குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
பொருள்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
உடையவர்க்கு - உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்
உடையார் - உடையவர்கள் ; uṭaiyār n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.
ஒல்லாவே - பொருந்தாத ; உடன்படாத; தகாத;
தீய - தீமையான; போலியான.
வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல்.
வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.
வாயால் - வாயினால்
சொலல் - சொல்ல மாட்டார்கள்
முழுப்பொருள்
ஒழுக்கத்தை பேணுபவர் பொருந்தாத (ஒழுக்கத்தின் தகுதிக்கு பொருந்தாத) தீய சொற்களை தவறியும் (சறுக்கியும், மறந்தும், வழுக்கியும்) தன் வாயால் கூற மாட்டார். தன் சிந்தனையில் இருப்பதே வாயில் வரும். ஆதலால் சிந்தையில் கூட தீயவற்றை பழக மாட்டார்கள்.
ஆதலால் நாம் நமது குடும்பங்களில் நல்லவற்றையும் நற்சொற்களை மட்டும் பேசுவதை ஒரு பண்பாடாக (வழக்கமாக) பேணவேண்டும். இனிய சொற்கள் இருக்கும் பொழுது ஏன் இனிமை இல்லாத சொற்களை பேசுகிறாய் என்று வள்ளுவர் முன்னமே நம்மை கேட்டுள்ளார்.
தீச்சொல் என்பது பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் பொய், ஒருவரைப்பற்றிய கோள்சொல், கடுஞ்சொல், வீண்சொல் போன்றவை. கேட்ட வார்த்தைகளும் பொருந்தும்.
இனியவை நாற்பது, “ஆக்கம் அழியினும் அல்லவை கூறா தேர்ச்சியின் தேர்வினிய தில்” என்று வளமே அழியினும் வன்சொல் சொல்லாதிருக்கும் தேர்ச்சியினைவிட உயர்ந்த தேர்வும் இனியதும் இல்லை என்கிறது.
"பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்" என்று தசரதனை பற்றி கம்பர் இராமாயணத்தில் கூறுகிறார். அதாவது பொய்யான சொற்களைப் போற்றாத உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன் (/தசரதன்) என்று பொருள்.
கம்பராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம்
=============================================
கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.
'சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
அதாவது சிங்கம் தன் குட்டிக்கு ஊட்டும் இரையை நாய் தன் குட்டிக்கு ஊட்டுவது போல பரதனுக்கு நாடு கொடுக்க விரும்பினாளே கைகேயி என்று இலக்குவன் கோபத்தில் பேசுகிறான்.
ராமன் இப்படி பதில் சொல்கிறான்
"விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்"
ஊழ்வினை (விதி) செலுத்தத்தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர் வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல்வினைவலியால் பெற்றோர் அன்பின்மை உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும் தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன்.
அதுத்தபடியாக
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி' என்றான்.
அதாவது விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற வல்ல விதி என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற மனத்தை ஆற்ற முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்; பின்னர் இதற்கு ஏதாவது முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும் என்பதாகப் பேசுகிறான்.
அப்போது இராமன் சொல்கிறான்,
"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.
வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில் கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.
அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.
ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், ‘ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’
அவன் - இலக்குவன்; ஆய்தந்து - ஆராய்ந்து; அவ் உரை கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை நோக்கி); ‘ஐய! - தம்பி; மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன நாக்கினால்; நின்தன் வாய்தந்தனகூறுதியோ? - உன் வாயில் வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்) தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில் நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை என்றால் - (உன் கருத்திற்கு மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும் ஆனால்; அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது; என்னோ?’ - எப்படிப்பொருந்தும்.
வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன் ‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன். ஆகவே, அன்னைக்கும்
தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர்
செயலாகும் என்பது இராமன் சொல்லியதாகும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.).
மணக்குடவர் உரை
தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.
மு.வரதராசனார் உரை
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
சாலமன் பாப்பையா உரை
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
Thirukkural - Management - Personality Development - Self Discipline
A self-disciplined person never speaks ill of others. He never resorts to meaningless, hurtful, unsuitable, and uncivilized words even unconsciously, that is., by mistake or by chance, confirms Kural 139.
Man of good conduct cannot speak ill
Even forgetfully.
A self-disciplined person is extremely conscious of what he says that there is no chance for slip of the tongue or slip of the mind.
No comments:
Post a Comment