Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பெருக்கத்து வேண்டும் பணிதல்

குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
[பொருட்பால், குடியியல், மானம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பெருக்க - perukka   adv. பெருகு-. Greatly,intensely; மிகுதியாய். ஏன் நீ பேராசைகொண்டுபெருக்கத் தவிக்கிறாய்? Loc.

பெருக்கத்து - அறிவும் பொருளும் அதிகமாய் இருபோரிடம்

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல்.

சிறிய - சிறு-மை, இழிந்தது

சுருக்கத்து - சுருக்கம் ஆடைமுதலியவற்றின்சுருக்கு; சிறுமை; வறுமை; இவறல்.

வேண்டும் - இன்றியமையாது

உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

முழுப்பொருள்
ஒருவர் கற்றறிந்த கல்வியினாலும் (அறிவினாலும்) அல்லது ஒருவரிடம் இருக்கும் மிகுந்த செல்வத்தினாலும் புகழ் வாய்ந்தவராக இருப்பின் அவருக்கு பணிவென்பது என்றும் வேண்டும். தன்னிடம் இருக்கும் புகழ் அறிவு செல்வம் ஆகியவற்றினால் மற்றவர்களை அலட்சியம் செய்யக்கூடாது. நினைவில் கொள்க செல்வம் நிலையில்லாதது (போக்கும் விளிந்தற்று) நம்மிடம் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் மிக விரைவாக சென்றுவிடும். நாம் வறுமைக்கு வந்தால் இதே உலகத்துடன் தான் வாழ வேண்டும்.

அதேப்போல் வறுமையில் இருப்பவர் கேடான செயல்களை செய்யலாம் என்றில்லை. அவர்களும் என்றும் தீங்கு நினைக்காது நல்ல செயல்களை செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வில் முன்னேற உயர்ச்சியடைய மேன்மையடைய வேண்டியா உந்துதலுடன் மேலான செயலாற்ற வேண்டும்.

மொத்தத்தில் மானம் என்பது நாம் செய்யும் செயலை பொருத்தது. கல்வியாலும் செல்வதாலும் உயர்வான இடத்தில இருப்பவர்கள் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் (மற்றவர்களையும் நடத்த வேண்டும்).  கீழ்மையான கேடான செயல்களை செய்யக்கூடாது. வறுமையில் இருப்பவர்கள் கேடான செயல்களை செய்யாது வாழ்வில் முன்னேற உயர்வான சிந்தனைகளை கொண்டு மேலான செயல்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மானம் காக்க முடியும். அப்படி செய்தால் மட்டுமே அவர்களுக்கு பெருமை (மானம்).

முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்’ என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம், கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும், என்று கூறுகின்ற நாலடியார் பாடலொன்று இதோ.

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.


மேலும்: பொன்னியின் செல்வன் - முதல் பாகம் திரைப்படத்தில் புத்த பிக்ஷு தலைவர் “மண்வரை பணிபவனே வானம்வரை எழுவான்” என்று கூறுவார்.  (வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன்’இன் வெண்முரசு-கிராதம்-39 இல் இப்படி சில வரிகள் வருகின்றன
இந்திரனை மூன்றாவது ருத்ரனாகிய த்வஷ்டாவின் முன் கொண்டுசென்று நிறுத்தினர் அசுரகுலக் காவலர். “அரசே, அளப்பரிய ஆற்றல்கொண்டிருக்கிறாய். நீ அமைத்த நகர்தான் இதுவரை மண்மேல் எழுந்தவற்றிலேயே முதன்மையானது. அதைப் பார்த்து வாழ்த்திச் செல்லவே வந்தேன். நீ வாழ்க! உன் நகர் நீடூழி வாழ்க!” என்றான்.

