தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்
குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
தானம் -இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

இரண்டும் -இரண்டு

தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

தங்கா - நிலைபெறாத ; தங்காத ; அடங்காத 

வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை.

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

வழங்குதல் -  இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்.

வழங்காது - இயங்காது 

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
அறவழியில் ஈண்டு பிறருக்கு மனதில் இருந்து உவகையுடன் கொடுத்தாலே தானம் ஆகும். அதுப்போல ஐந்து பொறிகளை அடக்கி ஆளுதல் தவம் ஆகும். இத்தகைய தானத்தையும் தவத்தையும் உலகத்தோர் பின் பற்ற முடியாதநிலை மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டால் உண்டாகும். ஏனெனில் மழை பெய்யாவிட்டால் செல்வம் செழிக்காது. வறுமை வளரும் (குற்றங்கள் பெருகும்). வறுமை வளர்ந்தால் தானம் செய்ய முடியாது. மேலும் தவமும் செய்யமுடியாது. ஆதலால் மழை பொய்த்தால் இல்லறமும் (தானமும்) துறவறமும் (தவமும்) மிகவும் பாதிப்பு அடையும். 

உன்னதமானவர்கள் உலகத்தின் நன்மைக்கே வேண்டுவார்கள், அவர்கள் தவமும் அதற்காகவே! ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே’ என்பதே சித்தர்களும் முத்தர்களும் வேண்டியது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஔவையார் கூறுகிறார் 
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தானமும் தவமும் தாம்செயல் அரிதே
தானமும் தவமும் தாம்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே” (ஔவையார்)

பரிமேலழகர் உரை
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).

மணக்குடவர் உரை
தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது

மு.வரதராசனார் உரை
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மழை பொய்த்தால் அறம் கெடும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain