Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

துறந்தார் பெருமை துணைக்கூறின்

குறள் 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

துணைக் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

கூறின்கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்

வையத்து - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறந்தாரை - மரணம் அடைந்தவரை ; வாழ்க்கையை வெறுமென கடந்தவர்

எண்ணிக் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
இங்கே முக்கியமாக நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது துறந்தவர்களைப் பற்றியும் இறந்தவர்களைப் பற்றியும். ஆதலால் முதலில் அதைப்பார்ப்போம்.

துறந்தவர்கள் என்றால் இவ்வுலகின் பொருளியல் செல்வங்களின் மீதும் இன்பங்கள் மீதும் இருக்கும் பற்றைத் துறந்தவர்கள் என்று பொருள். எல்லாம் துறந்த முனிவர்கள் மட்டும் அல்ல இவர்கள். தனக்கும் தனது குடும்பத்திற்கு மட்டுமென்றில்லாது இவ்வுலகிற்கும் / சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் வாழ்வை வாழ்ந்தவர்கள். அறவழில் வாழ்ந்து பொருளையும் இன்பத்தையும் துறந்தவர்கள். இவர்களின் பெருமையை அளக்க முடியாது. இவரைவிட பெரியவர் அவர் என்ற ஒப்பீடு எல்லாம் அபத்தம். (உதாரணமாக இளையராஜா பெரியவரா ஏ.ஆர்.ரஹ்மான் பெரியவரா என்ற அபத்தமான எளிய சண்டையை சொல்லாம்). துறந்தார்கள் நிகரற்ற வல்லமையை கொண்டவர்கள்.

ஏன் பெருமையை பற்றி பேச வேண்டும் ? ஏனெனில் 1) அவர்கள் ஒரு நாளில் வல்லமையை அடையவில்லை. அதற்கு அவர்கள் பலவற்றை துறந்து அதற்காக உழைத்தார்கள். 2) அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் பல போராட்டங்களை சந்தித்து செயல்படுத்தப்பட்டு இருக்கும். ஆதலால் அவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் தேவையாகும்.

இறந்தார்கள் என்றால் மரணம் அடைந்தவர்கள் என்று மட்டும் பொருள் அல்ல. இறத்தல் என்றால் கடத்தல் கழிதல் என்ற பொருள்களும் உண்டு. அதாவது பிறவியில் உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர்கள். பிறவி முழுதும் நேரத்தை மெய்யறியாது வெறுமென பொருளல்லவற்றில் கழித்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை அளவிட முடியாது.

துறந்தவர்களின் பெருமையை மாட்சிமையை வல்லமையை நாம் அளந்து கூறுவது (கூறவேண்டும் என்றால் அது) இவ்வுலகில் எண்ணிக்கையால் அளவிட முடியாத இறந்தார்களின் எண்ணிக்கையை போன்றதாம். ஆதலால் துறந்தவர்களின் மாட்சிமையை அளந்து பார்க்க முடியாது என்கிறார் திருவள்ளுவர்.

பி.கு: இந்திய சமூகத்தில் குலம் கோத்திரம் என்று கூறுவர். இதில் கோத்திரத்தின் தலைவர் என்று விஸ்வாமித்ரர் போன்ற முனிவர்கள் இருப்பார்கள். இவர்களின் கோத்திரங்கள்  வழி மட்டும் வந்தோம் என்று  வேற்று பெருமையடைகிறார்கள் எளியோர்கள். உண்மையில்விஷவாமித்ரர் போன்றோரின் மாட்சிமையை பெருமையை ஓரிரு வரிகளை தாண்டி அறிய முற்படுபவர்கள் மிக அரிது. அதன்படி நடப்பவர்கள் அதனினும் அரிது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வையமும் தவமும் தூக்கிற் றவத்துக்
கையவி அனைத்தும் ஆற்றா தாகலின்
கைவிட் டனரே காதல்ர்” (புறநா 358:3-5)

“திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டுகழிந் தோரே” (மதுரைக் 236-7)

“நினைப்பான் புகில்கடல் எக்கரின் நுண்மண லிற்பலர்
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தனர்” (திருவாய்மொழி 4, 1:4)

“இறந்தனர் இறந்த காலத் தெண்ணிறந் தனர்கள் எல்லாம்” (யசோதர 36)

பரிமேலழகர் உரை
துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).

மணக்குடவர் உரை
காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வாழ்ந்து மறைந்தோரின் எண்ணிக்கையைவிடத் துறவிகளின் பெருமை பெரிது.

No comments:

Post a Comment