காக்க பொருளா அடக்கத்தை

குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் 
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
காக்க - காத்தல், பாதுகாத்தல், தடுத்தல்
பொருளா -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. 
அடக்கத்தை - கீழ்ப்படிவு பணிவு 
ஆக்கம் - பொன், செல்வம், சேனை முன்னணி
அதனின் -  அதனை விட
ஊங்கு  - மிகுதி, சிறந்தது 
இல்லை - வேறொன்றும் இல்லை
உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு

முழுப்பொருள்
வாழ்வில் எவ்வளவு சிகரங்களுக்கு சென்றாலும் பணிவாக இருத்தல் வேண்டும். பணிவு தனை ஒரு செல்வமாக போற்றி காக்க வேண்டும். அப்படி காத்தால், அதுவே சிறந்த செல்வமாகும். பணிவை / அடக்கத்தை விட சிறந்த செல்வம் இவ்வுலகில் வேறு இல்லை மனிதருக்கு என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் ஏன் பணிவு தனை ஒரு பொருளுக்கு / செல்வத்திற்கு உவமை படுத்த வேண்டும்? அதனை ஒரு பண்பிற்குக் கூட கூறி இருக்கலாம். ஆனால் கூறவில்லை. ஏன் என்றால் பணிவு உண்மையிலேயே ஒரு செல்வமாகும். உதாரணமாக ஒருவர் பணிவாக இல்லை என்றால் அவரிடம் மக்கள் சேர மாட்டார்கள். அதுவே பணிவாக இருந்தால் மக்கள் அவருடன் இணக்கமாக இருக்க விரும்புவர். பணிவாக இருந்தால் ஒருவரை சுற்றி இருக்கும் மக்கள் செல்வம் பெருகும். மக்கள் செல்வம் விலை மதிக்க முடியாத செல்வம். ஆதலால் தான் மகாத்மா காந்தி போன்றோரால் இந்திய சுதந்திர போராட்டத்தை வழி நடத்த முடிந்தது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.).

மணக்குடவர் உரை
ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அடக்கத்தைப் பொருளாக் காக்க -அடக்க முடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - மக்கட்கு அதனினுஞ் சிறந்து ஆக்கந் தருவது வேறொன்று மில்லை.

உயிர் என்பது வகுப்பொருமை அது இங்கு மக்களுயிரைக் குறித்தது ; அடக்க முடைமையாகிய அறத்தை மேற்கொள்வது அதுவே யாகலின். அறிவற்றதும் பிறவிதொறும் நீங்குவதுமான உடம்பை இயக்குவதும் இன்ப துன்பங்களைத் துய்ப்பதும் உயிரேயாதலின், 'உயிர்க்கு' என்றார்.

மு.வரதராசனார் உரை
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அடக்கமே பெரும் செல்வம்.

பொருள்: அடக்கத்தை பொருளா(க) காக்க -(மக்கள்) அடக்கத்தை(க் காக்க வேண்டிய ஒரு) பொருளாகக் காக்கக் கடவர் ; உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - (மக்கள்) உயிர்க்கு அதனினும் மேற்பட்ட நன்மை இல்லை.

அகலம்: ஆக்கம் - செல்வம். அதனைத் தரும் நன்மையை ஆக்கம் என்றார். ‘மக்கள்’ என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.

கருத்து: ஒருவன் அடக்கத்தை விடாது காக்கக் கடவன்.


Comments

Popular posts from this blog

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

அறிவற்றங் காக்குங் கருவி

கேடில் விழுச்செல்வம் கல்வி