Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி

குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்.
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

மனத்தானாம் - தன்னுடைய மனதால்

மனத்தானாம் - மனத்தான் ஆம் -  தம் மனம் காரணமாக உண்டாம்

மாந்தர்மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.
உணர்ச்சி - உணர்வு; அறிவு மனம்

மாந்தர்க் குணர்ச்சி - மாந்தார்க்கு + உணர்ச்சி - மக்களுக்கு பொது உணர்வு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

இனத்தானாம் இன்னான் - இனத்தான் ஆம் - இவன் இத்தன்மையன்
- இவன் இத்தன்மையன்

இன்னான் - இத்தன்மையன்; துன்பம்செய்பவன்.

எனப்படும் - என்ற

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

எனப்படுஞ் சொல் - எனப்படும்சொல் - என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம். 

முழுப்பொருள்
அறிவு என்பது இயற்கையாக அவரவர் மனதால் உண்டாகும். ஆனால் ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் கூறுவது அவன் சார்ந்து உள்ள மக்களை கொண்டே சொல்லபடும்.  அதாவது அவர் சார்ந்து உள்ள சேர்க்கையை பொருத்தே இருக்கும்.

உதாரணமாக, இயல்பாக ஒரே தன்மையுள்ள மழைநீர் தனை நன்னீர் என்றும் உவர் நீர் என்றும் வேறுபடுத்திச் சொல்லுவார்கள். அதற்கு காரணம் நீர் சேர்ந்துள்ள நிலமே காரணமாகும்.  அதுப்போலவே மக்களும். அவர் அவர் சார்ந்து உள்ள மக்கள்(இனம்) பொருத்தே அது சொல்லப்படுகிறது.

குறிப்பு: இது பிறப்பால் சொல்லப்படும் சமூகம் சாதியின் அடிப்படையால் சொல்லப்படுவது இல்லை. இது அவர் சார்ந்து உள்ள மக்களின் சான்றான்மையை பொருத்ததாகும்.

அதனால் தான் சொல்லுவார்கள் - சேருகிற சேர்கை சரியாக இருந்தா தான் இது (இவன்) சரியா இருக்கும்.

ஆங்கிலத்தில் - Show me your friends, I will tell who you are. உன் நண்பர்களை என்னிடம் அறிமுகம் செய், நீ யார் என்று நான் சொல்கிறேன்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
எந்தச் செயலும் எண்ணத்தால் நடைபெறுகிறது. செய்த செயல்கள் கருமையத்தில் பதிவாகி மீண்டும் மீண்டும் எண்ணங்களாகின்றன. எண்ணங்களும் செயல்களும் அவற்றின் விளைவுகளும் பதிவாகி அதுவே மனிதனிடம் தன்மையாக, ஆளுமைப் பேறாக அமைகின்றது. இதுவே வினைப்பயன் என்னும் நியதி. ஒருவர் பிறந்த பிறகு ஆற்றும் எல்லாச் செயல்களும் பதிவாகக் கொண்ட நிலை ஒன்று. பிறக்கும்போதே பெற்றோர்களிடமிருந்து கருத்தொடராக வந்த பதிவு ஒன்று. இதனை முற்பிறவி வினை என்பார்கள். இந்த இரண்டு வித வினைப்பயனை உடைய உருவமே மனிதன். கருத்தொடர்வினை, இப்பிறவி வினையென்ற இரண்டையும் கூட்டினால் என்ன தொகை வருமோ அதுவேதான் ஒருவருடைய குணநலப்பேறாக (Personality) அமைகின்றது. இந்த கூட்டுத் தன்மைக்கேற்ப அவ்வப்போது ஒருவருக்கு பொருள் மீதும் மக்களோடும் செயல்படும் விருப்பமும் செயலார்வமும் ஏற்படுகின்றது. இதனைத்தான் "உணர்ச்சி" என்று கூறப்படுகிறது. மன நிலைக்கேற்ப உணர்ச்சிகள் அமையும். ஆயினும் ஒருவர் மன உணர்ச்சியின் தன்மைகளைப் பிறர் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ள முடியாது. அவர் குணநலத் தன்மைக்கேற்ற குணநலம் உடையோர்களை விரும்பியும் சார்ந்தும் செயல்புரிந்து வாழ்வார். ஒருவர் எத்தகைய தன்மையுடையோர்களோடு கூடி செயல் புரிகின்றார் வாழ்கிறார் என்ற உண்மை கண்டால் அவர் மனநிலையில் பண்பாட்டில் அறநெறியில் எந்த நிலையில் உள்ளவர் என்று தெரிந்து கொள்ளலாம் என்பதே இக்குறள் கூறும் விளக்கமாகும். 

ஆத்திச்சூடி
சான்றோர் இனத்து இரு
சேரிடம் அறிந்து சேர்
பெரியாரைத் துணைக் கொள்
பையலோடு இணங்கேல்

மேலும் அஷோக் (நன்றி)

ஒப்புமை
சிற்றினச் சேர்க்கையினரை, அவர் மனத்தளவிலே நல்லோராயிருப்பினும் சிற்றினத்தவராகவே உலகு எண்ணும். அதேபோல, நல்லோர் சேர்க்கையிலிருக்கும் ஒருவர் மனத்துக்கண் மாசிருப்பினும் நல்லோராகக் கருதப்படக்கூடும், நல்லோர் சேர்க்கையில் நல்லோராகவே ஆகிவிடுவராதலால்.

நாலடியார் பாடலொன்று இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது.
மனத்தால் மறுவிலரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் – புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால். (நாலடி.180)

காடு தீப்பற்றி எரியும்போது, மணம் வீசும் சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும். அதேபோல, மனதில் ஒரு குற்றம் இல்லாத நல்லவராயினும், அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக, இகழப்படுவார்.

மற்றொரு  நாலடியார் பாடல் இக்கருத்துக்கு மாறாக ஒன்றைச் சொல்லுகிறது. அப்பாடல்:

கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல் தண் சேர்ப்ப !
மனத்தனையர் மக்கள் என்பார். (நாலடி 244)

இப்பாடலின் பொருள் எளிதில் விளங்கக்கூடியதே. கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும்.ஆதலால் மக்கள் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர். தத்தம் மன இயல்பை ஒத்தவராவர். மாசற்ற தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் திரியார். இப்பாடல் சொல்லுவது, இனத்தைச் சாராதது குணம் என்பதாகும். இது என்ன கருத்து முரணாக இருக்கிறதே என்று தோன்றினாலும், இது புரிந்து கொள்ளக்கூடிய முரண்பாடுதான். நாலடியார் ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பல சமணத் துறவிகளால் எழுதப்பட்டது. மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களால் இவை எழுதப்பட்டிருக்கலாம். கருத்து முரணானதாக இருந்தாலும், கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது.

சிறுபஞ்ச மூலத்திலும் (80) இக்கருத்து அழகாகச் சொல்லப்படுகிறது,
தக்கார் வழி கெடாதாகும் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவார் – தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி

இதன் பொருள்: தகுதியுடையவர் வழி மரபு கெடாது, ஆனால் நல்லவர்களல்லாதவர் மரபு கெடும். தீய சேர்க்கையால் பழியும், நல்லவர் சேர்க்கையினால் புகழும் உண்டாகும். அறிவானது ஒருவனது மனத்தளவே உண்டாகும்

”வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம் ஆங்கே
இனம்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனம்தீ தாம் பக்கம் அரிது” (நாலடி.245)

“முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பின்னர் என்ப தினத்தால் அறிக” (பழமொழி.237)

பரிமேலழகர் உரை
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம். 
விளக்கம் (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான் ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் -மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் -ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.

கரணம் கருவி. இயல்பாக ஒரே தன்மையிலுள்ள மழைநீர் நன்னீ ரென்றும் உவர் நீரென்றும் வேறுபடுத்திச் சொல்லப் படுவதற்கு, அது சேர்ந்துள்ள நிலமே கரணியமாவதுபோல், இயல்பாக ஒரே தன்மையரான மாந்தரும் நல்லவரென்றும் தீயவரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு, அவர் சேர்ந்த இனமே கரணிய மென்பது கருத்து.

மணக்குடவர் உரை
மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம். இது பிறரால் பழிக்கப்படுமென்றது. 

மு.வரதராசனார் உரை
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

No comments:

Post a Comment