Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

குறள் 934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
[பொருட்பால், நட்பியல், சூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

செய்து - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

அழிக்கும் - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

சூதின் - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வறுமை - துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை.

தருவது - கொடுப்பது

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - வேறு இல்லை

முழுப்பொருள்
சிறுமை எனப்படும் கீழ்மை, (மனதில்) துன்பம், (மனத்துன்பத்தால் வரும்) நோய், (பெரியோர் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும்) இழிவு ஆகிய பலவற்றையும் தந்து சீர் எனப்படும் செல்வங்கள் (நேர்மை, பொருட்ச்செல்வம், அழகு, நன்மதிப்பு, புகழ், தலைமைப்பண்பு, இயல்பு) அனைத்தையும் அழிக்கவல்ல சூதாட்டத்தைப்போன்று வறுமையும் ஏழ்மையும் துன்பமும் கொடுக்க வல்லது வேறேதும் இவ்வுலகிலில்லை.

சீட்டுக்கட்டின் வழவழப்பில்
ஒரு மாயமிருந்தது.
ஐம்பத்திரண்டு என்கிற அதன்
எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.
தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற
ராஜா ராணிகளின்
இதுவரை பாராத சாயல்கள்
அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்
ரகசியமாக அழைத்தன.
கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்
பதின்வயது சினேகிதன் போல
ஜாக்கி இருந்தான்.
யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு
எப்போதும் கதை சொல்லும்
கிழவி போல பிரியமானது ஜோக்கர்.
ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்
அவரவர் சௌகரியப்படி அமர்ந்து
அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது
பிடித்திருந்தது நிரம்ப.
ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்
விளையாட்டைத் தொடரும்படி  
இருந்த ஒரு வினோத அழைப்பு
சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்
அவிழ்க்கத் தூண்டியது.
பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா
‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று
சிறு நீர் கழிக்கப் போன சமயம்
சும்மாதான் கையில் எடுத்தேன்.
சூதாடியாவதற்குப் போதுமானதாக
இருந்தது அந்தச்
சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.
-வண்ணதாசன்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த நினக்கிலை யாயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்
கோதுமூலம் அவையென ஓர்தியே (கம்ப.மந்தரை 12)

பரிமேலழகர் உரை
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்கள் பல தந்த, நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
In general, people who gamble would loose more money than they might earn. Hence, the gambler lots of trivial things such as 1) stealing money 2) telling lies 3) doing odd disrespected jobs 4) doing immoral stuffs. When one does all these trivial things, coupled with gambling, it leads to destruction of wealth, fame, reputation, respect etc. Hence, we can say that there is nothing like gambling which gives poverty (not just in terms of money but also in terms of reputation)

Questions that I ask to the kid
There is nothing like this which gives poverty.  Which is that?

No comments:

Post a Comment