குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]
பொருள்
பொருள்
உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.
உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்
தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.
தோறு - tōṟu . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
தளிர்ப்பத் - தளிர்ப்பு - துளிர்க்கை; மனவெழுச்சி
தீண்டலான்- தீண்டல் - தீண்டுதல்; பிறப்புஇறப்புமுதலியவற்றால்உண்டாவதாகத்கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல்
பேதைக்கு - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
அமிழ்தின் - அமிழ்து - amiḻtu * n. id. 1. Ambrosia.See அமிர்தம் அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64).2. Milk; பால் (பிங்.)
இயன்றன - இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.
இயைவு - இணக்கம்; பொருத்தம் சேர்க்கை
தோள் - புயம்; கை; தொளை.
முழுப்பொருள்
தலைவன் கூறுகிறான் - நான் தலைவியை அணைக்கும் பொழுது (சேரும் பொழுது, கூடும் பொழுது) எல்லாம் என் உயிர் துளிர்க்கிறது உள்ளம் எழுச்சி கொள்கிறது. ஏனெனில் அவளை நான் (அல்லது என்னை அவள்) தீண்டியதால் இப்படி ஆயிற்று. அப்படி என்றால் இத்தனை நாள் அவன் உயிர் இல்லாத எலும்பு சதை குவியலாக தான் இருந்தானாம். அவனை உயிருள்ள மனிதனாய் மாற்றியது எது தெரியுமா? தலைவியின் அழகிய தோள்கள். அவை அமிர்தத்துக்கு ஒப்பானவை. ஏனெனில் கூடும் பொழுது அவன் உடலுக்கு அமரத்துவத்தை தந்து உயிர் துளிரச்செய்தது அவள் தோள். தோள்களின் சிறப்பை கூறுவதை காட்டிலும் புணர்ச்சியின் இன்பத்தையும் அது தரும் உள்ள உவகையையும் கூறுகிறது இக்குறள் என்றே எனக்கு தோன்றுகிறது.
கூடும் ஒவ்வொருமுறையும் அப்படித் தோன்றுவதால் இது அடங்கிய பின் தோன்றும் உவகை அல்ல. உள்ளத்தால் உணரப்படுவதாவே தலைவன் கூறுகிறான். அதற்காகவே "தோறு" என்ற சொல்லையும் "அமிர்தம்" என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளான் வள்ளுவன்.
”நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே” (நற்.82:1-2)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.).
மணக்குடவர் உரை:
சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
மு.வரதராசனார் உரை
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.
Comments
Post a Comment