சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

சிறப்பொடு - சிறப்புடன் 

பூசனை - நாள்வழிபாடு; சிறப்பித்தல்

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லாது - செல்லாமல் 

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

வறக்கு - வற-த்தல் - vaṟa-   12 v. intr. [K. baṟu,bari, M. varu, Tu. vare.] 1. To dry up;காய்தல். (பிங்.) 2. See வறங்கூர்-, 1. வானம் வறக்குமேல் (குறள், 18). 3. To grow lean; to shrink;குறைந்து மெலிதல். (W.)

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

வானோர்க்கும்வானோர்- தேவர்

ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம்; இம்மை; விரைவு; புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது.

முழுப்பொருள்
கோயில்களில் தினம் தினம் பூஜைகள் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு தரம் (அல்லது சில தடவை தான்) திருவிழாக்கள் நடைபெறும். அதுபோல நம் வீட்டிலும் பொங்கல் போன்ற நன்றி செலுத்தும் பண்டிகைகளை நடத்துவோம். மேலும் மூதாதையர்களுக்கு நீத்தார் கடன் செலுத்துவோம். இவையாவும் வானோர் எனக்கருதப்படும் இறைவனுக்கும் தேவர்களுக்கும் செலுத்தப்படுவன ஆகும். ஆனால் வானில் இருந்து பொழியும் மழை பெய்யாவிட்டால் பூமி விளையாது. உணவு உற்பத்தியாகாது. வர்த்தகம் நடக்காது. செல்வம் செழிக்காது. வறட்சி ஏற்பட்டால் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்படும். அப்படி இருக்கையில் வானோர்க்கு நடத்தப்படும் திருவிழாக்களை நடத்த முடியாமல் போகும். 

ஆதலால் மழை மிக மிக தேவை. இன்றியமையாததாகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின்” (மணி 10:72)

“மண்ணின்மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு” (பெரிய திருஞான 562)

பரிமேலழகர் உரை
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

மணக்குடவர் உரை
சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

மு.வரதராசனார் உரை
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

சாலமன் பாப்பையா உரை
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மழை இல்லையேல் மக்களின் இறைநம்பிக்கை மங்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain