககூடிய பல உயிரினங்கள் என்று நீந்திக் கடப்பதற்கு ஒரு சவாலான களமாக இருப்பது. அதைக் கடப்பதற்கு எப்படி ஒரு நல்ல நாவாய் தேவையோ, நாவாயைச் செலுத்த மீகாமன் தேவையோ, அதைப் போன்றவன் தான் அறக்கடலாய் விளங்கும் சான்றோனான இறைப்பொருள். அவனைத் துணையெனக் கொண்டே, பிறவியாகிய,  பேராபத்துகளும், கடப்பதற்கு பல சவால்களும் நிறைந்த மனித வாழ்கையைக் கடக்கமுடியும்.

திருக்குறளை மூன்று வகையில் பார்க்கலாம். நெறிகள். அறங்கள். மெய்யறிதல்கள். நெறிகளாக மட்டுமே நாம் கண்டு வருகிறோம். பல குறள்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் குறள் ஒருபோதும் இதைச்செய்தாகவேண்டும் என்று சொல்வதில்லை. இதைச்செய்யாவிட்டால் உனக்கு இன்ன தண்டனை என்று சொல்வதில்லை. மனுநீதி அல்லது குரான் போன்ற நூல்களுடன் ஒப்பிட்டுநோக்கினால் இதைக் காணமுடியும். குறள் கனிந்த குரலில் பேசுகிறது. அந்தக் கனிவு எங்ஙனம் வந்தது? அது அறத்தில் வேரூன்றியதாக இருப்பதனால்தான். அறவாழி அந்தணன் என்றே அது இறைவனைக் காண்கிறது. இது சரி இது தவறு என்ற இறுதி கூறும் அதிகார நிலையில் நின்றபடி குறள்பேசுவதில்லை. வாழ்க்கையின் போக்கு இவ்வாறு இருக்கிறது, இதில் நீ இவ்வாறு இருப்பது நலம் பயக்கும் என்று சொல்கிறது. இந்த அறநோக்குதான் குறளின் நெறிகளுக்கு அடிப்படையாகும். அன்றி மதமோ அதிகாரமோ அல்ல.

அந்த அறநோக்கு எங்ஙனம் வருகிறது? அது குறளில் உள்ள மெய்யறிதலில் இருந்தே. நுண்மையான புடவிப்பேரியக்கம் குறித்த மறையறிதல் குறளாசிரியருக்கு உள்ளது. ஆகவேதான் அவர் அறிவருக்கு அறிவர் என்று சொல்லப்படுகிறார். அந்த மெய்யறிவை நாம் குறளின் பல பாடல்களில் அறியமுடியும். அதிலிருந்தே வாழ்க்கைப்பேரியக்கம் குறித்த அறிதலை அவர் அறிந்தார்.

இந்தமூன்று தளங்களிலும் நிற்கும் குறளை அணுகுவதற்கு நுண்தத்துவநோக்கு தேவை. அதை சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நுண்ணறிவால் நீங்கள் குறளைப்பற்றி எழுதலாம். எழுத வேண்டும். வாழ்த்துக்கள்
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அறவாழி யண்ணல்” (சீவக 1611)
“ஒண்மணி அறவாழி” (சீவக 3023)
“அருளோடெழும் அறவாழி அப்பா” (திருநூற் 5)
“அறவாழி கொண்டே வென்ற அந்தணனே” (திருநூற் 27)

“கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணன்” (சம்பந்தர்.கொடிமாடச் 1)
“இமையோர் போற்றும் அந்தணனை” (அப்பர்.ஆரூர் 4)

“அறவனை ஆழிப்படை அந்தணனை” (திருவாய் 1.7:1)

“அறவன் கழல்சேர்ந்து” (சம்பந்தர் அரிசிற் 11)

குறிப்பு
பிறிது ஆழி என்று இருப்பின் அறமல்லாத மறமாகிய ஆழி என்று கொள்ளுதல் கூடும். பிறவாழி என்று பன்மையாகக் கூறியமையின் அறத்தின் இன்மாகி பொருள் இன்பக் கடல்கள் என்று உரை கூறுவதே பொருந்தும். பிற ஆழிகளைக் கடக்க ஒராழி உதவும் என்றது ஒரு நயம்

பரிமேலழகர் உரை
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).

மணக்குடவர் உரை
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தூய நெஞ்சத்துக்குத் துயரில்லை.

No comments:

Post a Comment