இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

thirukkural meaning விளக்கம் குறள் 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை
குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்


இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

எனத் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

உணர்ந்தவை - உணர்-தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னாமை - மேவாது ; செய்யாது 

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
இது துன்பம்,  கீழ்மை, இச்செயலை செய்தால் பிறர் துன்பப்படுவர் என்று நீ உணர்ந்தாயென்றால் அந்த துன்பத்தை /செயலை பிறருக்கு  செய்யாதே. ஆதலால் ஒரு செயலை செய்யும் முன்  துன்பம்  விளைவிக்குமா என்று ஆராயவேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் தான் ஒருவரால் அவ்வினை பயன் துன்பமா அல்லது இன்பமா என்று உணர முடியும். துன்பம் என்றால் பிறருக்கு செய்யாதே.

ஒப்புமை
பழமொழி (266) நானூறு இதை அழகான வரிகளில், 
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு 
நினைத்துப் பிறர்பனிப்பச் செய்யாமை வேண்டும்” என்று சொல்கிறது.

”தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்” (சீவக.3107)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).

மணக்குடவர் உரை
தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தீமையென நாம் உணர்வதைப் பிறருக்குச் செய்யக்கூடாது.

காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி: பா ல சு ந் த ரி)
மனப்பூர்வமான புனிதமான ஆசை எதுவும் கண்டிப்பாக நிறைவேறிவிடும். அது ஆழ்மனதின் அற்புத சக்தி. நமது ஆசை அது சம்பந்தமான பலரை ஈர்த்து அதன் மூலமாக நிறைவேறிவிடும். இது பிரபஞ்சத்தின் அற்புத சக்தி. இதை மனப்பூர்வமாக உணர்ந்தவர் காந்தி.

ஏழைகளுக்கு உதவ வேண்டும், அவர்கள் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும். அதற்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே அவரது லட்சியம்.

சீக்கிரமே அந்த லட்சியத்தில் முதலடி எடுத்து வைக்கும் வாய்ப்பைப் பிரபஞ்சம் வழங்கியது காந்திக்கு!

பாலசுந்தரம் என்ற ஒரு தமிழர், கந்தை அணிந்து முன் பற்கள் உடைந்து ரத்தம் வழிய, முண்டாசுத் துண்டைக் கையில் ஏந்திக் காந்தியை சந்திக்கிறார் (சக்திக்கிறார்). அவர் கூறிய தகவலை உடன் பணிபுரியும் தமிழர் ஒருவர் மொழி பெயர்த்துக் கூறிகிறார் காந்தியிடம்.

ஒரு பிரபல ஐரோப்பியரிடம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். அவருடைய எஜமான் அவர் மீது கோபம் கோண்டு அவரை அடித்து பற்களை உடைத்து இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார் காந்தி.

உடனடியாக அவருடைய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார் காந்தி. மருத்துவ சான்றிதழ் பெற்று மாஜிஸ்ட்ரேட்டிடம் தனது வாக்கு மூலத்தை அளித்தார். வேறு வழியின்றி அடித்தவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அவரை தண்டிக்கும் நோக்கம் இல்லை காந்திக்கு. இரக்கமற்ற அவரிடமிருந்து பாலசுந்தரத்தை விடுவிப்பதே அவரது நோக்கம். 

சட்டப்படி ஒரு ஒப்பந்தக்கூலி அடிமையாகவே கருதப்படுவர். அவர் எஜமானின் சொத்து. கூலி விலகினால் அவரைக் சிறையில் தள்ளலாம். அதே சமயம் எஜமான் தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்துசெய்யலாம். அல்லது வேறு ஒருவரிடம் மாற்றி விடலாம். 

எனவே காந்தி கூறினார். உங்களைத் தண்டிப்பது என் நோக்கம் அல்ல. அவரைப் பலமாக அடித்து விட்டதை உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே அவரை வேறு ஒருவரிடம் மாற்றிவிடுங்கள் என்றார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். 

அதன்படி வேறு ஒரு எஜமானரை காந்தியே தேடிக் கண்டு பிடித்து அவரிடம் பாலசுந்தரத்தை மாற்றிவிட்டார். இந்தியர்கள் யாரும் ஒப்பந்தக் கூலிகள் வைத்துக் கொள்ளக்கூடாது.

எனவே மீண்டும் ஒரு ஐரோப்பியரிடம் பணி புரிய வேண்டிய கட்டாயம். வழக்கு பாலசுந்தரத்திற்கு சாதகமாக முடிந்தது. இது அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காதுக்கும் எட்டியது. கடல் கடந்து தமிழ் நாட்டையும் எட்டியது.

தங்களைக் காத்து ரட்சிக்கும் ஆபத்பாந்தவனாக காந்தியைக் கொண்டாடினார்கள். இதன் மூலம் பல ஏழைகளின் தொடர்பும், அவர்களுக்கு உதவும் வாய்ப்பும் கிட்டியது காந்திக்கு!

இந்த வெற்றியை அவர் 25 வயதுக்குள்ளேயே எட்டிவிட்டார். வெற்றி பெற்றும் ஒரு விஷயம் அவர் மனதை உறுத்திய வண்ணம் இருந்தது.

ஒரு ஐரோப்பியரை சந்திக்கும் ஒவ்வொரு இந்தியனும் ஒப்பந்த தொழிலாளியும், தலையில் அணிந்திருப்பதை எடுத்துவிட வேண்டும். அது தலைப்பாகை, முண்டாசு, குல்லா எதுவாயினும் எடுத்துவிட வேண்டும். இந்த பழக்கம் நிர்பந்தமாக அவர்கள் மீது சுமத்தப்பட்டு வந்தது.

எனவேதான் காந்தியின் தலைப்பாகைக்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் மிகவும் வேதனைப்பட்டார். வெட்கப்பட்டார். பாலசுந்தரமும் தலையில் அணிந்த துணியைக் கையில் ஏந்தி வந்தது அவர் மனதை ரணமாக்கியது. தன்னையும் வெள்ளையரைப் போல் எண்ணிவிட்டது எண்ணி எண்ணி குமைந்தார். வந்த உடனேயே முண்டாசுத் துணியை அணியும்படி வற்புறுத்தினார்.

அவர் தயங்கியபடியே அணிந்தார். அப்போது அவர் கண்களில் தோன்றிய ஒளி..

ஒளி விளக்காய் வழிகாட்டியது பின்னாளைய போராட்டங்களுக்கு! சக மனிதரை அவமதிப்பதில் என்ன கௌரவம் ஏற்படுவதாக மக்கள் எண்ணுகிறார்கள் என்பது புரியாத புதிர்!

உண்மையில் அவர்கள் தன்னைத்தானே அவமதித்துக் கொள்கிறார் என்பதே உண்மை!

இதைத்தான் வள்ளுவன் கூறுகிறார்.