நோனா உடம்பும் உயிரும்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல், நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.
குறள் 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் 
நாணினை நீக்கி நிறுத்து.
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
*நோனாமை, 1. non-endurance, want of restraint, நோலாமை; 2. envy, grudging, பொறாமை.
*நோல்¹-தல்  To endure, suffer patiently, as hunger; பொறுத்தல். உண்ணாது நோற்பார் பெரியர் (குறள்,160).
*(நோல்) penance, தவம்; 2. fasting, உபவாசம்.
நோனாமை - தவஞ்செய்யாமை; ஆற்றாமை; அழுக்காறு.

நோனா -காதல் தரும் துயரில் வாழும் நான் இத்தனை நாள் பொறுத்துக்கொண்டேன் ஆனால் இனிமேல் பொறுக்கமாட்டாது.

நோனா என்பது அழகான சொல். பொறுக்கமாட்டாத என்பது பொருள். உடம்பும் உயிரும் நோனா. காப்பாற்ற மடல்மட்டுமே உண்டு.

உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

உடம்பும் - இந்த உடம்பும்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உயிரும் - இந்த உயிரும்.

மடலேறுதல் - தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல்

மடலேறும் - மடலூர்-தல் - தான் காதலித்ததலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலானகுதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். 

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று.

நாணினை - நாணம் தனை; வெட்கம் தனை; [பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு).]

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

நீக்கி - விலக்கல்.

நிறுத்துதல் - நேராகநிற்கச்செய்தல்; நிலைநாட்டுதல்; தீர்மானித்தல்; மனத்தை ஒருநிலையில் இருத்துதல்; அமர்த்துதல்; ஆதரித்தல்; சீர்திருத்துதல்; தழுவிக்கொள்ளுதல்; ஒப்புவித்தல்; மேற்செல்லாதிருக்கச்செய்தல்; தள்ளிவைத்தல்; படிக்கும் போதும் பாடும் போதும் உரியவிடங்களில் நிறுத்துதல்; செய்யாதொழித்தல்; அவித்தல்.

நிறுத்து - ஊரில் எல்லா ஊர் மக்கள் முன் தெருவில் தெரிவிக்க செய்வது.

முழுப்பொருள்
நன்றி: SRM
உமக்கு நாணம் எனும் பண்பு உள்ளது, அதனால் மடலேற முடியாது எனத் தோழி கூறத் தலைவன் கூறுகிறான்.

காதல் தரும் துயரை உயிரும் தாங்கவில்லை; உடம்பும் தாங்கவில்லை. என்ன செய்வான்?

இந்த நோயைத் தாங்காத உடம்பும் உயிரும் நாணத்தை ஒரு ஓரமாய்த் தள்ளி நிறுத்திவிட்டு மடலேறுதலைத் துணிந்துவிட்டன என்கிறான்.

நோனா என்பது அழகான சொல். பொறுக்கமாட்டாத என்பது பொருள். உடம்பும் உயிரும் நோனா. காப்பாற்ற மடல்மட்டுமே உண்டு.

பொருள்

”.......................பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறிநாண் அட்டு”  (குறுந் 173:2-3)

“விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாள் மருங்கில் பெருநாண் நீங்கி” (குறுந். 182:1-4)

”அறிவும்நம் அறிவாய்ந்த அடக்கமும் நாணொடு, வறிதாக” (கலி 138:3-4)
“காமம் கைம்மிகச் சிறத்தலின் நாணிழந்து” (அகநா 266:8)

பரிமேலழகர் உரை
நாணுடைய நுமக்கு அது முடியாது,' என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது. நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாதா உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன, நாணினை நீக்கி நிறுத்து.

விளக்கம் 
('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், அதனை விலக்குவதாய நாணினை அகற்றி, செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகு பெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. 'அதுவும் இது பொழுது நீங்கிற்று' என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதான் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற் குறை நேர்தல் நோக்கி.)

மணக்குடவர் உரை
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது

மு.வரதராசனார் உரை
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

சாலமன் பாப்பையா உரை
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

நன்றி: கூடல்
காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி வேறிடத்தே நிறுத்திவிட்டு மடல் ஏறும்.

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - பொறுக்க முடியாத உடம்பும் உயிரும் மடல் ஏறும்

நாணினை நீக்கி நிறுத்து - நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு.

'ஊராரின் மதிப்பில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர். அந்த மதிப்பை இழக்கும் படி உமது நாணத்தை விட்டுவிட்டு உம்மால் மடல் ஏற இயலாது' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'காதல் மிகுதியால் பிரிவுத்துன்பம் மேலிட்டு என் உடலுடன் உயிர் நிற்காது போலிருக்கிறது. அதனால் எனது நாணத்தை தனியே நீக்கி நிறுத்திவிட்டு உயிரும் தூண்ட உயிரும் உடலும் இரண்டுமே சேர்ந்து மடல் ஏறும். இது உறுதி' என்றான் காதலன்.

நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.

நன்றி: தேன் கூடு (ரிஷ்வன்)

காதல்பிரிவில் உயிரும்
காமப்பிரிவில் உடலும்
காதலியைப் பிரிந்து
வாடித்தவிப்பதால்
நாணத்தை நீக்கி
நாணலாய் வளைத்து
மடல் ஏற* எண்ணுகிறது
மனம்.

மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான். தன்னை விரும்பாத பெண்ணுக்காக மடலூர்வேன் என்று தலைவன் சொன்னால், அது கைக்கிளை ஒழுக்கம். மடலூர்ந்து வந்து ஒருத்தியைப் பெறுவது பெருந்திணை ஒழுக்கம். மடலூர்தல் என்பது தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போதும் நிகழ்வது.

குறுந்தொகை
சங்கால இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. இதில் மடலூர்-தல் பற்றி பல பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்களை இங்கு பதிவு செய்து உள்ளேன்.

17. குறிஞ்சி - தலைவன் கூற்று

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே. 
                          -பேரெயின் முறுவலார்.

மா - குதிரை, மடல் - பனை மடல், எருக்கங்கண்ணி - எருக்கம் மாலை, மறுகின் - ஊர் தெருவில், ஆர்க்க - சிரிக்க பிறிதும் ஆகுதல் - உயிர் விடல்

ஓடும் குதிரை என ஓடாத பனைமடல் குதிரையில் ஏறுவர், சூடக்கூடிய மாலை என மலராத மொட்டு எருக்கமாலையை சூடுவார்,அப்படியே வீதியில் தோன்றி பிறரால் நகைக்கபடுவர், அப்படியும் வெற்றி ஆகாதபோது சாகவும் துணிவர், காதல் நோய் கொண்டவர்கள் 

32. குறிஞ்சி - தலைவன் கூற்று 

காலையும் பகலும் கையறு மாலையும் 
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் 
மாவென மடலோடு மறுகில் தோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 
                          -அள்ளூர் நன்முல்லையார்.

காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியலும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின், அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு வருமாயின், அப்போது, பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து, தெருவில் வெளிப்பட்டு, யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும்; அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain