உட்பகை அஞ்சித்தற் காக்க

thirukkural meaning விளக்கம் குறள் 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் பொருட்பால், நட்பியல், உட்பகை
குறள் 883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
உட்பகை - நட்புப் பாராட்டிக் கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு

அஞ்சித் - அஞ்சுதல் - பயப்படுதல்.

தற் - தன், தன்னை

காக்க - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

மட்பகையின் - மட்கல மறுக்குங்கருவி; குயவன்; மண் +. 1.Potter's instrument for paring clay

மாணத் - மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

தெறும் - தெறுதல் - சுடுதல்; காய்ச்சுதல்; கோபித்தல்; வருத்துதல்; தண்டஞ்செய்தல்; அழித்தல்; கொட்டுதல்; பகைத்தல்; கொல்லுதல்; தங்கல்; நெரித்தல்.

முழுப்பொருள்
மணலில் இருந்து பானை செய்யும் பொழுது அதனை செய்கின்றவர் சற்று தளர்வானாலும்  பானை செய்யப்படும் கருவி  முழு பானையை அழித்துவிடும். ஆதலால் பானை செய்கின்றவர் சற்றும் தளராமல் பானையை செய்யவேண்டும்.  அதுபோல ஒரு நட்பு வட்டாரத்திலோ அல்லது தொழிலிலோ உட்பகை அஞ்சி தன்னை பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும். ஏனெனில் நட்பினில் அல்லது தொழிலில் தளர்வு ஏற்படும் பொழுதோ அல்லது தோல்வி ஏற்படும் பொழுதோ உட்பகையானது தலைதூக்கும். அப்படி உட்பகை தலைதூக்கும் பொழுது இருவருக்கும் நட்பினுள்ளோ அல்லது தொழிலிலோ பூசல் உருவாகி நட்பினை  அல்லது தொழிலினை அழித்துவிடும்.

உட்பகையில் வரும் கோபம் இயற்கையான மானுட இயல்பும் கூட. அந்த கோபத்தில் நியாயமும் இருக்கலாம். அதனை வெளிப்படுத்திய விதம் தவறாக அல்லது சற்று அதிகமாக இருக்கலாம். இங்கே தவறு செய்தவர் கோபப்பட்டவர் மீது தவறு கண்டுபிடிப்பாரே ஒழியே தன்மீது உள்ள தவறை மறைத்துவிடுவார் அல்லது பெரிய தவறு இல்லை என்று கூறிக்கொள்வார் சப்பைக்கட்டுக்காட்டுவார். இந்த சண்டை எல்லை மீறி நட்பு முறியும் சூழலை உருவாக்கிவிடும். ஆதலால் கோபப்படுபவர்  இது எதிர்பக்கத்தில் உள்ள தன் நண்பரோ அல்லது அலுவலக ஊழியரோ நம் கோபத்தினால் ஆத்திரம் அடைந்து விடக்கூடும் என்பதை அறிய வேண்டும். அதனால் நமக்கு இழப்பே ஆகும். அல்லது தவறு செய்தவர் எதிர்வாதம் செய்துகொண்டு பகையை வளர்க்க கூடாது.  ஆதலால் சம்மந்தபட்ட அனைவரும் உட்பகையை தவிர்க்கவேண்டும். உட்பகை எல்லாவற்றையும் அழித்துவிடும் என்பதை உணர்ந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டும் இன்றி இதற்கு வெளியே இருந்துகூட வரவேண்டாம் உள்ளேயே இருந்து உட்பகை என்னும் நோய் நம்மை அழித்துவிடும்.

இக்குறளை நமது உடம்புக்குக்கூட பொருத்திப்பார்களாம். நமது உடம்பின் உள்பாகங்களை சரிவர கவனிக்கயில்லை என்றால் அவை சீர்கேட்டு நம்மையே அழித்துவிடும். அதாவது சரியான தூக்கம் உணவு அமைதி உடற்பயிற்சியில்லையென்றால் நமது இதயம், சிறுநீரகம், குடல், கலீரல், நுரையீரல், கண், மூளை போன்ற உறுப்புகள் பழுதடைந்து இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற எண்ணற்ற உடல்நலங்கள் நமக்கு வந்து நம்மை அழித்துவிடும். ஆதலால் உடம்பை காப்போம் உயிர் வளர்ப்போம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”.................இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு” (நாலடி.237)

பரிமேலழகர் உரை
உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர். ('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்,கெடுதல் தப்பாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க: அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர். மட்பகை தான் அறுக்குங்கால் பிரறியாமல் நின்று அறுக்கும்.

மு.வரதராசனார் உரை
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain