மடியை மடியா ஒழுகல்

குறள் 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
[பொருட்பால், அரசியல், மடியின்மை]

பொருள்
மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய், ஓர்விதவலை


மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை;

மடியை - சோம்பலினை

மடியா - பற்றாது

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்

குடியைக் - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட

குடியாக - குடியினை போன்று

வேண்டுபவர் - வேண்டுகின்றவர் / விரும்புபவர்

முழுப்பொருள்
ஒருவர் வாழ்வில் சோம்பல் என்னும் குணம் மிக தீய விளைவுகளை விளைவிக்கும் ஒரு நோய். அத்தகைய சோம்பல் எப்போதெல்லாம் நம்மை பற்றுமோ அதனை மடித்து ஊக்கத்துடன் வாழ்வில் ஒழுகினால் உயர்ச்சி நிச்சயம்.  ஒழுகல் என்றால் உயர்ச்சி என்றும் அர்த்தம். உயர்ச்சி வேண்டும் என்றால் சோம்பலை மடித்து அல்லது தவிர்த்து ஊக்கத்துடன் செயல்பட்டால் உயர்வான குடியினை ஒருவர் அடைவார்கள். உயர்வான குடி நிலையை அடைய விரும்புபவர்கள் என்றும் சோம்பலை பற்றாது செயலூக்கத்துடன் இருப்பார்கள்.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர். இது சோம்பாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்



சாலமன் பாப்பையா உரை
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

Comments

Popular posts from this blog

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

அறிவற்றங் காக்குங் கருவி

கேடில் விழுச்செல்வம் கல்வி