நற்சொல் கேட்டு மகிழ்ந்த த்வஷ்டா “அந்தணரே, நீர் விரும்பும் பரிசு எது? சொல்லுங்கள், இப்போதே அளிக்கிறேன்” என்றான். “நான் பரிசில்பெற வரவில்லை, ஒரு சொல்லுரைத்துச் செல்லவே வந்தேன். அரசே, முழுமையான செல்வத்தையும் அழகையும் இன்பத்தையும் மானுடரோ அசுரரோ நாடிச் செல்லலாகாது. முழுமையைத் தேடும் இன்பமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையில் அமர்வது அவர்களுக்கு பெருந்துன்பமே ஆகும்” என்றார் அந்தணர்.

“அரசே, முழுமையை நாடி மலர்களுக்கு தேனீக்கள் என தெய்வங்கள் வந்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் இப்பெருநகரை அடையவிரும்பினால்கூட நீ அத்தெய்வத்துடன் சமராடவேண்டியிருக்கும். அது உன்னை அழிவுக்கே கொண்டுசெல்லும். மானுடர் பெற்றுப்பெருகுபவர். அன்னத்தில் முளைக்கும் எதுவும் அன்னத்தின் கட்டுக்குள் அடங்கியதே. அன்னம் மிகுவதில்லை குறைவதுமில்லை. அன்னம் அழிந்தே அன்னம் பிறக்கமுடியும். அன்னம் எரிந்தே அன்னம் வாழமுடியும்.”

“வேந்தே, தெய்வங்கள் எண்ணத்தில் பிறப்பவர்கள். எண்ண எண்ணப் பெருகுபவர்கள். ஆகவே தெய்வங்களை மானுடரோ அசுரரோ வெல்லவே முடியாது. தேவர்கள் எண்ணங்களை உருவாக்குகிறார்கள். எண்ணங்கள் வேள்விகளாக ஆகுதியாகின்றன. செயல்களாக பெருகுகின்றன. வேள்வியும் செயலும் தேவர்களை பெருக்குகின்றன. ஆம், நீ வல்லவன். தெய்வங்களை எதிர்த்து நிற்பவன். ஆனால் அச்சமர் புயல்காற்றில் மலர்மரம் என உன் உள்ளத்தை ஆக்கும். ஒருகணமும் நீ உவகைசூடி  அமைய முடியாது.”

“ஆகவே முழுமைக்கு முன்னரே நின்றுவிடுவதே இன்பத்தில் என்றும் வாழும் வழி. உலகோருக்கு என முன்னோர் நெறியொன்று அமைத்துள்ளனர். அணிகொள்கையில் ஒரு குறை வை.  அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளி பிறருக்கு அளி. அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. அகல்களில் ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும். அதுவே வாழ்நெறி” என்றார் அந்தணர்.

“வெறுமையும் முழுமைகொள்ளலாகாது என்றறிக! எனவே நீர் சேந்தும்போது ஒரு குவளை மிச்சம் வை. மலர்கொய்யும்போது ஒரு மலர் மிஞ்சியிருக்கட்டும். மைந்தரைக் கொஞ்சும்போது ஒரு சொல் உள்ளத்திலேயே எஞ்சட்டும்” என்றார் அவர். “பெருக்கத்தில் பணிவென்று மூதாதையர் சொன்னது இதையே. செல்வம் இன்பமென மாறும்போதே பொருள்கொள்கிறது. ஆணவமென இருக்கையில் அது நோய்க்கட்டியே ஆகும்.”

பரிமேலழகர் உரை
பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும், (பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person might have learned knowledge, fame, wealth, success. However any person should have humility. Out of success one should not disregard people and process (and not take things for granted). Because, all these success, knowledge, fame, wealth are not permanent. If we come to poverty or face failure, we need to face these people and live in this world only. 

At the same time, a person in poverty or a person who doesn't have success should not give up his integrity/values and should aspire to do great things in life and grow. 

Over all our respect is based on the work we do and how we do the work.

Questions that I ask to the kid
What should a successful or wealthy person have? What should a failure or poor person have?

No comments:

Post a Comment